Sunday, June 24, 2007

சிவாஜி :

ரிலிஸ் அன்றே படம் பார்த்துவிட்டேன் . ரஜினி , ஶங்கர் , ஏ வி எம் , ஏ அர் ரஹ்மான் , வைரமுத்து , கே வி ஆனந்த் , தோட்டாதரணி போன்ற திறையுலக ஜாம்பவான்கள் இணைந்த படம் . ஏகத்திற்கும் எதிர்ப்பார்ப்பு ஏகிறியிருக்கிறது என்பதை பத்திரிக்கை வாயிலாக அறிவேன் . டிக்கட் முன்பதிவு செய்ய போகும் பொழுதே அது உறுதியாக தெரிந்துவிட்டது . பத்து மணிக்கு ஆரம்பித்த முன்பதிற்கு அரை மணி நேரம் தாமதமாக போனதால் , எனக்கு முன்னால் கிட்டத்தட்ட ௪௫ பேர் . மதிய ஶோவிற்கான டிக்கட் தான் கிடைத்தது . தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே , முந்தியடித்து டிக்கட் வாங்குபவர்களுக்கு சராமரியாக வசவுகளும் , கெட்ட வார்த்தைப் பிரயோகங்களும் !!

முன்பதிவு செய்துவிட்டு வெளியே வரும் பொழுது எனக்கு இருந்த மனநிலை விவரிக்க முடியாதது . இரண்டு வருடங்களுக்குப் பின் வரும் தலைவரின் படத்தை முதல் நாளே பார்க்கப் போகிறொம் என்ற உற்சாக உந்துதல் . புதன் இரவும் , வியாழனும் சிவாஜி பற்றிய சிந்தனை தான் . ஆபிஸுற்கு செல்லும் பொழுது கூட , டிக்கடினை பத்திரமாக சட்டைப் பையில் வைத்துக் கொண்டே திரிந்தேன் !!வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய துணி துவைத்தல் , ரூம் க்ளின் செய்தல் பொன்றவை வியாழன் இரவே முடிந்துவிட்டது .

வெள்ளிக்கிழமை மதியம் ௧௨ மணிக்கெல்லாம் தியேட்டருக்குச் சென்றுவிட்டேன் . படம் பார்த்துவிட்டு வருபவர்களிடம் படம் எப்படி ? என்று கேட்கக் கூடாது என்று நினைத்தே போனேன் . ஒருவேளை சரியில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை . ஆனால் ஆர்வக்கோளாறால் , வழியில் ஒரு காபி ஶாப்பில் பார்த்த இருவரிடமும் படம் பற்றிக் கேட்டு தெரிந்துகொண்டேன் . படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன் !!

ரஜினி படத்தில் முக்கியமாக இருப்பது அவரது இன்ட்ரோ. இதில் அமைதியாகத் திரும்புகிறார் . மற்ற அனைவரின் இன்ட்ரோவும் அப்படியே இருப்பது அழகு . படத்தில் பளிச் ரஜினி . சுஜாதா கூறியது போல் முதல் பாதியில் விழுகிறார் . இரண்டாம் பாதியில் எழுகிறார் . முதற்பாதியில் காமடியும் , இரண்டாம் பாதியில் ஆக்ஶனுமாக அமர்க்களப் படுத்தியிருக்கிறார் .. ’பல்லெலக்கா ’ பாடலில் சில சமயங்களில் சிரித்துக் கொண்டும் , சில சமயத்தில் ஆட முடியாமலும் ஆடி கலக்கியிருக்கிறார் . ஏர்ப்போர்டில் இருந்து அறிமுகமாகும் விவேகின் டைமிங் காமடி கலக்கல் . ஆனால் படம் முழுக்கவே அவர் ரஜினியுடன் வருவதும் , ரஜினியை விட சில காட்சிகளில் அழகாய் இருப்பதும் சில சமயங்களில் எரிச்சலைத் தருகிறது. ’ சிங்கம் சிங்கிளா தான் வரணும் ’ .

மணிவண்ணன் , சிவாவின் வடிவுக்கரசி , ரகுவரன் இன்னும் சிற்சில பேர் படத்தில் இருக்கிறார்கள் ! ஸ்ரேயா அழகு . நடித்திருக்கலாம் !! பிரச்சனைக்குள் வருவதும் , காதலியின் வீட்டில் காமடியுமாக படம் இரட்டைத் தண்டவாளத்தில் செல்கிறது . நச் என்ற இன்டர்வல் .

சங்கரின் படத்தில் எதாவது மெஸெஜ் இருக்கும் . இதில் கல்விக்காக வந்து , அப்படியே கருப்புப் பணம் என்று படம் ட்ராக் மாறுகிறது . அதுவும் நன்றாகத் தான் இருக்கிறது . முதல் காட்சியில் ரஜினி ஜெயிலுக்கு வரும் பொழுது , கூடியிருக்கும் மக்களின் அழுகுரலையும் , போராட்டத்தினையும் நியாயப்படுத்தும் அளவிற்கு படத்தில் பாமரனுக்கு உதவுவது போல் எதாவது காட்சி வைத்திருக்கலாம் . சிவாஜி ஹாஸ்பிடல் , யுனிவர்சிட்டி , ஹாஸ்பிடல் என்று சொல்வதோடு முடித்துவிடுகிறார்கள் .

படத்தில் வரும் ஆக்ஶன் காட்சிகளும் , பாடல்களும் இது ஶங்கர் படம் என்று சொல்கின்றன .படத்தின் க்ளைமாக்ஸில் வரும் மொட்டை பாஸ் கலக்கல் . இன்னும் கொஞ்ச காலம் இதுவே பேச்சாயிருக்கும் .

ரஜினியின் சிரசில் மற்றொரு மணிமகுடம் !!

No comments: