Tuesday, June 5, 2007

விகடனில் ஒரு கவிதை

போன வார விகடனில் வந்திருந்த ஒரு கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது . அனிதா என்பவரின் கவிதை .

" விடுதி அறையைச் சுத்தம் செய்கையில்
இரும்பு பீரோ இடுக்கிலிருந்து
பூந்துடைப்பத்தில் ஒட்டிக் கொண்டு வந்தது
நீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்
கறுத்துவிட்டிருந்த ஒற்றை ரோஜா .

எனக்கு முன் இருந்தவரோ
அதற்கு முன் இருந்தவரோ
யாருடையதாகவும் இருக்கலாம்.

மறந்ததா மறுத்ததா எனத் தெரியாதபட்சத்தில்
மடல் விலக்கி தூசு அகற்றி சுவரில் ஒட்டிவிட்டேன்.

கொடுத்தவரும் பெற்றவரும்
இன்னும் பிரியாமல் இருக்கவும் கூடும் !!

இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானதாகிப் போனது . "மறந்ததா மறுத்ததா எனத் தெரியாதபட்சத்தில் " என சிந்திக்க ஆரம்பித்து , அதற்கான காரணத்தைக் கொண்டு முடிப்பதிலாகட்டும் , இக்கவிதை என்னை கொள்ளை கொள்கிறது .

அந்த ஒற்றை ரோஜா எதன் வெளிப்பாடாக இருக்கும் ? காதலர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம் , அல்லது காதலன் காதலியிடம் காதலை தெரிவிக்கும் காதல் கடிதமாக இருக்கலாம் !! தெரிவிக்க வேண்டி வாங்கி வைத்து , நிராகரிக்கப் பட்டுவிடுமோ என்ற பயத்தில் தெரிவிக்காமலே விட்டுவிட்ட காதலின் சாட்சியாய் இருக்கலாம், அல்லது " உனது அன்பினை ஏற்றுக் கொண்டேன் " எனத் தெரிவிக்கும் அறிவிப்புக் கடிதமாக இருக்கலாம் ,நிராகரிக்கப்பட்ட காதலின் அல்லது அன்பின் சோக சாட்சியாய் இருக்கலாம் !!
எதன் வெளிப்பாடாக இருந்தால் என்ன ? ஒற்றை ரோஜா எனபது என்றென்றும் அன்பின் சின்னம். பாதுகாப்பாய் வைத்திருக்கப் பட வேண்டியது !!

மீண்டும் வருகிறேன் !!

No comments: