Monday, May 7, 2007

பாட்டி :

பழைய விகடன் ஓன்று கிடைத்தது . சும்மா புரட்டிக்கொண்டிருந்தேன் . அதில் ஒரு கதை . பேரன் ஒருவன் தனது , பாட்டியினை ஏமாற்றிவிட்டு வெளியே விளையாட சென்றுவிடுவான் . அவனது அம்மா அவனை அடித்து இழுத்து வருவார்கள் . பாட்டி தான் வெளியே சென்று விளையாட சொன்னார்கள் என்று பொய் சொல்வான் . உடன் பாட்டிக்கு திட்டு விழுகும் . அடுத்த நாள் , அவன் வெளியெ சென்றுவிடாமல் இருக்க , பிரியாணி வாங்கி தருகிறேன் என்று ஆசை காண்பிப்பாள் பாட்டி . அப்படியும் அவன் ஏமாற்றி சென்றுவிடுவான் . வயதாகிவிட்டதால் கூடிய இயலாமையும் , மருமகளின் வசவுகளையும் எதிர்நோக்கி பயத்துடன் பாட்டி காத்திருப்பதாக கதை முடியும் . என்னை பாதித்த கதைகளில் ஒன்று. ஆனால் நான் அந்த சிறுவனை போல் இல்லை . சின்ன வயதில் பாட்டியின் அருகிலேயே இருப்பேன் . அம்மாவின் அம்மா . ஆச்சி என்று கூப்பிடுவேன் . மிகவும் பாசமாக இருப்பார்கள் .
நான் பிறந்த சமயத்தில் அம்மாவிற்கு உடம்பு முடியாமல் போனதாகவும் , அதனால் நான் என் பாட்டியிடம்(ஆச்சியிடம்) தான் இருந்தேன் என்றும் , அதனால் தான் எனக்கு ஆச்சியிடம் பிரியம் அதிகம் என்று அம்மா கூறுவார்கள் .ஆனால் எனக்கு ஆச்சியிடம் பிடித்தது அவர்களின் கதை தான் . கதை சொல்லிக்கொண்டே சாப்பாடை உருட்டித் தந்து என்னை சாப்பிட வைத்துவிடும் சாமர்த்தியம் ஆச்சிக்கு மட்டுமே உண்டு. அம்மாவால் கூட அது முடியாது .நான் , என் அத்தை ( என்னை விட ஒரு வயது தான் அதிகம் அவளுக்கு ! ) மாமா பையன்களான ஜொதிஸ் , சுரேஶ் , அஸ்வின் என அனைவரும் பெரியாச்சியின் அருகில் உட்கார்ந்து கொண்டு , கையில் உருண்டை வாங்கி சாப்பிடுவோம். அதுவும் தட்டில் கடைசியாக இருக்கும் சாத உருண்டையினை நெய் உருண்டை என்று சொல்வோம் . அது அவ்வளவு ருசியாக இருக்கும் . அந்த நெய் உருண்டைக்காக இந்தியா - பாகிஸ்தான் ரேஞ்சிற்கு யுத்தம் நடக்கும் . ஆனால் , பெரியாச்சி உருட்டித்தருகிறார்கள் என்றால் , நான் அன்- அப்போஸ்டாக ஜெயித்து விடுவேன் . இனி வெளிவரும் அஜித்தின் படங்கள் வெற்றி பெறுவது எவ்வளவு நிச்சயமோ , அவ்வளவு உறுதியாக கூறலாம் , எனக்கு தான் நெய் உருண்டை கிடைக்கும் .
அது மட்டும் அல்ல . ஆச்சிக்கு கொஞ்சம் பெரிய சாரிரம் . அவர்களால் ரொம்ப தூரம் நடக்க முடியாது. ஆட்டோ இல்லை ரிக்ஶா தான் . அதனால் நான் பாட்டியுடனே இருப்பதால் , எனக்கும் அந்த சவாரி கிடைக்கும் .
ஒருநாள் ஆச்சி வீட்டில் எதோ இருக்கமன சூழ்நிலை . எல்லாரும் அமைதியாக இருந்தார்கள் . அப்பொழுது ஆச்சி திடிரென்று வழக்கமாக பெரும் சப்ததொடு ஏப்பம் விடுவது போல் ஏப்பம் விட , அவர்கள் மடியில் தூங்கி கொண்டிருந்த என் தங்கை , திடீரென முழித்து கத்த , அதை பார்த்துகொண்டிருந்த நானும் சித்தியும் சிரிக்க , வீடு திடீர் என கலகலப்பாகி விட்டது . பாட்டியிடம் எனக்கு பிடித்த இன்னொரு விசயம் , அவர்களது கைகள் . அவர்களது கைகள் , சுருக்கம் விழுந்து , தொள தொள வென இருக்கும் . எதோ பச்சை குத்தியிருந்தாக ஞாபகம் .தொட்டு பார்த்தால் மிருதுவாக இருக்கும் . அந்த கைகளில் முகம் வைத்து எத்தனையோ நாட்கள் நான் தூங்கி போயிருக்கிறேன் .
என்னால் மறக்க முடியாத இன்னொரு சம்பவம் இது. என் சின்ன வயதில் நடந்தது . ௧ அல்லது ௨ படித்துகொண்டிருந்தேன் என நினைக்கிறேன் . சின்ன தாத்தாவுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது , வீலுக்குள் கால் விட்டு விட்டேன் . நல்ல அடி . ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது . உடனே டாக்டரிடம் சென்று கட்டு போட்டு விட்டு வந்தோம் . இது அப்பாவிற்கு தெரியாது . அந்த நாட்களில் , அப்பாவிற்கு அதிகமாக கோபம் வரும் .காரணம் இல்லாமல் சீப்பை எடுத்து விலாசி விடுவார் . இப்பொழுதும் அப்படித்தான் . ஆனால் இப்பொழுது வருவது இயலாமையினல் வரும் கோவம் . எனக்கு அடிபட்டது தெரிந்தால் , இன்னும் அடிவிழுகும் . பாட்டிக்கோ , அடிபட்டது தெரிந்தால் இனி இங்கு அனுப்ப மாட்டாரோ என்ற பயம் . பாட்டியின் மடியில் உக்கார்ந்து கொண்டு , கட்டு போட்ட காலை பாட்டியின் சேலைக்குள் ஒளித்துவைத்து கொண்டேன் . அப்பா வந்தார் .அன்று மட்டும் , என்ன காரணத்தினாலோ , எனக்கு மிட்டாய் வாங்கி வந்திருந்தார் . ’குமார் இங்க வா’ என்று கூப்பிட்டார் . என்னால் தான் நடக்க முடியாதே . மிட்டாய் வேண்டாம் என்றேன் . கோவம் வந்து விட்டது . அடிக்க வந்தார் . பாட்டி தடுத்து சொல்லி பார்த்தார்கள் . அப்புறம் தான் எனக்கு அடிபட்டது அப்பாவிற்கு தெரிய வந்தது .உடனே என்னையும் , அம்மாவயும் கிளம்ப சொன்னார் . அப்பொழுது ஆச்சி , ’ அய்யா , அய்யா . தெரியாம நடந்திடுச்சு , பையன அடிக்காதிங்க . மறுபடியும் கூட்டிட்டு வாங்க ’ என கெஞ்சியது இன்னும் நினைவில் இருக்கிறது . அப்படியும் உடனே கிளம்பி விட்டோம் என்றே நினைக்கிறேன் .
பின்னர் வியாபரத்தில் , எற்பட்ட சண்டை காரணமாக அப்பா தாத்தா வீட்டிற்கு செல்ல கூடாது என்று சொல்லிவிட்டார் . மதுரையில் இருந்துமே கிட்டதட்ட ௫ - ௬ வருடங்கள் ஆச்சியய் பார்க்க வில்லை . அவ்வபொழுது ஏதாவது செய்தி வரும் .தாத்தா இறந்ததிற்க்கு கூட என்னை அனுப்பவில்லை . அம்மா மட்டும் தான் போய் வந்தார்கள் . பின்னர் அந்த உறவே இல்லாதது போலாகிவிட்டது .நாங்களும் நாகர்கோவில் , திருநெல்வெலி , கோவில் பட்டி என்று ஊர் மாறிக் கொண்டு இருந்தோம் . எனக்கு தெரிந்து அதற்கு அப்புறம் நான் ஆச்சியய் பார்த்தது , காலேஜ் முதல் வருடத்தில் தான் . அதுவும் , அப்பாவிற்கு தெரியாமல் மதுரை போய் பார்த்த பொழுது தான் .அப்பொழுது ஆச்சி நிறைய அழுதார்கள் . ரொம்ப நாள் கழித்து ஆச்சி கையினால் உருண்டை வாங்கி சாப்பிட்டேன் . ஆனால் இந்த தடவை ஜோதிஸ் , அஸ்வின் , அத்தை என யாரும் சண்டைக்கு வர வில்லை . அவர்களுக்கு ஆச்சியய் தவிர வேறு பல விசயங்கள் முக்கியமானவயாக இருந்தன .
நல்லா வாழ்ந்தவன் சீரழிய கூடாது என்பர்கள் . ஆனால் என் பாட்டியின் விசயதில் அது தான் நடந்தது . மாமவிற்க்கு வியாபாரத்தில் நஶ்டம் . சொந்த வீட்டை விற்று விட்டு ஒரு சிறிய வீட்டிற்க்கு வந்தார்கள் .பின்னர் அதுவும் இல்லாமல் , இன்னொரு சொந்தம் வீட்டில் தங்க வேண்டியது வந்தது . முன்னெல்லாம் பாட்டியய் பார்த்துவிட்டு திரும்பினால் , கண்டிப்பாக பையில் நூறு ருபாய் இருக்கும் . பின்னர் அது ஐம்பது ௫ , இருபது ௫ என்றானது . ஆனால் இல்லாமல் இருந்ததில்லை . தனது கடைசி நாட்களில் ஆச்சி அமைதி இல்லாமல் இருந்தார்கள் என்று தான் நினைக்கிறேன் . தனது பையன் வீட்டிலும் இல்லாமல் , பெண் வீட்டிலும் ( எனது வீட்டில் ) , இன்னொருவன் வீட்டில் இருக்கிறோமே என்று அவர்கள் நினைத்திருக்க கூடும் . ஒரு தடவை பார்த்த பொழுது , இப்பொல்லாம் ஜோதிஸ் , அஸ்வின் யாரும் தன்னை வந்து பார்பதில்லை என்று கூறி வருத்தபட்டார்கள் . அப்பா நிலைமை சரி இல்லததால், ஆச்சியய் வீட்டிர்க்கும் கூட்டி கொண்டு வர முடியவில்லை.
வேலை கிடைத்த முதல் மாத சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்து , அதில் ஆச்சிக்கு ஒரு சேலை வாங்கி கொடுக்க சொன்னேன் . அம்மாவிற்கு சந்தோசம் . பின்னர் தீபாவளி , பொங்கல் போன்ற விஶேசங்கலுக்கு ஆச்சியய் பார்க்க சென்று , எதாவது துணி மணி எடுத்து கூடுப்பேன் , இல்லாவிட்டால் காசு கொடுப்பேன் . அம்மா கொடுத்தாக சொல்வேன் .
ஒரு தடவை ஆச்சியய் பார்க்க சென்ற பொழுது , எனது மொபைலில் கால் வந்தது . அதை பார்த்து விட்டு , ஆச்சி , ’ குமாரு, எனக்கும் ஒரு போன் வாங்கி கொடுப்பியா என்றார்கள் . அம்பானி உதவிக்கு வந்தார் . ரிலையன்ஸ் போன் ஆச்சிக்கு வாங்கிகொடுத்தேன் . அடுத்த நாள் முதல் , என் வீட்டில் காலை நான் எழும் பொழுது , அம்மா ஆச்சியிடம் ’ ஆமா இன்னக்கி சம்பார் வைச்சு , வெண்டைக்காய் பொரியல் வைச்சிகலாம்னு பார்கிறென் ’ என்று பேசுவது வாடிக்கை ஆகி போனது .
எனது வண்டியெய் பார்த்து விட்டு , நல்லா இருக்கு . பின்னாடி உக்காருரதுக்கு ஒரு கைபிடி மாதிரி மாட்டிக் கொண்டு வா . நானும் ஒரு தடவ உன் கூட வண்டில வரென் என்றார்கள் . அதற்கான சந்தர்ப்பம் பின்னர் வரவே இல்லை .பஜாஜில் வேலை பார்த்துகொண்டிருந்த சமயம் . இயர் எண்டிங் . ௨௬ , ௨௭ ஆம் தேதிகளில்யே வேலை ஆரம்பித்துவிடும் . அன்று ௩0அம் தேதி வேறு . ஆச்சி தவறி விட்டதாக தகவல் வந்தது . தூங்கும் பொழுது மரணம் . மானேஜரிடம் சொல்லி விட்டு கிளம்பினேன் . ஆனால் நான் செல்வதற்குள் எடுத்து விடுவோம் என்றார்கள் . மழை காலம் வேறு , அதனால் தான் சீக்கிரம் எடுத்து விடுவோம் என்றார்கள். இன்னொருவர் வீது என்பதல் , அம்மவாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை .மாமாவும் சொல்லும் நிலைமையில் இல்லை . சில மாதங்கள் கழிந்து நான் , மதுரைக்கு சென்றிருந்த பொழுது ஜோதிஸை பார்க்க நேர்ந்தது .இருக்கும் பொழுது தெரியாத ஒரு பொருளின் மதிப்பு , அது இல்லாவிட்டால் தான் தெரியும் என்பது போல , அப்பொழுது ஜோதிஸ் என்னிடம் சொன்னது , ’ ஆச்சி கையால உருண்டை வாங்கி சாப்பிடனும் போலிருக்கு அத்தான் ’ என்றான் . உண்மையிலேயே தான் சொன்னானா , இல்லை எனக்காக சொன்னானா என்று தெரியவில்லை .
அன்பும் , பாசமும் கிடைக்க , விலை கொடுக்க வேண்டி வரும் இந்நாளில் , என்னை பொருத்தவரை ஆச்சிகள் போன தலைமுறையின் நினைவுகள். எவ்வளவு தான் கொடுத்தாலும் , அவர்களின் அந்த அளவற்ற உண்மையான அன்பு இனியும் வேறு இடத்தில் கிடைக்குமென்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை . இருப்பவர்கள் புரிந்து கொண்டு வாழ்க !!!
பின்குறிப்பு : இந்த பின்னல் , விஸ்கியோ , ரம்மோ , வேறு எந்தவித உட்கொள்ளலும் இல்லாமல் , பூரண சுயநினைவுடன் எழுதியது .

No comments: