Monday, January 21, 2008

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௩ :

பணம் :

ஆயிரம் மைல்களுக்கு அப்பால்
காசு சம்பாதிக்கப்
போனான் கணவன்

அய்ந்து வருடமோ
ஆறு வருடமோ கழித்து வரும்
கணவனுக்காக காத்திருக்கிறாள் மனைவி

வாழ்க்கைக்கு பணம் வேண்டும்
சேர்ந்து வாழமுடியாத வாழ்க்கைக்குக்
இருந்தால் என்னஇல்லாவிட்டால் என்ன பணம் ?

படித்தவுடன் தோன்றியது சரியான கிறுக்கல் , பினாத்தல் என்று . சில நாட்கள் கழித்து யோசிக்கையில் சரிதானோ என்று தோன்றியது . இன்னும் புரிபடாத மனநிலையில் நான் .

ஏற்கனவே சொல்லியிருந்ததினைப் போல் , இங்கு நடக்கும் கட்டுமான பணியில் இருப்பவர்களில் அதிகமானோர் தமிழர்கள் . சரியாக படிக்காமல் இருந்துவிட்டதினால் , தமிழ்நாட்டில் இருந்திருந்தால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் நூற்றியம்பது ருபாய் கிடைக்கும் . அதுவும் அன்று வேலை இருந்தால் மட்டும் . இங்கு மாதம் பதினோராயிரம் . செலவு போக மாதம் ஆறாயிரமாவது வீட்டிற்கு அனுப்பலாம் . இவர்கள் இங்கு வந்ததில் நியாயமிருக்கிறது .

எனது நிலை வேறு .பொறியியல் முடித்து விட்டு , நல்ல கம்பனியிலும் வேலை செய்துவிட்டு , நான் இங்கு வரக் காரணம் ? சமாதானம் சொல்வதேன்றால் , நான் வழிதவறிப் போன ஒரு ஆடு .பிரகாஶ்ராஜ் மேற்கோள் காட்டியிருந்ததினைப் போல , " வழிதவறிப் போகும் ஆட்டிற்கு தான் , மேய்ப்பன் தோளில் இடம் கிடைக்கும் " .. ஹிஹி ..

எதற்காக ஒருவன் வெளிநாட்டுக்கு வேலைக்காக வருகிறான் ? சரியான வேலை கிடைக்காமல் சிலர் , சம்பளம் அதிகம் வேண்டி சிலர் , தனிப்பட்ட காரணம் காரணமாக சிலர் . வீட்டிலுல்லோர் நலமும் , நிம்மதியும் தான் வேண்டும் எனக்கு . இங்கு வருவதால் , எனது வீட்டின் பணப்பிரச்சனைகள் சில குறைந்திருக்கிறது . நான் இந்தியாவில் இருந்தினைக் காட்டிலும் இப்பொழுது நலமாகவே இருக்கிறார்கள் . அவர்கள் இழந்தது என் அருகாமையினைத் தான் . அது போலவே நானும் . வீட்டு நினைப்பு தட்டும் சில நேரங்களைத் தவிர , நலமாகவே இருக்கிறேன் . வேறேன்ன வேண்டும் ? இது எனது வாதம் .

பணம் பெரிதா ? உணர்வுகள் பெரிதா ? உனது அருகாமை இல்லாமையினை , நீ வெளிநாட்டுக்குச் சென்று அனுப்பும் அதிகமான பணம் சமன் செய்து விடுமா? அம்மாவின் அன்பும் , தங்கையின் அன்பும் , வீட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும் , அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அந்த சில விலைமதிப்பில்லா நேரங்களையும் , நீ தனியாக இருந்து சாப்பிடும் குப்பூஸூம் ,ரொட்டியும் நெருங்க முடியுமா ? இது கவிஞரின் வாதமாக இருக்கலாம் .

அவரவர்க்கு அவரவர் நியாயங்கள் . எதிலோ படித்தது ஞாபகம் வருகிறது . " சரியென்றும் தவறென்றும் ஒன்றும் இல்லை . இன்று சரி என்று படுவது , நாளை தவறாகப் படலாம்". இது சரி என்று இப்பொழுது படுகிறது . தவறு என்று தோன்றும் முன்பே , காலம் தாழ்த்தாமல் இந்தியா வந்திருப்பேன் . இடைப்பட்ட காலத்தில் நான் தவற விட்டது , அதனை விட பலமடங்காக திருப்பிக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

மீண்டும் வருகிறேன் !!

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௩ :

அவசியம் :

"பசித்த வேளைக்கு
ருசியுடனோ இல்லாமலோ சாப்பாடு

அவகாசம் கிடைக்கையில்
கையிலொரு கவிதைப் புத்தகம்

அனாசினோஅல்லது ஜண்டுபாமோ
தலைவலிக்கு

தூரப் பயணத்தில் பேருந்தில்
அமர்ந்து போக ஒர் இருக்கை

ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நேரத்தில் மட்டும் அவசியம் "

உண்மையே . ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தில் மட்டும் தான் அவசியப்படுகிறது . மற்ற நேரங்களில் அனாவசியாமாகவோ , தொந்தரவாகவோ அமைந்துவிடுகிறது .

இப்பொதேல்லாம் காலைப் பொழுதுகளுக்கு , ஒரு கப் சுலைமானி , ஒரு சுடாகு , ஒரு சிகரட் மட்டுமே தேவையாயிருக்கிறது . வேலைப் பயணங்களில் இருக்கும் பொழுது புத்தகமும் , சாயங்கால மற்றும் இரவு நேரங்களில் இரண்டு லார்ஜும் , கம்ப்யுட்டரில் பாட்டும் இருந்துவிட்டால் , ஒரு நாளின் கணக்கு முடிந்துவிடுகிறது . இடைக்கிடைக்கு நண்பர்களின் போன்கால்கள் , வீட்டின் நலம் விசாரிப்பு இவற்றோடே கழிகிறது நாட்கள் .

இவற்றில் எது நேரம் கழித்து கிடைத்தாலும் அவசியப்படுவதில்லை . சாதாரண உண்மையினை மற்றொரு கோணத்தில் இருந்து பார்க்கும் இக்கவிதை என்னவோ மனதில் குறுகுறுக்கிறது .

மீண்டும் வருகிறேன் !!

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௨ :

பாசம் :

"பட்டணத்தில் படிக்கும்
மகன் வருவானென
காத்திருந்தாள் தாய்
பல மாதங்களாக

விடுமுறை நாளில் அதிகாலை வேளை
அசதியாய் வந்தவன்
உறங்கச் சென்றான்
தூங்கட்டும் என்று
தாலாட்டினாள் தனக்குள்ளேயே

எழுந்தவன் அவசரமாய்ப் புறப்பட்டுச் சென்றான்
நண்பர்களைப் பார்க்க
திரும்பி வந்தவன் தயாரானான்
பட்டணம் புறப்பட
மீண்டும் பார்த்தபடியேயிருந்தாள் பாசத்துடன்

வாசல் வரை வந்து
வழியனுப்பினாள் ஏக்கத்துடன் "

இதனை விடவும் அழகாக தாயின் அன்பை , பாசத்தினை உணர்த்தமுடியுமா ?
வாழ்பானுவங்களில் இருந்து வருவது தான் இலக்கியம் என்பது மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியுள்ளது . " இன்றைய இலக்கியம் என்பது வாழ்க்கையினை பிரதிபலிப்பதாயுள்ளது " என்ற ஆசிரியரின் முன்னுரைக்கேற்ப இக்கவிதை உள்ளது .

பாசம் கிடைக்கும் இடத்தில் அதனை உதாசினப்படுத்துவதும் , கிடைக்காத இடத்தினில் அதனை தேடி அலைவதாகவுமே அலைபவனாகவே நான் இருந்திருக்கிறேன் . நான் மட்டுமல்ல , நம்மில் பலரும் .

மாசுயில்லாத அன்பினை தாயிடம் தவிர வேறேங்கும் காணுதல் அரிது . கிடைக்கும் இரண்டு மாத விடுமுறையில் , அதிகமாக அம்மாவுடனே இருக்க வேண்டும் என ஏற்கனவே செய்திருந்த முடிவினை , இக்கவிதை இன்னமும் வலியுருத்துகிறது .

மீண்டும் வருகிறேன் !!

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௧ :

வெண்மணி வாயிலாக பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" புத்தகம் கிடைத்தது . அருமையான கவிதைகளின் தொகுப்பு . அவற்றில் , எனக்குப் பிடித்தது பின்வருவன.

மௌனி :

அதிகாலை ஆறு மணிக்கு
வீடு தேடி வந்தவர்களுக்காக
தூக்கத்தை ரத்து செய்து
எழுந்தேன் .

குளிக்கும் பொழுது
கூப்பிடும் குரல் கேட்டு
முழுமையாய் குளியாமல்
வெளியே வருகை

சாப்பிடும் வேளை சொந்தம் வர
, அரைவயிறு நிரப்பி
அவசரமாய் முடிப்பு

பேருந்தில் பக்கத்தில் அமர்ந்தவனுக்காக
உடல் கால்பாகமாய்
ஒடுக்கப்பட்டது

என் பிரச்சனைகளே என்னால் தீர்க்கப்படாத நிலையில்
, வந்தவர்கள் சிக்கல்களை கேட்க மௌனியானேன் .

எனக்காக வாழ எத்தனிக்கும் வேளையிலெல்லாம்
விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது யாருக்காகவோ

அன்றாட வாழ்வில் நடப்பவை இவை . நம்மால் நமக்கான வாழ்வினை வாழ முடியவில்லை என்பதே சரி . அப்படியே வாழ விரும்பினாலும் , அது மற்றவர்களை சார்ந்து தான் இருக்கவேண்டியுள்ளது . அப்புள்ளியில் தான் சமூகம் , சார்புநிலை என்றவை வருகின்றன
.
நாம் மற்றவர்களிடம் என்னதான் பேசுகிறோம் ? சில சமயங்களில் சகாயம் வேண்டியும் , சில சமயங்களில் சமாதானம் வேண்டியும் , பல சமயங்களில் தமது பிரச்சனை அவருக்குப் புரிய வேண்டும் என்பதற்க்காகவுமே பேசுகிறோம் . நமது பிரச்சனை மற்றவருக்கு புரிந்து என்ன பயன்? அது சில சமயம் ஒரு ஆறுதல் , சில சமயம் ஒரு தேறுதல் வேண்டி அவ்வளவுதான் .

எனினும் எனக்கான வாழ்க்கை என்பது என்ன ? என்பதே கேள்விக்குறியதாகவும் இருக்கிறது . எனது அம்மா , அப்பா , எனது தங்கை , எனது குடும்பம் , எனது நண்பர்கள் ...... இவர்கள் அல்லது இது தான் எனக்கான வாழ்வா ? தெரியவில்லை .

இதற்கான பதிலாக பொன்.குமாரின் மற்றொரு கவிதையே இருக்கிறது .

புரிதல் :

விவரம் புரியுமுன்னே
கடந்துவிட்டது
குழந்தைப்பருவம்

கவலையின்றி முடிந்தது
கல்விப்பருவம்

வேலை தேடுவதிலேயே
கழிந்தது ஒரு சில வருடங்கள்

கல்யாணத்திற்குப் பின்
தாம்பத்தியம் அறியும் முன்னரே
பிறந்தன பிள்ளைகள்

பிள்ளைகளை வளர்த்து
ஆளாக்கவே சரியாயிருந்தது மீதிக் காலம்

எந்நிலையிலும் புரியாமலே
உணர்ந்து கொள்ள முடியாமலே
முடிந்துவிட்டது வாழ்க்கை !!

இது தான் அனைத்து சாதாரணார்களுக்கும் நடப்பது . நாமும் ஒரு சாதாரணாக இருக்க வேண்டுமா , அல்லது சாதிக்க வேண்டுமா என்பதினை நாம் தான் முடிவு செய்யவேண்டும் .

மீண்டும் வருகிறேன் !!

’ அழுகிய’ தமிழ் மகன் :

அழகிய தமிழ் மகன் படம் பார்த்தேன். வித்தியாசமான படம் என்ற சாக்கில் அரதப் பழசான ஒரு மசாலாக் குப்பை !!
வழக்கம்போல ’உலகக் காதலர்களையெல்லாம் ’ சேர்த்து வைக்கும் மாமா வேலை பார்ப்பது , தங்கையினைக் கட்டிக் கொடுத்த ஊரில் உள்ள ரௌடிகளையெல்லாம் அழிப்பது, போலிஸாகி ஊரில் உள்ள ரௌடிகளையெல்லாம் கொன்று குவிப்பது போன்ற வழக்கமான கதையினை விட்டு விட்டு , புதியதாக ஒரு கதையினை பரீட்சித்திப் பார்த்திருக்கும் விஜய்க்கு மட்டுமல்ல , விஜயின் படம் பார்க்கும் நமக்கும் இது ஒரு நல்ல பாடம் !!
முதல் பாதி வறுத்தல் என்று சொல்லிவிட்டால் , இரண்டாம் பாதியினை என்னவென்று சொல்லதென்று தெரியவில்லை . விஜய் அறிமுகமாகும் பாடலில் , பாட்டாலும் , அவரது ஆட்டத்தாலும் சீட்டின் நுனிக்கு வரும் நாம் , அதன் பிறகு கதை செல்லும் போக்கில் , தியேட்டரின் வெளிப்புற வாசலுக்கே வந்துவிடுகிறோம் . என்ன செய்வது ? வித்தியாசமான கதையாயிற்றே !! ஸ்ரேயாவிற்காகவும் , பாடல்களுக்காகவும் பார்கலாம் . அதுவும் திருட்டுசிடி கிடைத்தால் மட்டுமே பார்ப்பதெற்கு சரிப்படும் . இல்லாவிட்டாலும் , இந்த புதுவருடத்தில் கட்டாயம் சின்னத்திரைகளில் " முதன்முறையாக " பார்க்கலாம் !!
மற்றபடி , இதனை பார்காதவர்கள் பாக்கியசாலிகள் . என்னைப் போல் பார்த்தவர்கள் , "செய்துவிட்ட பாவங்களுக்கான பிராயச்சித்தமாக " எண்ணிவிடுதல் உசிதம் !!
விஜயின் அடுத்த "வித்தையாசமான " படத்திற்காக காத்திருப்போம் !!!

மீண்டும் வருகிறேன் !!