Sunday, September 9, 2007

ஜமீலா :

ஆனந்தவிகடனும் குமுதமும் மட்டுமே தமிழ் ’இலக்கியங்கள் ’ என்ற எனது நீண்ட கால எண்ணத்தினை தகர்த்தேறிந்து விட்டது வெண்மணி அனுப்பி வைத்த புத்தகங்கள் . மூன்று ருஶ்ய நாவல்களும் , கவிதைத் தொகுப்பும் , இன்னும் சிலவும் எனது " முதல் லைப்ப்ரரி"யினை ஆரம்பித்திருக்கின்றன .

அவ்வகையில் நான் முதலில் ஆரம்பித்தது " உண்மை மனிதனின் கதை " . அதைப் பற்றி பின்னால் எழுதுகிறேன் . அடுத்து படித்தது " ஜமீலா " . கதை மிகவும் பாதிக்கிறது . ஜமீலாவும், தானியாரும் , கிச்சனே பாலாவும் இன்னும் சில நாட்கள் என்னைத் விடாது துரத்தப் போகிறார்கள் என்பது திண்ணம் .

ஒருவரிக் கதை . போருக்குச் சென்றுவிட்ட கணவன் . அவனது அன்புக்காகவும் ஆதரவிற்காகவும் ஏங்கும் மனைவி . கடிதத்தில் கூட "பின்குறிப்பாக " மட்டுமே மனைவியின் நலம் விசாரிக்கும் கணவன் . ஒவியக்கார சிறுவயது கொழுந்தன் . விட்டேந்தியாக திரியும் தனியார் . இசையால் தானியாருக்கும் ஜமீலாவுக்குமான பற்றுதல் . இதுதான் கதை . ஆனால் புத்தகத்திலும் திரைகதையின் தாக்கத்தினை கொண்டுவருதல் சாத்தியமே என நீருபித்திருக்கிறார் ஆசிரியர் .

ஒரு ஓவியத்தில் இருந்து ஆரம்பித்து , அங்கிருந்தே கதைக்குச் சென்று , கடைசியாக அதிலேயே கதையினை நிறைவு செய்திருக்கும் ஆசிரியரின் பாங்கு அற்புதம் . கதையின் சில பகுதிகளை திரைக்காட்சியாக நினைத்தாலே புல்லரிக்கிறது . சில பகுதிகளில் ஆழ்மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடு .....

அண்ணி ஜமீலாவிடம் முரட்டுத்தனமாக நடக்கும் உஸ்மோனை எதிர்த்து ஒண்ணும் செய்யமுடியாமல் தவிக்கும் சிறுவனின் உள்ளக்குமுறல் , அதிக பளுவுள்ள மூட்டையினை தானியாரைத் தூக்கச் செய்த ஜமீலாவின் மற்றும் சிறுவனின் குற்றவுணர்ச்சி , ஸ்தெப்பிக் காடுகளில் தானியாரின் பாட்டு , பின்னர் ஜமீலாவுக்கும் தானியாருக்குமான நெருக்கம் , அவர்களுக்கிடையேயான பற்றுதல் குறித்த சிறுவனின் எண்ணவோட்டம் , அவனது ஓவியத்தினை ஜமீலா ரகசியமாக வாங்கி வைத்துக்கொள்வது , கணவனிடமிருந்து வந்த கடிதத்தினை ஜமீலா படிப்பதை தனியார் பார்ப்பது என கதையின் அனைத்துப் பாகங்களும் அற்புதமோ அற்புதம் . ரஶ்யாவின் ஸ்தெப்பிக் காடுகளுக்கும் , பாறைக் குன்றுக்கும் போய் வரவேண்டும் போல் உண்மையில் தோன்றுகிறது .

இக்கதையினை திரைப்படமாக எடுக்க யார் சரி என யோசித்துப் பார்த்தேன் . எஸ் ஜே சூரியாவிடம் கொடுத்தால் , பக்காவான மலையாள நீலப்படம் ரெடியாகிவிடும் . மணிரத்னம் , ஶங்கர் போன்றோர் கதையின் ஆழத்தினை சிதைத்துவிடுவார்களோ என பயமாய் இருக்கிறது . பாரதிராஜாவிடம் கொடுக்கலாம் . பதினாரு வயதினேலே , முதல் மரியாதையய்யும் மிஞ்சக் கூடிய காவியம் கிடைக்கும் .

பார்க்கலாம் .

மீண்டும் வருகிறேன் !!

காத்திருப்பு :

எத்தனையோ விஶயங்களுக்காக காத்திருக்கிறோம் . எதற்காக , என்னவென்று தெரியாமலே சில , தெரிந்து தவிர்க்க விரும்பியும் இயலாமலும் சில , வேண்டியிருந்த காத்திருப்புகளும் சில . இந்த வாரம் எனது நண்பன் ஒருவன் இந்தியா திரும்புகிறான் , விடுமுறையில் . அவனை வழியனுப்ப வேண்டி ஏர்போர்ட்டில் காத்திருந்தேன் . அப்பொழுது தோன்றியது , வாழ்வில் எத்தனை முறை காத்திருந்திருக்கிறேன் ? எனது மறக்க முடியாத காத்திருப்புகள் இவை .

எனது இதுநாள்வரை வாழ்வில் எத்தனையோ விஶயங்களுக்காக காத்திருந்திருக்கிறேன் . சிலவற்றை மறக்க வேண்டும் எனவும் , சிலவற்றை என்றேன்றும் நினைத்திருக்க வேண்டும் எனவும் எப்பொழுதும் நினைத்திருப்பேன் . தவிர்க்கவே முடியாமல் நான் மறக்க நினைத்த காத்திருப்புகளே என் நினைவில் முதலில் தோன்றுகின்றன .

இஞ்சினியரிங் முடித்த கையோடு , ஆர் . டீ . ஓ ஆபிஸில் வேலையில் இருந்த பொழுது , தினப்படி எனது சம்பளம் ஐம்பது ரூபாய் . அதனை தரும் பொழுது , சொல்லி வைத்தாற் போல் , ஆபிஸர் கையில் சில்லறை இருக்காது . சில்லறை மாற்றி வருகிறேன் என்று சொல்லி விட்டு , அருகில் இருக்கும் பாருக்குச் சென்று , சிறிது நேரம் கழித்து திரும்புவர் எனது மாமாவும் அந்த ஆபிஸரும் . அந்த அரை மணி நேர காத்திருப்பு என்னால் இனி எப்பொழுதும் மறக்க முடியாதவை . பாக்கெட்டில் ஐந்து பைசா இருக்காது . அந்த நேரத்தில் , சிகரட் அடித்துக் கொண்டு , புகை விட்டுத் திரியும் ஆட்கள் என்னைக் கடந்து சென்றால் , அவர்கள் வம்சம் முழுவதுக்குமாய் திட்டுவேன் . காசில்லாது இருக்கையில் , புகையும் சிகரெட்டுடனும் , காற்றில் பரவ விடும் அந்த புகையின் வாசத்தையும் நுகரும் , எனக்கு அளவிற்கு மீறிய எரிச்சல் வரும் . அக்காத்திருப்பு என்னால் மறக்க முடியாது .

பிரிவுகள் சில சமயம் சந்தோசப் படவும் , சில சமயங்களில் வேதனைப் படவும் வைக்கின்றன . எனது அடுத்த மறக்க முடியாத காத்திருப்பும் மதுரையில் தான் . நண்பர்களைப் பிரிந்து , மதுரையில் இருந்த நேரம் . பிலிப்ஸில் வேலை . அடுத்த நாள் எனக்கு திருச்சி செல்ல வேண்டியிருந்தது . அப்பொழுது பார்த்து , பிரசன்னாவும் , பாலாஜியும் சிவகாசிக்கு ஒரு வேலை விஶயமாக வருவதாக கூறியிருந்தார்கள் . காலையில் நான்கு மணிக்கெல்லாம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டில் காத்திருந்தேன். அவர்கள் பஸ் எதேச்சையாக நாலரைக்கு வரும் எனக் கூறியிருந்தார்கள் . அவர்களை தொடர்பு கொள்ளவும் வழியில்லை . கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் காத்திருந்துவிட்டு , ஐந்தரைக்கு பஸ் ஏறினேன் . இல்லாவிடில் எனது திருச்சி டீலரை பார்க்க முடியாமல் போய் விடும். ஆதலால் மனசே இல்லாமல் பஸ் ஏறினேன் . பஸ் பேருந்து நிலைய வளைவினைக் கூடத் தாண்டியிருக்காது . போனில் பிரசன்னா . " மதுரை மாட்டுத்தாவணில இருந்து பேசுறேன் , மச்சி " என்றான் . ஒரு வருடம் பார்க்காமல் இருந்த நண்பர்களை , ஒரு ஐந்து நிமிட காத்திருப்பில் தவற விட்டிருக்கிறேன் !!! தாங்க முடியாத கோபத்தினூடும் , வருத்ததினூடும் பயணத்தைத் தொடர்ந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது . !!

அதே போல் தான் , சென்னையிலும். பிலிப்ஸில் இருக்கும் எனது மானேஜருடன் சண்டை . ராஜினாமா செய்யச் சொன்னார் . " இவன் என்ன சொல்லி , நாம் கேட்பது ? " என்ற வைராக்கியத்தில் நேரே ஹச் ஆர் சென்று எனது ராஜினாமா கடிதம் கொடுத்தேன் . கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார்கள் . அந்த காத்திருப்பில் மனதில் நிறைய எண்ணங்கள் . அடுத்ததாக என்ன ? என்பது முக்கியமானது . உண்மையில் அப்பொழுது என்னால் காத்திருக்கவே முடியவில்லை . மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வரவேண்டுமா ? என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது . எந்நேரமும் அழுதுவிடுவேன் என்ற நிலை . வேறெதுவும் தோன்றவில்லை . சிவாவுக்கு போன் பண்ணியதும் , அவன் அதற்குள் ஐந்தாறு தடவை போன் செய்து அசுவாசப்படுத்தியதும் , மறக்க கூடாதவை . மறந்தால் நான் மனிதனில்லை .

இனிமையான காத்திருப்புகளும் உண்டு . பள்ளியில் படிக்கும் பொழுது , நானும் குமாரசாமியும் குளக்கரையில் காத்திருப்போம் . அதுவும் இரவு எட்டு மணி வாக்கில் . ஆளரவம் இல்லாத அந்த கும்மிருட்டில் , எங்களுக்கான சிகரட்டுடன் காத்திருந்து கதை பேசித் திரிவோம் . சிறிது நேரத்தில் குமார் வருவான் . கையில் பாட்டிலுடன் . பின்னர் என்ன , கூத்தும் கச்சேரியும் தான் . இரவு நேரத்தில் , எங்களுக்கான சிந்தனைகளுடனும் , தனிமையுடனும் , மல்லாந்து படுத்து, வானத்து நட்சத்திரங்களை கணக்கெடுக்கும் அந்த இரவு நேர காத்திருப்பு மனதிற்கு அமைதியைத் தந்ததாகவே நினைக்கிறேன் . !!

என்னவளுக்காக காத்திருக்கும் நேரங்கள் அற்புதமானவை . சில நேரங்களில் அதனைப் பற்றி மீண்டும் நினைக்கும் பொழுது , நானா அப்படி ? என்று சிரிப்பாகவும் , மனதிற்கு சுகமாகவும் இருக்கிறது . அதிகாலை ஏழு மணி பஸ்ஸிற்காக , அதற்கு முந்தைய பஸ்ஸினைப் பிடித்து , இடலக்குடி பஸ் ஸ்டாப்பில் இறங்கி , காத்திருப்பேன் . எட்டு மணி வாக்கில் தரிசனம் கிடைக்கும் . அந்த சில நேரங்களில் , எனது எண்ணவோட்டங்களை வார்த்தைகளில் வடித்தல் இயலாதது . அதனைப் பற்றி நினைக்கும் இந்த நேரத்திலும் , கிட்டத்தட்ட அதே மனநிலைமையில் இருப்பதாகவும் , அதே அதிர்வுகளையும் உணர்கிறேன் . கையில் பையுடனும் , வழித்துச் சீவப்பட்ட முடியுடனும் , நெற்றியில் மெல்லிதாக தீட்டப்பட்ட குங்குமத்துடனும் , சிரித்த முகமாகவும் இருக்கும் என்னையே மீண்டும் ஒரு தடவை பார்க்கவேண்டும் போல் உள்ளது . அதே சூழ்நிலையில் மீண்டும் ஒரு தடவையாவது , அதே அதிர்வினை அனுபவிக்கவேண்டும் போல் உள்ளது .

மீனாவின் பேச்சுப் போட்டிக்காக காத்திருந்து , அவள் பரிசு வாங்கும் வரை பள்ளியின் தெருவொர மேடைக்கருகில் காத்திருந்தது , கல்லூரியிலும் லீவ் முடிந்த நான் சீக்கிரமே திரும்பிவிட , மற்றவர்களின் வருகைக்காக நானும் பிரசன்னாவும் காத்திருந்தது , சிவாவின் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் அண்ணனின் செக்குக்காக , ஈஓபி பேங்கில் காத்திருந்தது , பெங்களூரில் தியாகராஜனுக்காக காத்திருந்தது , " தேவன் " பட அருண்பாண்டியன் போல் வந்தவனை வரவேற்றது , அண்ணாமலைக்காக ரெயில்வே ஸ்டேஶனில் காத்திருந்தது என காத்திருப்பின் சுவாரஸ்ய நினைவுகளுக்கு பஞ்சமேயில்லை . !!

இந்தியா திரும்ப வேண்டி , ஏர்போர்ட்டில் ’இமிக்ரேஶன் ’ முடித்து காத்திருக்கும் அந்த சில மணி நேரங்களுக்காக காத்திருக்கிறேன் . !!!

மீண்டும் வருகிறேன் . !!

லேபர் கேம்ப்புகள்

தூய்மைக்கும் , கேளிக்கைக்கும் பெயர் போன துபாய் நகரம் , லேபர் கேம்ப்புகளுக்கும் பெயர் போனது என்பதை சில நாட்களுக்கு முன் தான் அறிந்தேன் . அபுதாபி லேபர் கேம்ப்புகளுக்கும் நிறைய தடவை சென்றிருக்கிறேன் . ஆனால் அவை பரவாயில்லை ரகம் . துபாயின் மற்றொரு முகத்தை யாரும் அறியா வண்ணம் மறைத்து வைத்திருக்கிறார்களோ என்று கூட தோன்றுகிறது .

உலகில் உள்ள மற்ற பணக்கார நாடுகளேல்லாம் வளர்ந்துவிட்டு , அடுத்ததாக யாரைக் கவிழ்க்கலாம் என திட்டம் தீட்டிக் கொண்டிருக்க , தன்னிடம் உள்ள எண்ணை வளத்தை மட்டுமே கொண்டு , வளர்ந்து வரும் நாடு யு. ஏ . இ . இப்பொழுது உலகில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் பாதிக்கும் மேலாக துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது . உலகில் உள்ள கட்டுமானப் பணிகளுக்கான கிரேன்களில் கிட்டத்தட்ட அறுபது சதவிகிதத்திற்கும் மேல் இங்கு உள்ளது என்றால் , இங்கு நடைபேறும் வளர்ச்சிப் பணிகளையும் , அதற்காக செய்யப் பட்டிருக்கும் முதலீட்டைப் பற்றியும் சுமாராக ஒரு எண்ணத்திற்கு வரலாம் !! வளர்ந்து வரும் நாட்டின் திட்டப் பணிகளுக்கு , உலகளாவிய அங்கிகாரம் பெற வேண்டி , உலகிலேயே அதிக உயரமுள்ள டவர் கட்டுவது , வெப்ப பூமியான இங்கு, குளிர்ப் பிரதேச சூழல் உண்டாக்குவது என அரசாங்கம் , பலதரப்பட்ட வேலைகளில் இறங்கியுள்ளது .

இக்கட்டடப் பணிக்களுக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் பெரும்பாலவர்கள் இந்தியா , பாகிஸ்தான் , பங்களாதேஶ் போன்ற தெற்காசிய நாடுகளைச் சார்ந்தவர்கள் . சீனர்களும் பெருமளவில் உண்டு ! அனைவரும் கேம்ப்புகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள் . வாரம் ஆறு நாட்கள் பணியும் , ஒரு நாள் விடுமுறையும் இருக்கும் . அதுவும் ஊரில் இருந்து தள்ளியிருப்பதால் , கம்பனி செலவிலேயே , நகரின் ஏதாவதொரு முக்கியச் சந்திப்பில் இறக்கி விட்டு , மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து அழைத்துச் செல்வர் . அதாவது மந்தை ஆடுகளைப் போல !!

இந்த " கன்ஸ்ட்ரக்ஶன் பூம் " , தத்தமது தொழிலுக்கு ஏற்றவாறு உபயோகித்துக் கொள்வது என்னைப் போன்ற , எலக்ட்ரிக்கல் கம்பனிகளில் " கையில் பையும் , வாயில் பொய்யுமாக " திரிபவர்களின் பணி .இப்பணி விஶயமாக புதியதாய் கட்டப் பட்டுக் கொண்டிருந்த ஒரு லேபர் கேம்புக்குச் சென்ற பொழுது தான் , கேம்ப்களின் உண்மை நிலவரம் அறிந்தேன் .

ஒரு பெரிய ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை . ௩0 அடிக்கு ௩ அடி ஒரு ரூம் . அதில் " டபுள் காட் " முறையில் கிட்டத்தட்ட இருபத்திஐந்து பேர் . ஒரே ரூம் . காமன் டாய்லட் . முன்னமே சொல்லியிருந்தது பொல , வெள்ளிக்கிழமை மட்டும் தான் விடுமுறை . அன்று தான் துணி துவைத்தல் , இதர அத்தியாவசிய பணிகள் . சில சமயங்களில் அதுவும் ஓவர் டைம் என்ற பெயரில் காசாக்கப் படும் . சிலர் ஒன்று கூடி காசு போட்டு, டீவி வாங்கியுள்ளனர் . மற்றவர்கள் அதற்கான கேபிள் செட் ஆப் !!

சத்வா மற்றும் சோலாபூரில் இருக்கும் லேபர் கேம்ப்புகளில் கேம்ப் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு கடை . மதியம் சாப்பாட்டிற்கு காலை பதினோரு மணிக்கே காத்திருந்தால் தான் சாப்பாடு கிடைக்கும் போலிருக்கிறது . அதுவும் ஒரு பங்களாதேசிக் கடை . அதனால் நாம் ஆசைப்படும் இட்லியும் , தோசையும் கொஞ்சம் கஶ்டம் தான் . !!

கட்டப் படப் போகும் புதிய லேபர் கேம்ப் , தற்பொழுது உள்ளதினைப் போலவே திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டதால் , அதன் உள்ளே சென்று பார்த்தேன் . கொடுமை . குமட்டும் வாசனை . பிலிப்பிணிகள் இருப்பதனலோ என்னவோ சகிக்க முடியாத வாசனை !! .இருக்கும் இருபத்திஐந்து பேருக்கும் துணி காயப்போட ஒரே இடம் . அனைவரது துணியும் அங்கு காய்ந்து கொண்டிருந்தன !!! . அங்கும் ஒரு தமிழன் இருந்தான் . பெயர் அய்யனார் . திருச்சிப் பக்கம் எதோ ஏரியா என்று சொன்னான் . பேசிக்கொண்டிருந்தோம் . நல்ல பையன் . காதலிக்கிறானாம் . கிட்டத்தட்ட சம்பாதிப்பதில் பாதிக்கும் மேலாக உண்டிக் காலுக்கே சரியாய் போய் விடுகிறது என்றான் . இந்தியாவில் இருக்கும் ஏஜன்ட் மூலமாக தான் , தன்னைப் போல பலரும் ஏமாற்றுப் பட்டுவிட்டதாகக் கூறினான் . இரண்டோரு வாரத்தில் இந்தியா செல்ல லீவ் சாங்கஶன் ஆகிவிட்டதாகவும் , போனால் திரும்ப வருவதில்லை எனவும் கூறினான் .

வழக்கம் போல , காண்டிராக்டர் வந்தார் . " லேபர் காம்ப் தான் ஸார் . அதனால இருக்கிறதுல சீப்பா இருக்குறத குடுங்க " என்றார் . சரி என்று தலையாட்டிவிட்டுத் திரும்பினேன் !!. வேறேன்ன செய்ய முடியும் என்னால் ? வரும் பொழுது கண்ட காட்சி என்னை உலுக்கி விட்டது . பால்கனி மாதிரி இருக்கும் இடத்தில் இருந்து ஒருவன் பேசிக்கொண்டிருந்தான் . வீட்டிற்காக இருக்க வேண்டும் . நெல்லைத் தமிழ் போல இருந்தது . " சரியில்லன்னா மாத்திடுங்க , கொஞ்சம் பெரிசா பாருங்க , அட்வான்ஸ் நான் அனுப்பி வைக்கிறேன் . ஆமா நான் நல்லா இருக்கேன் " !!

என்னவோ போல் இருந்தது !!

மீண்டும் வருகிறேன் !!

பள்ளிக்கூடம் :

தங்கர்பச்சானின் பள்ளிக்கூடம் பார்த்தேன் . பேட்டிகளிலும் , விளம்பரத்திலும் சொல்லப் பட்டப் படி , நமது பள்ளிக்குச் சென்று , நமது சீட்டில் உட்கார வைக்காவிடினும் , கண்டிப்பாக நமது பள்ளி நாட்களை நினைவு கூறுகிறது படம் .

நிறைய பேட்டிகளில் கதையினை சொல்லிவிட்ட படியினால் , கதையின் மீதான நமது ஒன்றுதல் குறைகிறது . கதை தெரிந்துவிட்ட படியினால் , மேற்கொண்டு என்ன? என்ற கேள்வி இல்லாமலே படம் பயணிப்பபது ஒரு குறையாகவே படுகிறது .

இடிந்து , திமிகோலப்படும் ஒரு பள்ளியினை , அப்பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து , ஒரு விழா எடுத்து திரும்ப புதுப்பித்துத் தருகின்றனர் . படத்தின் பிண்ணனி இசை சில இடங்களில் சிலிர்க்க வைக்கிறது . சில இடங்களில் கடுப்பேற்றுகிறது .

படத்தின் சில காட்சிகளை சொல்லியே தீர வேண்டும் . சீமான் , தங்கரையும் , நரேனையும் பார்ப்பது , தனது பழைய நினைவுகளில் மூழ்கியிருக்கும் நரேன் கிளாசுக்கு ஸ்நேகா வருவது , பீச்சில் சண்டையிடும் நரேனுக்கு பதிலாக தங்கர் ’டீச்சர் ’ ஸ்ரேயாவிடம் முறையிடுவது , ஸ்ரேயாரேட்டி அழுது புலம்புவது , மாணவன் அவளுடனே பஸ்ஸில் ஏறிச் செல்வது , படத்தின் கடைசிக் காட்சியில் தங்கர் தனிமையில் க்ளாஸில் அமர்ந்திருக்க , பிண்ணனியில் வாத்தியாரின் அறிவுரை கேட்பது என திரையில் சில ஹைக்கூக்கள் .

" காடு பதுங்குறோமே ’ பாடல் கலக்கல் . அதனூடே தங்கரின் அப்பா அழுது புலம்புவது போல வைத்திருப்பது அழகு . உண்மையில் எனது பள்ளியில் வந்த இன்ஸ்பெக்ஶன் ஞாபகம் வருகிறது . "மீண்டும் பள்ளிக்குப் " பாடல் நன்றாக இருந்தாலும் , இன்னும் கொஞ்சம் பாடல் வரிகளில் குழைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது . !!

நரேனுக்கும் ஸ்நேகாவுக்குமான காதல் , ஒரு கவிதை. அந்த பாட்டும் அற்புதமாக இருக்கிறது . நல்ல சினிமா பற்றி வாய் கிழிய பேசும் தங்கர் , அவரது படத்தில் ஸ்ரேயா ரெட்டியிடம் மாணவர்கள் செய்யும் குறும்பினையும் தவிர்த்திருக்கலாம் !!

முன்னரே சொல்லியிருந்தது போல் , மீண்டும் க்ளாஸிக்கு சென்று உட்கார வைக்காவிடினும் , கண்டிப்பாக நமது பள்ளி நாட்களை நினைவு கூறுகிறது படம் . அடிதடி மசாலா படங்களுக்கு நடுவே , ஆழ்மன உணர்வுகளை தூண்டும் அற்புதமானதோரு படம் .

மீண்டும் வருகிறேன் !!