Thursday, October 4, 2007

நினைக்காதிருக்க வேண்டிய நட்பு :

பள்ளிக்காலத்தில் எனக்கென்று சில நண்பர்கள் இருந்தார்கள் . குமாரசாமி, குமார் , அண்ணாமலை, முத்துப்பிரகாஶ் , ஸ்டிபன் போன்றோர் . இவர்களில்லாமல் நான் எங்கும் செல்வதில்லை . அண்ணாமலை எனக்கு நட்பினை போதித்தான் . ஸ்டீபன் பெயிலாகியதால் , என்னுடன் கூட வர இயலவில்லை . குமாரசாமி எனது ’குடி’த்தனத்தின் ஆசான் . முத்துப்பிரகாஶ் எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை . குமாரை நான் கடைசியாக கண்டது அவனது ப்ளாஸ்டிக் கல்லூரியில் . இவ்வாறாக எனது பள்ளிக்கால தொடர்புகள் , பி எஸ் என் னலின் விரிவாக்கம் போல் பட்டும் படாமலும் இருக்கிறது . நான் கூற வந்த கூடாதிருந்திருக்க வேண்டிய நட்பு எனது கல்லூரிக் காலத்தானது .

கல்லூரிக்கு வந்தது முதலே நான் மிகுந்த கடுப்பும் , வெறுப்பும் கொண்டிருந்தேன் . நண்பர்களைப் பிரிந்ததும் , படித்த கல்லூரியினை விட்டதும், என்னவளை பார்க்க இயலாத இயலாமையும் எனக்குள் ஆறாத ரணமாகியிருந்தன .

கல்லூரியில் அறிமுகமானதும் சில வாரங்கள் கழித்து , " பேட்ஸ் " என்ற எங்களது கூட்டம் உருவாகியது . ஒன்றான மனநிலை கொண்ட அனைவரும் ஒருமித்து இருந்து , வழக்குண்டாக்கி , ’ஓட்டி ’ வாழ்ந்ததால் , இந்த பெயர் . இன்றும் ,நான் எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனையாகச் சொல்வதென்றால் , அது எனது இந்த நட்பு வட்டாரமே!! . கவலையென்ற ஒன்றிறியாத , இருந்தாலும் காட்டிக்கொள்ளாத , வரும் இடரினையும் களிப்பாக்கி வென்று காணும் கூட்டம் , எனது நண்பர் கூட்டம் !!!

நாங்கள் மாதம் முதல் தேதிகளில் வாழ்வாங்கு இருந்ததும் உண்டு , மாதக்கடைசிகளில் வாழ்ந்து கெட்டதும் உண்டு . காதல் வெற்றிகளில் களிப்புற்றிருந்ததும் உண்டு , தோல்விகளில் அதனையும் வென்றிருந்ததும் உண்டு. ஒருவனின் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் வகையில் கொண்டாடியதும் உண்டு , காசில்லாது டீக்கடையில் அக்கவுண்ட்டில் வாங்கிய பிரட்டாலும் , டீயினாலும் அதனை சிறப்பித்ததும் உண்டு !!
ஒன்றாக இருந்தாலும் எங்களுக்குள் அவ்வப்பொழுது வேற்றுமைகள் இருக்கும் . தான் வாங்கிய விகடனை மற்றவன் படிப்பதில் ஆரம்பித்து , மற்றவனுக்கு முடி வெட்டி விளையாடும் அளவிற்கு சென்று , தனக்குப் பிடிக்காத பெண்ணிணை மற்றவன் விரும்புகிறானே !! , என்றளவிற்கு பிரச்சனைகள் வந்தாலும் நாங்கள் என்றும் மற்றவர் முன் விட்டுக் கொடுத்ததில்லை , இனியும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை .

இப்படி அனைவரும் ஒன்றாக இருந்த வேளையில் எனக்கு மட்டும் ஒருவன் / இருவர் மேல் தனி பிரியம் . ஏன் என்று தெரியவில்லை , எப்படி என்று தெரியவில்லை . தானாக மற்றவன் மேல் ஒரு வித தனி பிரியம் . அவன் மேல் ஒரு வித தனிப் பற்றுதல் . அவனுக்காக , அல்லது அவனுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஏதேதோ செய்த மனப்பிரயாசம் . இப்பொழுது நினைத்தால் , கேவலமாக இருக்கிறது . தன்னை உதாசினப்படுத்திய காதலியின் பின்னால் அலைவதையும் விட கொடுமையானதாகத் தோன்றுகிறது .

எனினும் வேலைக்காக வந்தேனோ அதோ விதிவசத்தால் வந்தேனோ , வெளிநாட்டுக்கு வந்தவுடன் , அந்த " உறவின் " தாக்கம் மெல்ல மெல்ல மட்டுப்பட தொடங்கியுள்ளது . அதனையே நானும் விரும்புகிறேன் . சில நேரங்களில் , குடும்பம் , நட்பு இதுயெல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு , சில வருடங்கள் தனிமையில் , மாதாமாதம் வீட்டிற்கு மட்டும் பணம் அனுப்பிக் கொண்டு வாழ்ந்தால் என்ன என்றும் தோன்றுகிறது . பிணைத்திருக்கும் பாசக் கயிறுகள் யாவற்றையும் அறுத்தேறிந்துவிட்டு வெளியேற வேண்டும் எனவும் தோன்றுகிறது . ஆனால் எனக்குத் தெரியும் , என்னால் இது மட்டும் கண்டிப்பாக முடியாதேன்பதை.மீண்டும் சந்திக்கும் பொழுதோ , சந்தித்தப்பின் கட்டித்தழுவும் அந்த வேளையிலோ , ஏற்கனவே மதில் மேல் பூனையாக இருக்கும் இந்த மனம் , அப்பக்கம் சாய்ந்துவிடுமோ என பயமாயிருக்கிறது . என்மீது எனக்கே பயமாயிருக்கிறதேன்பது மட்டும் உண்மை .

நாம் சிலரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில் , அவர்களும் நம்மைப் பற்றி நினைப்பார்களா என்றேண்ணிப் பார்க்கிறது மனம் . அது தேவையில்லாதது என்று மற்றோர் மனம் சொல்கிறது . எது எப்படியிருந்தாலும் , நான் நானாக இருப்பதினை விட மேலானது வேறோன்றும் இல்லை என்பதை நம்புகிறேன்.

எஞ்சியிருக்கும் காலம் முழுதும் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன் !!

மீண்டும் வருகிறேன் . !!!

அம்முவாகிய நான் :

அம்முவாகிய நான் படம் பார்த்தேன் . தவிர்க்கவே முடியாமல் தியாகராஜனின் நினைவு வந்தது. அந்தளவு ஆர்ப்பாட்டம் அப்பெயரால்!! கதையும் ஓரளவு , அவன் ’விரும்பும் ’ துறையினைப் பற்றியதாக இருப்பது தற்செயல் !

அழகான , அமைதியான படம் என்பது படம் ஆரம்பித்த , சில நிமிடங்களிலேயே தெரிந்துவிடுகிறது . குடும்ப சூழ்நிலை காரணமாகவே , இத்தொழிலுக்கு வருவதாக பல படங்களில் காட்டிவிட்டதால் , விரும்பி இத்தொழிலுக்கு வருவதாக காட்டியிருப்பது புதிது .

குழந்தையினை வாங்கும் பொழுது, பின்னால் பழைய பேப்பர் வியாபாரம் நடப்பது போல் காட்டியிருப்பது போன்ற நச் சீன்கள் படத்தில் ஏராளம் . " நானும் தான் வரிசைல நின்னேன் , என்னை விளையாட்டுல சேர்த்துக்கல்ல " என்று குழந்தை புலம்புதல் , வியாதி வந்து காணாமல் போகும் ராஜஸ்ரி , கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் , புடவையினை அவிழ்த்து விட்டு , "இதுதான் ப்ரியா இருக்கு " என்று ஒரு தொழில்க்காரிக்கான நேர்த்தியினுடன் கூறுதல் , என படத்தின் பல சீன்கள் இயக்குனரின் திறமையினை காட்டுகிறது .

வசனங்களும் பளீச்சிடுகின்றன . " காசு குடுத்துருக்கேல்ல , பிடிக்காம போகுமா ? " என்றும் , " ரைட்டரா , ஓஓ அந்த மாதிரி ரைட்டரா ? " என்னும் பொழுதும் , " அங்க தப்பில்ல , இங்க தப்பு " என்னும் பொழுதும் ,அவை திரைக்காட்சிக்கு வழு சேர்க்கின்றன .

பாரதியின் நடிப்பு அற்புதம் . குறிப்பாக கல்யாணத்தின் பொழுது காட்டும் அந்த கண்ஜாடை !! கணவனின் ரகசிய பரிசைக் காணும் ஆவலோடு கூடிய நடை , முதலில் பார்த்திபனைப் பார்க்கும் பொழுது காட்டும் அதட்டல் குறும்பு என படம் முழுக்க பாரதியாட்டம் தான் !!

பார்த்திபன் டைப் வசனங்களும் உண்டு , சில இடத்தில் மட்டும் . அதிரடியில்லாத இசையும் , வசனமும் , பாரதியின் யதார்த்தமான நடிப்பும் கண்டிப்பாக மீண்டும் ஒரு தடவை பார்க்கத் தூண்டும் .

அற்புதமான , அமைதியான படம் .

மீண்டும் வருகிறேன் !!!