Sunday, June 24, 2007

எனக்குப் பிடித்தவர்கள் : மூன்று

அரசியலில் எனக்குப் பிடித்தது மு.க . முன்னமே சொல்லியிருந்ததினைப் போல் , மற்ற யாரையும் பிடிக்காமல் போனதற்கு , இவரின் மேல் உள்ள தீவிர பற்றே காரணம் !!

கருணாநிதியினை எனக்குப் பிடித்துப் போனதற்கு இரண்டு காரணங்களே எனக்குத் தோன்றுகிறது . முதலாவது ஆணாதிக்கம் !! நம்மை ஆள்வது ஒரு பெண்ணா ? என்ற ஆணாதிக்க வெறி . இரண்டாவதும் முக்கியமுமாக பத்திரிக்கைகள் !! நான் ௧௯௯௧ - ௧௯௯௨ ஆம் ஆண்டு முதல் தான் அரசியல் பத்திரிக்கைகள் படிக்க ஆரம்பித்தேன் . அப்பா வாங்கி வரும் ஜூனியர் விகடனும் , நக்கீரனும் எனது அப்பொழுதைய அரசியல் ஆர்வத்தின் ஆரம்ப அறிமுகமானது .அந்த வருடங்களில் பத்திரிக்கைகளில் வந்தவையெல்லாம் ஜெ வின் ஊழல்கள் குறித்தவையாகவே இருந்தன. இவற்றிற்கான ஒரே மாற்றாக அப்பொழுது இருந்தது கருணாநிதி மட்டும் தான் . வைகோவும் , விஜயகாந்தும் அப்பொழுது இல்லை . காங்கிரஸும் , கம்யுனிஸ்டுகளும் இப்பொழுது இருப்பதினை விடவும் பரிச்சயமில்லாமல் இருந்தார்கள் !! அதுவும் மத்தியில் கணிசமான உறுப்பினர்களைப் பெற்றதால் கம்யுனிஸ்டுகளும் , வழக்கமான கோஶ்டிச்சண்டையால் காங்கிரஸும் இப்பொழுது தான் மக்களுக்கு கொஞ்சம் பரிச்சயமாகத் தொடங்கியிருக்கிறது !! அதனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்து , ஊழல் மிகுந்த ஆட்சியினை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது எனது ஆசையானது . அதுவே மு .க வின் மேல் எனக்குத் தீவிர பற்று உண்டாக காரணமானது !!

பின்னர் அவரைக் குறித்து பத்திரிக்கைகளில் படிக்கும் பொழுதெல்லாம் அந்த பற்று அதிகமானதே தவிர குறையவில்லை . பன்னிரண்டு வயதில் மாணவர்மன்றம் அமைத்தும் , பதினெட்டாவது வயதில் ரயில் மறிப்பு போராட்டம் நடத்தவும் எத்துணை துணிச்சல் இருந்திருக்க வேண்டும் ?
௯௬அம் ஆண்டு ஆட்சி அமைத்து நன்றாகவே ஆட்சி செய்தார் . ஊழலற்ற நேர்மையான ஆட்சி என்று சொல்லவில்லை. உழவர் சந்தை , மினிபஸ் , பாலங்கள் , சமத்துவபுரம் போன்ற கண்ணுக்குப் புலப்படும் நற்திட்டங்கள் !!முந்தைய ஆட்சியினை விட கம்மியான ஊழல் . இன்னமும் ஊழலற்ற ஆட்சி தருவேன் என்று முழங்குபவர்களை தூக்கத்தில் இருந்து தான் எழுப்ப வேண்டும் . காந்தி மீண்டும் வந்தால் கூட சாத்தியமில்லை . ரமணா , முதல்வன் போன்ற படங்களில் பார்த்து மட்டும் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான் !!

௨00௧ஆம் தேர்தல் முடிவுகளின் பொழுது நான் ராஜவல்லிபுரத்தில் இருந்தேன் . அப்பொழுது வீட்டில் டீவி கிடையாது . அதனால் பஸ் ஏறி சங்கர் சிமிண்ட்ஸ் பஸ் ஸ்டாப் அருகில் இருக்கும் ஒரு சலூனில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தேன் . தலைவர் தோற்றுப் போய்க் கொண்டிருந்தார் . மிகுந்த கவலையாய் இருந்தது !! அப்பொழுது ஒரு குரல் " கவலைப்படாதடா , அதான் நாற்பது எம் .எல் ,ஏ இருக்காங்கள்ல , தலைவரு சட்டசபைல கண்ல விரல விட்டு ஆட்டிருவாரு " ,திரும்பிப் பார்த்தால் , சோர்ந்த முகத்தோடு என் தோளில் கை வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார் என் அப்பா !! நானும் எனது அப்பாவும் ஒத்துப் போகும் ஒரே விஶயம் தி மு க தான் . அன்று அப்பா சோகத்தில் சோமபானம் அருந்தினார். வெளியே நான் காத்திருந்தேன் . பின்னர் இருவரும் ஒன்றாக நடந்தே வீடு வந்து சேர்ந்தோம் . வரும் வழியிலெல்லாம் இதனைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம் . நீண்ட நாள் கழித்து அப்பாவுடன் தனிமையில் பேசியதால் , இந்த விஶயம் மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கிறது !!

பசங்களுடன் அரசியல் பற்றி அரட்டை அடிப்பது உண்டு !! நான் , பிரசன்னா , நொட்ஸ் , சிவா(?) தி மு க . பாலாஜி , காமராஜ் திவிர அதிமுக !! அரட்டை களைகட்டும் .தியாகராஜன் மக்கள் கட்சி , அதாவது எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ , அந்த கட்சி . ஹிஹிஹி !!மு கவை கைது செய்த நாளன்று நான் மதுரையில் இருந்து கிருஶ்ணகிரி வந்து கொண்டிருந்தேன் . நிறைய இடங்களில் தொண்டர்கள் மறியல் செய்வதும் , போலிஸ் வந்து கைது செய்வதுமாய் இருந்தது . சாலையினை மறிக்க வேண்டி , காவேரிப்பட்டினம் பாலம் அருகில் , டயருக்கு தீ வைத்து உருட்டி விட்டார்கள் .இதெல்லாம் பார்த்த பொழுது , தலைவருக்கு இவ்வளவு செல்வாக்கா என்று பிரமித்தேன் !!

எனக்குப் பிடித்தவர்கள் செய்யும் தவறுகளையும் நியாயப்படுத்தும் விசித்திர குணம் எனக்கு உண்டு .அவர்களை விமர்சிப்பவர்களை கண்டாலும் , அதனைப் பற்றிப் படித்தாலும் எரிச்சல் தான் வருகிறது .எழுத்தாளர்களில் விகடன் மூலமாக ஞாநியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும் . ஆனால் இந்த வார தொடரில் இவர் கருணாநிதியினை விமர்சித்திருந்தது போல் எதிர்கட்சியினர் கூட விமர்சித்திருக்கமாட்டார்கள் .படித்தவுடன் எனக்கு கோபம் தான் வந்தது . அவர் சொல்வதெல்லாம் நியாயம் தான் . உண்மை தான் . அதற்காக மற்றவரை குறை கூற இவர் யார் ? வாழ்வில் தவறேதும் செய்யாத புத்த பிட்சுவா ? மகாத்மாவா ? என்றேல்லாம் கேள்வி எனக்குள் வந்தது . காசுக்காக எழுதுபவர் தானே அவர் என்றளவுக்கெல்லாம் மனதிற்குள் திட்டித் தீர்த்தேன்.

வந்த கோபம் அப்படி !!

மீண்டும் வருகிறேன் !!

No comments: