Sunday, June 24, 2007

எனக்குப் பிடித்தவர்கள் : ஓன்று

நண்பர்களையும் , உறவினர்களையும் தவிர்த்து , சினிமாவிலும் பொதுவாழ்க்கையிலும் எனக்குப் பிடித்தவர்கள் இவர்கள் .இவர்களைப் பிடித்துப் போனதற்கு சில பல காரணங்கள் உண்டு , ஆனால் இவர்களது துறையில் மற்றவர்களை வெறுப்பதற்கு இவர்களே காரணம் !!

சினிமாவில் ரஜினி . ரஜினியின் வெறித்தனமான ரசிகன் நான் . சின்ன வயதில் மாமாவுடனும் , சித்தியுடனும் தான் இருப்பேன் . அவர்களும் ரஜினி ரசிகர்கள் . அவர்களிடம் இருந்து தான் இது எனக்கும் தொற்றியிருக்கும் என்றே நினைக்கிறேன் !! ரஜினி படங்கள் என்றால் எனக்கு உயிர் . எத்தனை தடவை போட்டாலும் , கலங்காது பார்த்துக்கொண்டே இருப்பேன் .
அப்பொழுது வீட்டில் டி.வி இல்லை . பக்கத்து வீட்டில் டிவி போட்டால் , எங்கள் வீட்டில் இருக்கும் ஜன்னல் வழியாக நான் பார்ப்பேன் . வெள்ளிக்கிழமை தோறும் ஒளியும் ஒலியும் , ஞாயிறு தோறும் சாயங்கால வேளையில் போடும் தமிழ்த்திரைப்படம் போன்றவற்றிற்கு மட்டும் ஸ்பெஶல் பெர்மிஶன் . அவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் !!சில நேரங்களில் ரஜினி படங்கள் போடுவார்கள் . அன்று காலை முதலே பரபரப்பாக இருப்பேன் . மளிகைக்கடைக்குப் போவது , வேறு எதாவது வெளி வேலை என்றேல்லாம் கேட்டு கேட்டு முடித்துவிட்டு தான் டிவி பார்க்கப் போவேன் . இல்லாவிடில் நடுவில் செல்ல வேண்டியிருக்கும் !!

தனியாக படம் பார்க்க ஆரம்பித்ததும் , பசங்களுடன் நான் பார்த்த முதல் ரஜினி படம் பாட்ஶா தான் . அதுவரை வீட்டினர் யாருடனாவது தான் படம் பார்க்கச் செல்ல முடியும் . முதல் முறையாக நண்பர்களுடன் ரஜினி படம் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில் , பையில் இருக்கும் இருபது ருபாயுடன் சைக்கிளில் வேகம் வேகமாக தியேட்டர் சென்றால் , டிக்கட் விலை நாற்பது . கண்டிப்பாக வீட்டில் கேட்க முடியாது. கேட்டால் உதை விழுவது உறுதி . அதனால் என் நண்பன் வாசுதேவன் வீட்டிற்குச் சென்றேன் .அவனுக்கு தசைகளில் கோளாறு. சட்டென்று கை கால் தூக்க முடியாது . பிறவிக் கோளாறு . வைத்தியம் செய்து வந்தான் . அவர்கள் வீட்டில் பெரிய கை . அப்பாவும் அம்மாவும் டாக்டர்கள் . அதனால் பையன் படம் பார்ப்பதற்கு கண்டிப்பாக நூறு ருபாய்க்கு குறையாமல் கொடுப்பார்கள் . அவனை வழுக்கட்டாயமாக வரச் செய்து , டிக்கெட் எடுத்தால் , அது அடுத்த ஶோவுக்கான டிக்கெட் . இரவு படம் முடிந்ததும் , கால் வலிக்க சைக்கிள் மிதித்து , அவனை அண்ணாநகரில் இருந்து புதூர் வரை கொண்டு போய் விட்டு விட்டு வீட்டிற்கு வர , இரவு மணி பன்னிரெண்டு . அப்பாவின் சீப்பு அடியும் கிடைத்தது , மறக்க முடியாதது !! அடுத்த நாள் , பள்ளியில் சுதந்திரப் போராட்ட நாயகர்களைப் போல் , நானும் வாசுதேவனும் சுற்றிலும் பசங்களும் , பெண்களும் படைசூழ படத்தின் கதையினை விவரித்ததும் , அதை வைத்து வாரந்தோறம் சனிக்கிழமை நடக்கும் கிளப்பில் நாடகமாய் போட்டதும் இன்னும் நினைவிலிருக்கிறது !!!

நாகர்கோவிலில் படித்துக் கொண்டிருந்த பொழுது தான் படையப்பா படம் ரிலிஸானது . முதல் ஶோ பார்க்காவிட்டால் எப்படி ? நானும் குமாரசாமியும் ( சம்பத் ) மற்ற க்ளாசில் உள்ள பசங்கள் அனைவரும் படம் பார்ப்பதென முடிவானது . எப்படியும் க்ளாஸ் கட் அடிக்க வேண்டும் . காசைப் பற்றிய கவலையெல்லாம் இல்லை . நான் தான் க்ளாஸ் லீடர் என்பதால் , எனது க்ளாஸ் பசங்களின் மாச ஸ்கூல் பீஸ் என்னிடம் தான் இருக்கும் . முதல் தேதியே அனைவரிடமும் வாங்கி , இருபத்தியேழாம் ( கடைசி நாள் ) தேதி தான் பணம் அடைப்பேன் . அதனால் எப்பவும் என்னிடம் காசு இருக்கும் . ரிலிஸுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ரசிகர் மன்ற டிக்கட் வாங்கியாகி விட்டது .மொத்தம் இருபது டிக்கட் . க்ளாசிலோ மொத்தமே முப்பது மாணவர்கள் தான் , பெண்கள் எட்டு பேர் . முதல் நாளே ப்ளான் செய்தது போல் நானும் இன்னும் நான்கு பேரும் லீவ் எடுத்துவிட்டோம் . ( அப்பொழுது தான் அடுத்த நாள் வரவில்லையென்றாலும் சந்தேகம் வராது !! ) , சம்பத்துக்கு அன்று வயிற்றுவலி என்றும் , அவனை ஆஸ்பத்திரி கொண்டு செல்ல நான்கு பேருமாய் , கிட்டத்தட்ட அனைவரும் எதனையாவது சாக்குச் சொல்லி மட்டம் தட்டி விட்டு படம் பார்த்தோம் . அடுத்த நாள் பள்ளியில் பிரச்சனையாகி விட்டது . க்ளாசில் மொத்தமே பத்து மாணவர்கள் தான் இருந்திருக்கிறார்கள் . பெற்றவர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லி விட்டார்கள் . எப்படியோ சமாளித்தோம் . !!! எடுத்த பீஸை சரிகட்ட , லெப்ரசி டொனேஶன் என்று கார்ட் அடித்து , வீடு வீடாக சென்று பணம் வாங்கியது ஒரு தனிக்கதை !!!

கிருஶ்ணகிரியில் படிக்கும் பொழுது ரீலிஸானது ’ பாபா ’ .பிரசன்னாவும் கூவமும் சென்று காசட் வாங்கி வந்தார்கள் ( அது ஒரு தனிக்கதை ) . அக்காஸட்டினை ருமில் இருந்த அனைவரும் ஒன்றாக ஒரே ரூமில் உட்கார்ந்து கேட்டது ஞாபகம் இருக்கிறது . நானும் கூவமும் படம் பார்க்க திட்டமிட்டொம் . பாதி மேட்சில் கிளம்பி வந்தான் கூவம் . அதனால் அசோக்கும் , பிரசன்னாவிற்கும் கோபம் !! படம் பார்க்க டிக்கட் எடுக்கச் செல்லும் பொழுதெ , ரஜினியின் கட் அவுட் சரிந்தது . படம் எனக்குப் பிடித்திருந்தாலும் , ப்ளாப் . தண்ணி அடித்தோம் . அன்று பாரில் குடிமகன்கள் அனைவரும் பாபா ப்ளாப் ஆனது பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர் !!! படத்தினை ஒரு எட்டு முறை பார்திருப்பேன் தியேட்டரில் !! கடைசி முறையாக சென்ற பொழுது , நான் மட்டும் தனியாக சென்று பார்த்ததும் நினைவிலிருக்கிறது .

மதுரையில் நல்ல சம்பளத்தில் பிலிப்ஸில் இருக்கும் பொழுது ரிலிஸானது சந்திரமுகி . படத்தின் முதல் ஶோ , இண்டர்வலில் மானேஜர் ராதாகிருஶ்ணன் போன் பண்ணியிருந்தார் . வேறு எதைப் பற்றியும் கேட்கவில்லை , " படம் பார்த்திருப்பேன்னு தெரியும் , எப்படி இருக்கு ?" என்றார் . இது தான் தலைவர் !! ஏ க்ளாஸ் , பி க்ளாஸ் என்றில்லை , எல்லா க்ளாசிலும் தலைவருக்கு ரசிகர்கள் உண்டு !! மப்பில் ஒருதடவை படம் பார்க்க நானும் முத்துவும் சென்று , கீழே விழுந்து , எனக்கும் வண்டிக்கும் நல்ல அடிபட்டும் , படம் பார்த்துவிட்டே டாக்டரிடம் போனோம் .

பெங்களுரில் இருக்கும் பொழுது , நானும் சஞ்சையும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தோம் . " சரியா நடக்கத் தெரியாது , ஸ்டைலுன்டாங்க !! சரியா தமிழ் பேசத் தெரியாது ஸ்டைலுன்டாங்க !!" என்று . அதுபோல் தலைவர் எல்லாத்தையும் சரியாகச் செய்தாலும் சரி , எல்லாத்தையும் தப்பாகச் செய்தாலும் சரி , அது ஸ்டைல் தான் !!ஓரு நடிகனின் திரைப்பட அறிவிப்பே பரபரப்பாகிறது என்றால் , அது ரஜினிக்கு மட்டுமே !!ரஜினி குடிக்கும் ஜூஸிலிருந்து , வைக்கும் விக் வரை எல்லாமே பத்திரிக்கைக்கு நியூஸ் தான் .

சில சமயங்களில் உறைக்கிறது , இது கிறுக்குத்தனம் என்று !!காமராஜுக்கும் எனக்கும் இதனால் சண்டையே வந்திருக்கிறது . அவர் கமல் ரசிகர்!! . ஆனாலும் முடியவில்லை . இதோ இன்னும் பத்து நாட்களில் சிவாஜி !! இப்பொழுதே ஆபிஸில் சொல்லிவிட்டேன் . அடுத்த வாரம் அண்ணண் வீட்டில் கல்யாண நாள் என்று .படம் எப்பொழுது இங்கு ரிலிஸ் ஆகும் எனத் தெரியவில்லை . ரிலிஸ் அன்று படம் பார்க்காவிட்டால் ஜென்ம சாபல்யம் கிட்டாது போல ஒரு தவிப்பு .

மீண்டும் வருகிறேன் !!

No comments: