Saturday, July 21, 2007

கிரிடம் :

ஹிரோ ஒரே சமயத்தில் பத்து பதினைந்து பேரை அடிக்கும் சாகசம் இல்லை . கட் பண்ணினால் பாரின் லோகேஶன் கனவுப் பாட்டு இல்லை , சந்தனைத்தையும் குங்குமத்தையும் குழைத்து முகத்தில் பூசிக் கொண்டு எதிரிகளைக் கொல்லும் சினிமாத்தனம் இல்லை . டீக்கடையில் டீ குடிப்பதையே கூட சாகசமாக கருதி பஞ்ச் டயலாக் அடிக்கும் ஹிரோ இல்லை. ஹாஸ்பிடல் செலவு வைக்கும் , காது கிழிக்கும் அதிரடி இசை இல்லை .ஐந்து பாட்டு , நாலு பைட் என்ற வழக்கமான பார்முலா இல்லை . பின் இப்படத்தில் என்ன தான் இருக்கிறது ?

படத்தில் அமைதி இருக்கிறது . உணர்வுகளும் உணர்ச்சிகளும் இருக்கிறது . திருச்சியினையே அழகாக காட்டும் திருவின் காமிரா இருக்கிறது . அமர்க்களமான நடிப்பில் ராஜ்கிரணும் , அஜீத்தும் இருக்கிறார்கள் . அழகான காதல் இருக்கிறது . அற்புதமான பாடல்கள் இருக்கிறது . பிரகாஶின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இசை இருக்கிறது . அழகாய் திரிஶாவும் , அதை விட அமர்க்களமாய் அஜித்தும் இருக்கிறார்கள் . முக்கியமாக கதை இருக்கிறது . அதிலும் முக்கியமாக யதார்த்தம் !!

அவனையும் மீறி வாழ்க்கை அவனை விட்டு நழுவிச் செல்கிறது . அவனதும் அவனது தந்தையின் கனவும் கலைகிறது . யதார்த்தமாக செய்துவிட்ட ஒரு காரியத்தால் , குடும்பத்தின் அமைதி கலைகிறது . ஊரே அவனை வேறு கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது . தந்தையும் மகனுக்குமான உறவுப் போராட்டத்தில் கலங்கடிக்கிறார்கள் .

ஒரு ரெளடி தனது தந்தையய் அடிப்பதை தாங்க மாட்டாமல் திரும்ப அவனை அடிக்கிறார் அஜித் . அவன் சாய , ஊரே அஜித்தை ரெளடியாகப் பார்க்கிறது . தான் அப்படி இல்லை என நீருபிக்கும் முன்பாகவே அடுத்தடுத்த சம்பவங்கள் அவனை ரெளடி என நிருபிக்கின்றன . இதனால் அவனது காதல் கலைகிறது . குடும்பமே அவனை ரெளடியாக பார்க்க ஆரம்பிக்கும் பொழுது , அக்குடும்பத்துக்காக வேண்டி வில்லனை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போகிறார் அஜித் . பாலகுமாரன் நாவல்களில் வரும் முடிவு . யதார்த்தமான கதை .

படத்தின் முதற்பாதி அற்புதம் .இரண்டாம் பாதியில் சோகத்தின் சாரல் கொஞ்சம் பலமாகவே இருக்கிறது . அஜித்தின் அறிமுகம் அமர்க்களம் . பிள்ளையார் திருடுவது , திரிஶா துரத்தல் , காதலை தெரிவிப்பது , ராத்திரியில் தொட்டியில் அமர்ந்து இருவரும் பேசுவது , அதனை குடும்பமே கேட்பது என திரையில் சில ஹைகூக்கள் .

சொல்லப்பட வேண்டியது திருவின் காமிரா . படம் பளிச்சென்று இருக்கிறது . படத்தில் அடிக்கடி வந்து போகும் சில மஞ்சள் வெயில் காட்சிகளும் , படத்தின் சோக மூடில் வரும் காட்சிகளும் அற்புதம் . பிரகாஶ் பாடல்களில் தெரிகிறார் . சில சமயத்தில் படத்தில் பிண்ணனி இசையே இல்லையோ என்று தோன்றுகிறது . அதுவே சில நேரங்களில் காட்சிக்கு வலுவாகவும் , சில நேரங்களில் தொய்வாகவும் இருக்கிறது . சந்தானத்தின் மற்றும் விவேக்கின் சில டைமிங் காமடிகளுக்கு சிரித்துத்தான் ஆகவேண்டும் .

அஜித் இளமையாக இருக்கிறார் . அழகான நடிப்பு . கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் இல்லாவிட்டால் , " வாலி " படத்து அஜித் தான்.

இது அஜித் ரசிகர்களுக்கான படம் அல்ல , கதைப் பிரியர்களுக்கான படம் . ஒரு ஸ்மால் அடித்துவிட்டு , சாயங்கால ஶோவில் , கதையில் லயித்து , தனிமையில் படம் பாருங்கள் , உங்களுக்கு இது பிடித்துப் போகும்.

மீண்டும் வருகிறேன் .

No comments: