Saturday, July 21, 2007

சந்திப்புகள் - ஒன்று .

வாழ்வில் தவிர்க்கப்பட முடியாதவை சந்திப்புகள் . கண நேர சந்திப்பு , வாழ்வினையே புரட்டிபோட்டு விடும் வல்லமை வாய்ந்தவையாக இருந்திருக்கின்றன . வரலாற்று உதாரணங்கள் தவிர்த்து, அனைவரது வாழ்விலும் சிற்சில சந்திப்புகள் இருக்கும் , இதுவரை இல்லாவிடில் இனி நிகழும் . எனது வாழ்விலேயே நிறைய சந்திப்புகள் மறக்க முடியாதவை . என்றென்றும் நினைவில் நிற்பவை . சில சந்திப்புகள் அர்த்தமுள்ளவையாக இருக்கும் , உபயோகமுள்ளவையாக இருக்கும் , சில வருத்தப்பட வைக்கும் , சில அறிவுருத்தும் . என்னை யோசிக்க வைத்த சந்திப்பு இது !!

முசாபாவில் இருந்து அபுதாபி செல்ல வேண்டி டாக்ஸிக்காக காத்திருந்தேன் . ஆபிஸ் பயணம் . மனநிலையினைப் பொருத்தும் , பண நிலையய் பொருத்தும் சில சமயங்களில் ஶேரிங் டாக்ஸியிலோ , சில சமயங்களில் தனி டாக்ஸியிலோ செல்வேன் . . சுமார் அரை மணி நேரம் ஆகும் பயணம் . உடன் வர யாரும் இல்லாததால் , தனி டாக்ஸி ஏறினேன் . வழக்கமாக டாக்ஸியில் செல்லும் பொழுது டிரைவருடன் பேசிக் கொண்டே செல்வது வழக்கம் . அப்படி பேசிக் கொண்டே சென்றேன் . டிரைவரின் பெயர் மஜாகான் . பாகிஸ்தான் . மனைவியும் , இரு மக்களும் அங்கு இருக்கிறார்கள் என்பவை பேச்சின் வாயிலாக அறிந்தது .

பேச்சின் போக்கு தமிழ்நாட்டையும் கேரளத்தையும் பற்றிச் சென்றது . நானும் சென்னை , மதுரை என்று பேசிக்கொண்டிருந்தேன் . கருணாநிதி ஆட்சி குறித்து விசாரித்தார் . ஆச்சரியம் அடைந்தேன் . கருணாநிதி பற்றி எப்படி தெரியும் என்றேன் .கருணாநிதி , ஜெயலலிதா என்று ஆரம்பித்து , கேரளத்து உம்மண் சாண்டி , அச்சுதானந்தன் என்று சென்று , ஆந்திர ராமாராவின் வழியே , வாஜ்பாய் , சோனியா என தேசிய அரசியலில் முடித்தோம் . கட்சியினை விட்டு எம்.ஜி .ஆரை நீக்கியது குறித்து கூட பேசினோம் .சினிமாவிலும் சிவாஜி ரஜினியும் ,கமல் , மோகன்லால் , மம்முட்டி தெரிந்திருக்கிறது . ஹிந்தியும் கொறச்சு மலையாளமும் சம்சாரிக்கிறார்.அவரது பரந்த விஶய ஞானத்தையும் , நினைவாற்றலையும் குறித்து வியந்தேன் .

பாகிஸ்தான்காரன் .இவ்வளவு விஶயங்கள் தெரிந்திருக்கிறானே என்ற ஆச்சரியக் குறி தோன்றும் முன் , எப்படி தெரிந்துகொண்டார் ? என்ற கேள்விக்குறியே தோன்றியது. அவன் இதற்கு முன் வேலை செய்த கம்பனியில் தமிழர்களும் , மலையாளிகளும் அதிகம் இருந்தார்களாம் . அவர்களுடன் இன்றும் பேசுவாராம் . அதுவாயிலாக தான் தெரிந்தது என்றார்.

பாகிஸ்தான் குறித்து ஏதாவது பேசி , பதிலுக்கு அவரை வாயடைக்கச் செய்ய வேண்டுமென்று தோன்றினாலும் , என்ன பேச ? இஸ்லாமாபாத்தையும் , முசரப் , பெனாசிர் பூட்டொவையும் தவிர வேறேன்ன தெரியும் ? விஶய ஞானமின்மை குறித்து வெட்கப்பட்டேன் .

இறங்குமிடம் வந்தது . மொபைல் நம்பர் கொடுத்து , டாக்ஸி வேண்டுமானால் போன் பண்ணுங்கள் வருகிறேன் என்று சொல்லி , கிளம்பிப் போய் விட்டார் .
பின்னர் இதுகுறித்து சிந்தித்துப் பார்த்தேன் . கற்க வேண்டும் . விஶயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒன்று பழக வேண்டும் அல்லது படிக்க வேண்டும். வேற்று நாட்டு இலக்கியங்களைப் படிக்க வேண்டும் . புரிந்து கொள்ள வேண்டும் . " நானா அடுத்த சூப்பர் ஸ்டார் - பதறுகிறார் விஜய் ? ? " என்ற பேட்டியினையும் , ஆர்யாவின் அடுத்த ஆறு படங்களையும் பற்றி தெரிந்திருப்பதை விடவும் , இவற்றைக் குறித்து தெரிந்திருப்பது முக்கியம் என்றே நினைக்கிறேன் .

மீண்டும் வருகிறேன் !!

No comments: