Tuesday, July 24, 2007

சாப்பாடு :

சாப்பாட்டினைக் குறித்து நான் எழுதுவேன் என கனவிலும் நினைத்ததில்லை . காரணம் உண்டு . நேற்று கிரிடம் படம் பார்க்கச் சென்றேன் . ஒன்றரைக்கு ஶோ. நான் பத்தரைகே அந்த ஏரியாவிற்கு சென்றுவிட்டேன் . அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை விஶேசம் . கண்டிப்பாக அனைவரும் நமாஸ் செய்வார்கள் . வெள்ளிக்கிழமை பன்னிரென்டு மணியில் இருந்து ஒரு மணி வரை , அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும் . மீறி திறந்து வியாபாரம் செய்யும் கடைகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.

வேறு வழியில்லாது நாற்பத்திநான்கு டிகிரி " குளிரில் " நின்று கொண்டிருந்தேன் . நேரம் களைய வேண்டி , சுற்றிக் கொண்டிருந்த பொழுது தான் " சரவணபவன் " ஹோட்டலைக் கண்டேன் . இதுவும் ஒரு மணிக்கு தான் திறக்கும் . ஏதாவது வெரைட்டி ரைஸ் சாப்பிட்டு விட்டு , படம் பார்க்கலாம் என நினைத்து காத்திருந்தேன் . தமிழ் பாசம் பொங்க , ஒரு மணிக்கு திறந்ததும் முதல் ஆளாய் உள்ளே சென்றால் , வெரைட்டி ரைஸ் இல்லை , புல் மீல்ஸ் தான் இருக்கிறது என்றார்கள் . பசியில்லை , சாப்பிட எப்படியும் இருபது நிமிடம் ஆகிவிடும் , அதன் பின் தியேட்டர் சென்றால் , படத்தில் முதல் சில காட்சிகளை பார்க்கமுடியாது என்று நினைத்தவாறே எழுந்தேன் . கிண்ணத்தில் காரக்கொழம்பைக் கண்டதும் , என்னையும் அறியாமல் , புல் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன் . சாப்பிட்டு முடித்து , டாக்ஸி பிடித்து சென்று , படத்தை முதலில் இருந்து பார்த்தது தனிக் கதை . எனினும் காரக்கொழம்பா ஆஜித் படமா என்றபொழுது , காரக்கொழம்பு வென்றதன் காரணம் பிடிகிட்டவில்லை !!!

என்றென்றுமே சாப்பாட்டிற்கு நான் மதிப்பளித்ததில்லை . பத்தாவது வரை சுவையான அம்மா சமையல் . பதினொன்றும் பன்னிரென்டாவதும் பாட்டி, மற்றும் அத்தையின் சமையல். அந்நாட்களில் ஹோட்டல் பக்கம் சென்றதில்லை . ப்ளஸ் டூ படிக்கும் பொழுது , அவ்வப்பொழுது ’புல்சே’வுக்கு அடிமையாகி ஹோட்டலுக்கு செல்வது உண்டு . அதிசயமாக ஏதாவது வாங்க வேண்டி , டவுன் சென்றால் மறக்காமல் நானும் அம்மாவும் சாம்பார்வடை சாப்பிடுவோம் . அம்மாவுக்கும் எனக்கும் பிடித்த டிஶ் அது . மற்றபடி டீ ,காபி மட்டும் அடிக்கடி குடிப்பேன் .அசைவம் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது . என்னவளின் வீட்டில் தான் முதலில் அசைவம் சாப்பிட்டேன் . பின்னர் அதுவும் இல்லை . கல்லூரியில் சிவா புண்ணியத்தினால் தான் சிக்கன் ஆரம்பம் . இன்றும் தொடர்கிறது . பின்னர் கடலை வீட்டில் , பறப்பது , நடப்பது , நீந்துவது , ஊர்வது எல்லாம் சாப்பிடலாம் . சாப்பிட்டோம் !! கல்லூரியில் ஹோட்ட்ல் சாப்பாடு , மற்றும் மெஸ் சாப்பாடு !! அவ்வளவுதான் எனக்கும் சாப்பாட்டிற்கும் எனக்கும் இருந்த தொடர்பு !!

வேலைக்குச் சேர்ந்த பின் தான் ஹோட்டல் வாசம் . மைசூர் , சிமோகா , பெங்களுரு வில் ஆரம்பித்து , இன்று அபுதாபி வரை ஹோட்டல் சாப்பாடு தான் .எனக்கு இன்னமும் மீன் சாப்பிடத் தெரியாது .காலேஜில் பாலாஜி முள் எடுத்துத் தருவான் . என்னவோ மீன் சாப்பிட , இன்றுவரை எனக்கு பிடிக்கவில்லை .ஆனால் மைசூர் அருகே , ஒரு கையேந்தி பவனில் கிடைக்கும் மீன் சாப்பாடு கலக்கலாக இருக்கும் . மைசூர் சென்றால் அதற்காகவே பஸ் பிடித்து , எம்.ஆர்.யேப் செல்வேன் . பின்னர் சாப்பாட்டு விஶயத்தில் முக்கியமாக சொல்லப்பட வேண்டியது பஜாஜ் உமாசங்கரை . சரவணபவனையும் , சங்கீதாவையும் , அஞ்சப்பரையும் , அவற்றின் சுவையினையும் அறிமுகப்படுத்தியது அவர் தான் . அவருடனே சுற்றிக் கொண்டிருந்ததால் , நானும் அவருடனே சாப்பிட வேண்டியதாகிவிட்டது . காசு அதிகம் செலவாகிறது என்று சரவணபவன் பக்கம் செல்வதே இல்லை . பின்னர் அதற்கே அடிமையாகி அடிக்கடி சென்றதும் உண்டு .அண்ணாச்சி எப்படியோ , அவரது ஹோட்டலில் சாப்பாடு அமர்க்களமாக இருக்கும் . சாம்பார் சாதம் சரவணபவனின் ஸ்பெஶல் . மீல்ஸில் இருக்கும் சாம்பார் வேறு சுவையுடையதாய் இருக்கும் . தனியாக சாம்பார் சாதமும் , அப்பளமும் , காசு அதிகம் இருந்தால் தயிர் வடையும் வாங்கிச் சாப்பிட்டால் , வேண்டாம் எழுதும் பொழுதே எச்சில் ஊறுகிறது !!

ஒருநாள் நல்ல பசி . நானும் கூவமும் வடபழனி சரவணபவன் சென்றோம் . கீழே கூட்டமிருந்ததால் , மாடியில் ஏசி ரூமில் அமர்ந்து சாப்பிட்டோம் . பக்கத்து டேபிளுக்கு வந்த பில்லைப் பார்த்ததும் தான் தெரிந்தது , ஒரு மீல்ஸ் கிட்டத்தட்ட தொண்ணூறு ரூபாய்க்குப் பக்கத்தில் என்று . என்ன செய்வது , கை நனைத்தாகிவிட்டது . வெளுத்துக் கட்டினோம் . பர்ஸ் காலியாகி , வயிறு நிரம்பி வெளியே வந்தோம் . !!

என்னால் மறக்க முடியாத சாப்பாடு என்றால் அது பாலச்சந்தரின் வீட்டில் சாப்பிட்டது . சாதம் , பருப்பு , சாம்பார் , காரக்கொழம்பு , ரசம் , தயிர் , குடிக்க மோர் , இரண்டு சுவீட் , கடைசியாக வாழைப்பழமும் என்று அசத்திவிட்டார்கள் . பின் கார்த்தீ வீட்டு சாப்பாடு . சாதமும் , சிக்கன் கொழம்பும் , சிக்கன் வறுவலும் , ரசமும் . சாப்பிட்டு அது செரிக்க வேண்டி , வீட்டிற்கு செல்லும் முன்பும், திரும்பும் பொழுதும் நடந்தே அழைத்துச் சென்றான் கார்த்தி!! கடலை வீட்டு அசைவமும் , குறிப்பாக இறாலும் , கூவம் வீட்டின் நுரை ததும்பும் சூடான காபியும் , காரக்கொழம்பும் , அசோக் வீட்டு முட்டைக்கொழம்பும் , சிவா பாதி சாப்பிட்டு , மீதியில் சமைக்கும் , அவனால் டேஸ்ட் பார்க்கப் பட்ட பிரியாணியும் என்றென்றும் எனது பேவரிட் !!

சூடான , நிதானமாக , நேரம் பார்த்து வடிக்கப்பட்ட , பளீர் வெள்ளை சாதத்தில் காரக்கொழம்பை விட்டு சாப்பிடும் சுகம் அலாதியானது . அதற்கு சற்றும் சளைக்காதது , ரசம் விட்டு சாப்பிடுவது . இரண்டும் அற்புத சுவை .வடபழனியில் இருக்கும் பொழுது கிட்டத்தட்ட ரசத்தின் அடிமையே ஆகிவிட்டேன் . தினமும் ’தாமுவின் ஆளை’ ரசம் வைக்கச் சொல்லி சாப்பிட்டது நினைவிருக்கிறது .

சுவையான மோர்க்கொழம்பும் , காரட் அல்லது கத்திரிக்காய் பொரியல் இருந்தால் , வயிறு வெடிக்கும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பேன் .கூடவே மோர் மிளகாய் இருந்தால் , கேட்கவே வேண்டாம் . அதுபோலவே புளியோதரையும் , எலுமிச்சை சாதமும் . தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னியும் , கையில் விகடனும் இருந்துவிட்டால் , அதனையும் விட உலகில் வேறு எதுவும் வேண்டுமா என்ன ?

அதுபோலத் தான் அம்மா பண்ணும் தேங்காய்ச் சாதமும் , வெங்காயச் சட்னியும் .வெங்காயச் சட்னிக்காகவே கூடுதல் ஐந்தாறு சூடான இட்லிகள் அடிக்கலாம் !! மதுரை ஆரப்பாளயத்து கையேந்திபவனில் , சுகாதாரம் இருக்கிறதோ இல்லையோ , சுவைக்கு நான் கியாரண்டி . இட்லியினையும் , முட்டைத் தோசையினையும் அவர்கள் எடுக்கும் விதமே தனி !! தண்ணியா சாம்பாரா எனக் குழப்பம் வந்தாலும் , சாம்பார் சுவையாகவே கிடைக்கும் .

இங்கு அபுதாபியில் ஹோட்டலில் தினமும் அசைவம் சாப்பிட்டு , முகத்தில் அடித்து விட்டது . தினமும் சிக்கன் . என்ன ஒன்று அது சில்லியா , சுக்காவா , மசாலாவா என்பதில் தான் வேறுபாடு !! இங்கும் நல்ல தமிழ் சாப்பாடு கிடைக்கும் , ஆனால் அதற்கு மெயின் எரியா செல்ல வேண்டும் . காசும் ரொம்பவே அதிகம் . சரவணபவன் , சங்கீதா , செட்டிநாடு , தலைப்பாக்கட்டு என்று அனைத்து ஹோட்டல்களும் இருந்தாலும் , தூரமாக இருக்கின்றன . தினமும் டாக்ஸியில் சென்று சாப்பிடுவது கட்டுப்படியாகாது . அந்தக் காசில் , தமிழ்நாட்டில் ஒரு ஹோட்டலே நடத்தலாம் !!

அமிர்தமே என்றாலும் , அம்மா சாப்பாட்டிற்கு அருகில் வருமா ?

காத்திருக்கிறேன் , மே - ஜூன் மாதத்திற்காக !!

மீண்டும் வருகிறேன் !!

No comments: