Wednesday, July 4, 2007

நினைவில் நிற்கும் முகங்கள் :

பெற்றோர் , உற்றார் உறவினர் , நண்பர்கள் , அவர்களது சொந்தங்கள் , வேலை விசயமாக பரிச்சயமானவர்கள் , அது தவிர்த்து மற்ற வழியில் பரிச்சயமானவர்கள் ... இவர்கள் அனைவரின் முகங்களும் நம் நினைவில் இருப்பது இயல்பு . அதனையும் தாண்டியும் ஒரு சில முகங்கள் நம் நினைவை விட்டு அகலாது . எனது இதுநாள்வரை வாழ்வில் நான் சந்தித்த அத்தகைய முகங்களின் தொகுப்பு இது .

முகம் ஒன்று : பிலிப்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் .சாலையோர பயணங்களில் மனதினை தொலைத்து நான் பயணிப்பது உண்டு . அதுவும் மதுரை - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் செல்லும் பொழுது , கோவில்பட்டி தாண்டி ஒரு மோட்டலில் டீ காபி சாப்பிடுவதற்காக நிறுத்துவார்கள் . அந்த கால் மணி நேர நிறுத்தத்திற்காக நான் காத்திருப்பேன் . தம் அடிப்பதற்காக !! அந்த வேளையில் டீ அல்லது காபி கண்டிப்பாக குடிப்பது வழக்கம் . சூடான இட்லிக்கு காரசட்னி போல , தம்மிற்கு டீ !! கூட இருந்தால் அற்புதம் !! அனுபவித்தவர்களுக்கு தெரியும் !! அவ்வாறான அனுபவத்தில் இருந்த பொழுது தான் அந்த முகத்தினைப் பார்த்தேன் . வழக்கம் போல் டீ வாங்கிக் கொண்டு , பஸ்ஸுக்கு அருகில் பின்னால் இருக்கும் படிக்கட்டின் பக்கத்தில் வந்து நின்றேன் . அப்பொழுது தான் அந்த முகத்தினைப் பார்த்தேன் . அவன் வெகு நேரத்திற்கு முன்னரே என்னைக் கவனித்திருக்க வேண்டும் . !!

சிறு பிராயம் .கரு நிறம் . இடுப்பில் குழந்தை . தங்கையாக இருக்கலாம் . எண்ணெய் கண்டறியாத தலைமுடி . வெள்ளையாக இருக்கவேண்டிய சட்டையும் கால் ட்ரொசரும் , படிந்து விட்ட அழுக்கின் சாட்சியாக ஆங்காங்கே மஞ்சளூம் கருமையும் கலந்து இருந்தன . இடுப்பில் இருந்த சிறுகுழந்தையின் முகத்தில் மகிழ்ச்சியா , சோகமா என்று கண்டறிய முடியாத ஒரு முகபாவம் !! அக்குழந்தையின் வாயில் இருந்து ஒழுகிய எச்சில் , சிறிது தூரம் வடிந்து காய்ந்து போயிருக்க வேண்டும் .அதன் சுவடு தெரிந்தது .

அப்பையனின் முகம் எதனுக்காகவோ காத்திருந்து அதற்காக ஏங்கியிருப்பதாக தோன்றியது .கண்களின் அந்த வெறிச்சிடும் , ஏங்கும் அந்த பார்வை இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது . பசியால் தான் பார்க்கிறான் என்றெண்ணி கையில் இருந்த டீக் கிளாஸைக் காண்பித்து , சைகையாலே உனக்கும் வேண்டுமா என்று கேட்டேன் . மறுதலிப்பது போல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு விலகி வேறு பக்கம் சென்றுவிட்டான் . " ஆமாம் " என்று சொல்லி டீ வாங்கிக் கொடுத்திருந்தாலோ , அத்துடன் அவனது முகம் எனக்கு மறந்திருக்கும் !! " வேண்டாம் " என்று சொல்லிவிட்டு சென்றதால் மட்டுமே , இன்னும் அவன் எனக்கு ஞாபகம் இருக்கிறான் !! .

விலகிச் சென்றபடியே , மோட்டலும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்திறக்கு சென்றுவிட்டான் . கடைசியாக திரும்பும் முன் ஒரு பார்வை . அதன் அர்த்தங்கள் பலவாறாக இருக்கக்கூடும் !! நல்ல வேளையாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன் . ஒரு வேளை , நம்மை யாராவது கவனிக்கிறார்களா என்று அவன் கவனித்தான் என்றால் , நான் தேறிவிட்டேன் . அது அல்லாது , நமக்கே வாங்கித் தருகிறேன் என்றானே யாரவன்..... என்றெண்ணியிருந்தால் ???... அவன் நல்ல குடும்பத்தில் பிறந்து , நன்றாக வாழ்ந்து , விதியின் வசத்தால் இவ்வாறு இருக்க நேர்ந்தால் , சே நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது , அவனது தன்மானத்தை தீண்டியவனாகி விட்டவனல்லவாகிவிட்டேன் ???

தவறிழைத்து விட்டேன் என்ற குற்றவுணர்ச்சி காரணமாகவோ என்னவோ , பஸ்ஸில் ஏறிய பின்னரும் அவனது முகம் எனக்கு ஞாபகம் இருந்தது . பின்னர் பலதரப்பட்ட சூழ்நிலைகளால் நான் அவனை மறந்தாலும் , அதன் பின்னர் நான் வேறு எந்த மோட்டலில் நின்றாலும் அவனைத் தேடுவது வழக்கமாகிப் போனது . அவனைக் இதுவரைக் கண்டதில்லை . கண்டாலும் என்ன சொல்லவதென்று எனக்குத் தெரியவில்லை . ஆனாலும் அந்த முகம் என்றும் என் நினைவில் இருக்கும் !!!

முகம் இரண்டு : அபுதாபிக்கு வர விசா கிடைத்து விட்ட பின் , ஒரு முறை மதுரை சென்றிருந்தேன் . அதாவது மதுரை நண்பர்களிடம் இருந்து விடைபெற !! சதிஸ் என்பவன் எனக்கு பழக்கம் . எனது மதுரை டீலரிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்தான் . நானும் அவனும் தான் ரிலீஸாகும் அனைத்துப் படங்களுக்கும் நைட் ஶோ செல்வோம் . ஒன்றாக ஊர் சுற்றுவோம் .
மதுரையில் எங்கள் இருவருக்கு மட்டும் தெரிந்திருந்த ஒரு இடம் இருந்தது . அமைதியாம இடம் . சிவகங்கை போகும் வழியில் சாலையின் இருபுறமும் மரங்களும் , வயல்வெளிகளுமாக இருக்கும் அந்த இடத்தில் , இரண்டு மூன்று பேர் உட்கார்வதற்கு ஏற்றபடி கல்மேடு ஒன்று இருக்கும் . மற்றபடி விடுமுறை நாட்களில் நானும் சதிஷும் பீரோ , பாட்டிலோ வாங்கிக் கொண்டு அங்கு சென்றுவிடுவோம் . காலை பத்து மணிக்கு சென்று , மதியம் ஒன்று இரண்டு மணிக்கு திரும்ப வருவோம் .
இந்த தடவையும் சென்றோம் , நாலைந்து பேர் உள்ள கூட்டமாக !! . தண்ணிக் கச்சேரி நடக்கவும் , அருகில் இருந்த வயலுக்கு மோட்டார் விடவும் சரியாக இருந்தது . அதனால் தண்ணி அடிப்பதும் , குளிப்பதுமாக கச்சேரி களை கட்டியது .

சிகரட் தீர்ந்துவிட்டதால் , வாங்க வண்டி ( ஓசி வண்டி ஓட்டுவதும் ஒரு சுகம் தான் ) எடுத்துக் கொண்டு சென்றேன் . அருகில் இருந்த பெட்டிக் கடைக்குச் சென்று வாங்கிவிட்டு , வண்டியில் ஏறி உட்காரும் பொழுது , எனது கால் ஒருவரின் மேல் பட்டுவிட்டது . மன்னிப்புக் கேட்க நினைத்துத் திரும்பிப் பார்த்து அதிர்ந்தேன் . இந்திரா செளந்திராஜனின் அமானுஶ்ய நாவல்களில் வரும் சாமியார்களைப் போல இருந்தார் . கந்தலாடையும் , நீண்டு வளர்ந்த தாடியும் , சுருக்கம் விழுந்த ஒட்டிப் போன கன்னங்களுமாய் இருந்த அவரை பார்த்தவுடன் பக்தி வராது , பயம் தான் வரும் ...
" மன்னிச்சுகோங்க சார் (?) " என்றேன் .
பதிலுக்கு அவர் , " என்ன பேரு ?" என்றார் . நானும் "குமாரசாமி " என்றேன் . என்னை உற்று நோக்கியும் , கைகளை ஆட்டிக் கொண்டும் காற்றில் ஏதேதோ செய்துவிட்டு , திடீரென எனது தலையில் கைவைத்து , " நல்லாயிருடா " என்று சொல்லிவிட்டு திரும்பி கடைக்குள் சென்றுவிட்டார் . வாழ்த்தா , சாபமா என்று தெரியாமல் , திரும்பி விட்டேன் . ஆனாலும் இன்னும் சில வேளைகளில் திடீரென அந்த முகம் ஞாபகம் வரும் !! தண்ணி அடிக்கும் பொழுது தான் , சிவாவிடமும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறேன் . பதிலுக்கு என்ன சொன்னான் என்று ஞாபகம் இல்லை .

சொந்தக்காரர்களின் முகம் கூட சில சமயம் மறந்துவிடுகிறது . எழுதாமல் விட்ட முகங்களையும் சேர்த்து இவர்களின் முகம் மட்டும் நினைவில் இருக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை . இன்னும் எழுதாமல் விட்ட முகங்கள் நிறைய உண்டு . மதுரையில் எங்களது அடுத்த வீட்டில் இருந்த மனநிலை தவறிய சின்னப் பெண் பானு , நான் பள்ளிக்குக் கிளம்பும் அதே சமயத்தில் தச்சு வேலைக்குக் கிளம்பி என்னுடனே சைக்கிளில் ஒன்றாக வந்த ரமேஶ் , ஆர் .டி .ஓ ஆபீஸுக்கு எதிரில் டீக்கடை வைத்திருந்த பார்த்திபன் ...... போன்ற இன்னும் பலரின் முகங்களும் சில சமயங்களில் திடீரென பளிச்சிடும் .காரணம் யாமறியேன் !!

பார்த்துவிட்ட முகங்களின் நினைவுகளுக்காகவும் , இனி பார்க்க போகும் முகங்களிடம் கிடைக்கப் பெறும் அனுபவங்களுக்காகவும் .......... காத்திருக்கிறேன் !!

மீண்டும் வருகிறேன் !!!

No comments: