Tuesday, June 5, 2007

நானும் என் அம்மாவும் :

அம்மா என்ற சொல்லின் அர்த்தம் அரசியலாக்கப்படும் தமிழ்நாட்டில் , என் என்ற சொல்லை சேர்க்க வேண்டியிருக்கிறது . இது எனது அம்மாவைப் பற்றியது . அம்மாவிற்கு நேற்று பிறந்த நாள் . கண்டிப்பாக குறித்து வைக்கப்படாவிட்டாலும் , தங்கை தான் நேரம் , நட்சத்திரம் கணித்து கண்டுபிடித்தாள் !!. எனது ராசி மகத்தானது. சிவாஜி வரும் நேரத்தில் , சொந்த செலவில் படம் எடுத்து, வெளியிட சொல்லும் !! கண்டிப்பாக ஜெயிக்கும் என நான் சொல்லும் அணி , கேவலமாக மண்ணைக் கவ்வும் !! அம்மாவும் என்னை போல் தான் போலிருக்கிறது , இல்லாவிடில் எனது அப்பாவை பொன்ற ஒருவருக்கு வாக்கப்பட்டு ,அதை விட கொடுமையாக என்னை பொன்ற ஒரு பையனை பெற்றிருப்பாளா ? இதை நான் என் அம்மாவிடமும் சொல்லியதுண்டு . பதில் என்னையும் எனது அப்பாவையும் விட்டுக்கொடுக்காதவாறே இருக்கும் . !!
. மீனா அப்பா செல்லம் என்பதாலோ என்னவொ ,அம்மாவிற்கு , என் தங்கையய் விட என்னிடம் பாசம் அதிகம் . எனக்கும் , அம்மாவையும் அம்மாவழி சொந்தங்களையுமே பிடிக்கும் !! அம்மா செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் . தங்கத் தட்டில் வைத்து தாங்குவது என்று சொல்வார்களே அது போல , வளர்க்கப்பட்டவர்கள் எனது அம்மா . கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் , ஐம்பது பவுன் நகையும் , ஐம்பதாயிரம் ரொக்கமும் கொடுத்து வாழ வந்தாள் என பாட்டி கூறி கேள்விப்பட்டிருக்கிறேன் . ’கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று சொல்லி வைத்த மூதாதையர்கள் , இப்பொழுது என் கண் முன் வந்தால் , அவர்களை கண்ட இடத்தில் கொளுத்திவிட்டு , அவர்களுக்கு சந்ததியினர் ஏற்படா வண்ணம் , உடலை கூறு கூறாக அறுத்து , எரித்துவிடும் அளவிற்கு கோவம் உள்ளது என்னிடம் !! இதைக் கேட்டுத் தான் , அம்மா அப்பாவின் சகலவித அடக்குமுறைகளையும் அனுபவித்து வந்தாள் , தனது அப்பாவின் சாவிற்கு கூட , ஏதோ பக்கத்து வீட்டுக்காரன் போய் வருவது பொல் , ஒரு மணி நேரம் மட்டுமே போய் வந்தாள் !!
சின்ன வயதில் , நான் செய்யும் தவறுக்கெல்லாம் அம்மாதான் பலிகடா !! தண்ணி அடித்துவிட்டு வந்து என்னை எழுப்புவார் அப்பா . எனக்கு ஏழு முதல் எட்டு வயது வரை இருக்கும். தூங்காவிட்டாலும் , அடிக்கு பயந்து தூங்குவது போல் நடிப்பேன் . எனது அடியும் அம்மாவிற்கு விழுகும் !! . எனது அந்த வயது இயலாமையும் , அம்மாவிற்கெதிரான அப்பாவின் அடக்குமுறையும் தான் , இன்றளவும் நான் என் அப்பாவை ’அப்பா ’ஸ்தானத்தில் வைத்து மதிக்காததின் காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் !!
சின்ன வயதில் , அம்மாவிற்கும் எனக்குமான ஒரு நிகழ்வு இருக்கிறது !! . எனக்கு ஒரு பத்து வயதிருக்கும் என நினைகிறேன் !! . எனக்கு இடியாப்பம் என்றால் உயிர் . அம்மாவிடம் இடியாப்பம் கேட்டேன் . இல்லை என்றார்கள் . அன்று சாயந்திரம் , ’ சர்வேஸ்வரர் கோவிலுக்கு’ச் சென்றொம் . வழி இன்னும் ஞாபகம் இருக்கிறது . செல்லும் வழியில் யாரும் இல்லை . திடிரென்று பின்னால் "தொப்’ என்றொரு சத்தம் . பின்னால் திரும்பிப் பார்த்தால் , நான் நடந்து வந்த வழியில் ஒரு இளநிர் விழுந்திருக்கிறது . சில நொடிகள் தாமதித்திருந்தாலும் , எனது தலையில் தான் விழுந்திருக்கும் , எனது மண்டை பிளந்திருக்கும் !! அன்று , என்னால் அம்மா ரோட்டில் வைத்தே அழுதார்கள் !! அன்று இரவு , எனக்கு சாப்பாடு இடியாப்பம் !!
இன்றளவும் ,எனக்கு தெரிந்து நான் அம்மாவுடன் செய்த தவறு , அம்மாவை என்னவளின் விட்டிற்க்கு அழைத்து சென்றதே . தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வருவான் என நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு தாயுடன் , தனது வருங்காலத்தைப் பற்றி பேசிய ஒரே மகன் நானாகத் தான் இருப்பேன் !! என்ன ஒரு கேவலம் ? அந்த நேரத்தில் அம்மாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? இருந்தாலும் அம்மா சொல்லி வந்தார்கள் , " பிராப்தம் இருந்தால் நடக்கட்டும் !! " .
கல்லூரிக்காலத்தில் எனக்கும் அம்மாவிற்கான தொடர்பு , கடிதம் வாயிலாக மட்டுமே . பத்து பக்க கடிதம் வரும் . அதில் ஒன்பதரை பக்கங்களுக்கு அப்பா அறிவுருத்தியிருப்பார் !! மீதி இருக்கும் அரைப் பக்கத்தில் அம்மாவும் மீனாவும் அன்பை பொழிந்திருப்பார்கள் !! திருநெல்வேலியில் இருக்கும் பொழுது , ஒரு மத்தியான வேளையில் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு , "பொன்னியின் செல்வன் " படித்தது ஞாபகம் இருக்கிறது . அது ஒரு சுகானுபவம் !! ஐந்து பைசாவிற்கு வழியில்லாத பொழுது கிடைத்தது , இன்று ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் பொழுதும் கிடைக்காது !!
அம்மா அற்புதமாக சமைப்பார்கள் . அம்மாவின் கையால் கிடைக்கும் மோர்குழம்பும் , உருளைக்கிழங்கு பொரியலும் கலக்கலாக இருக்கும் !!அதற்காகவே மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவேன் !!இங்கு ஹோட்டலில் சில சமயம் மொர்குழம்பு போடுவார்கள் !! சட்டென்று அம்மாவின் ஞாபகம் வரும். ஆனால் அந்த சுவை வருவதில்லை !!
இஞ்சினியரிங் முடித்து வந்த ஒரு நாள் இரவு , வழக்கம் போல் அப்பாவின் அடிதடி ஆரம்பித்தது . இந்த முறை எனக்கும் விட மனசில்லை , அம்மாவாலும் முடியவில்லை . சட்டென்று கைக்கலப்பாக , "இனி இந்த வீட்டுக்குன்னு ஒரு பைசா தர மாட்டேன் , பிச்சைதான் எடுக்கணும் " என்று அப்பா வாழ்த்த , அம்மாவும் " நாங்க ஏன் பிச்சைதான் எடுக்கணும்? , என் பையன் காப்பாத்துவான் " என்று சொல்ல ,கல்லூரி காலத்து இனிய வாழ்க்கையும் சொகுசும் முடிவுக்கு வந்தது . ஆர்.டி.ஓ ஆபிஸில் வேலைக்குச் சென்றேன் . தினமும் கிடைக்கும் ஐம்பது ரூபாய் , மளிகைச் செலவுக்கும் , வீட்டு வாடகைக்கும் சரியாய் போனது . திடிரென வரும் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணருவேன் .அந்த நேரத்தில் , நானே எதிர்பார்க்காத வகையில் , அம்மா துணி தைத்து கொடுத்தும் , மாவு அரைத்துக்கொடுத்தும் சம்பாதித்தார்கள் !! அந்த இரண்டு மாதங்களும் அம்மா காட்டிய உறுதியும் , சிக்கனமும் தான் நானும் என் தங்கையும் இன்று இந்த நிலைமையில் இருக்க காரணம் .
பின்னர் நான் பிலிப்ஸ் , பஜாஜ் என்று வேலைக்கு சென்றதும் , அம்மாவின் கூட இருக்கும் எனது நேரங்கள் குறைந்தன .நான் சொந்தமாக பைக் வாங்கியதும் அம்மாவின் கண்களில் பெருமிதம் . நன்றாக ஒட்ட கற்றுக் கொண்டதும் , அம்மாவை வைத்து கோவிலுக்கும் , பாட்டிவிட்டிற்கும் கூட்டிச் செல்வேன் .முதன் முதலாக அப்படி கூட்டிச் சென்றது இன்னும் ஞாபகம் இருக்கிறது !! அம்மா பயத்துடனே உட்கார்ந்தார்கள் .பிடித்ததிற்காக அம்மாவின் கை எனது தோளில் இருக்கும் . வளைவுகளிலும் , எதிரே எதாவது வாகனம் வந்தாலோ , அந்த கைப்பிடியின் அழுத்தம் கூடும் .நானும் அதை ரசித்துக்கொண்டே வண்டி ஒட்டுவேன் !!
கலர்டீவி வாங்கி படம் பார்க்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை . வாங்கிக்கொடுத்ததும் , அம்மாவிற்கு ரொம்ப சந்தொசம் . சொந்தக்காரங்களை எல்லாம் வரவழைத்துக் காண்பித்து , ஒரு ’கெட் டு கெதர் ’ நடத்தினாள் !! சமையலறையிலிருந்த படியே சேனல் மாற்றுவதும் , சீரியல் பார்த்துக்கொண்டே சமையல் செய்வதும் , என்று ஒரே கோலாகலம் தான் !!
அம்மாவை பொருத்தவரை எனக்கு ஒரே ஒரு ஆசை தான் . அம்மாவின் சொந்த ஊரான மதுரையில் , அம்மா பெயரில் ஒரு சொந்த வீடு !! கார் ஒன்று வாங்கி , அதில் அம்மா , மீனாவுமாக ஏதாவது ஒரு கோவிலுக்கு பயணம் . அங்கு வைத்து , மொர்குழம்பு சாதம் சாப்பிட வேண்டும் !! என்ன ஒரே ஒரு குறையிருக்கும் ,வண்டியில் சென்றால் கிடைக்கும் அம்மாவின் அந்த தோள்பிடி அழுத்தம் காரில் சென்றால் கிடைக்காது !! பரவாயில்லை.
இந்த ஆசை நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை !!

No comments: