Thursday, July 26, 2007

ஜாதிய ஆதிக்கம் :

மெல்ல மெல்ல எனக்குள் ஜாதிய ரீதியிலான எண்ணங்கள் மேலெழுந்து வருகிறது . ஏன் , எப்படி என்று தெரியவில்லை . அவை தேவை என்ற எண்ணம் தோன்றுகிறது . என் அப்பா யாருடனும் முதலில் பரிச்சயப்படும் பொழுதும் பேச்சினுடே கேட்கும் கேள்வி " நீங்க என்ன ஆளுங்க ? " என்பது தான் . அப்பொழுதெல்லாம் எனக்கும் சுரிர் என கோபம் வரும் . ஆனால் இப்பொழுது எனக்கும் ஜாதிய ரீதியிலான வேறுபாடுகள் தேவை தான் எனத் தோன்றுகிறது .

சமீபத்தில் ஒரு வாராந்திர நாளிதழில் ஜாதிகளைப் பற்றியும் அது குறித்த மற்ற குறிப்புகளையும் படித்தேன் . பிறந்த குலத்தை வைத்து , அவரவர் செய்யும் தொழில்களை பொறுத்தும் வரையறுக்கப்பட்டது ஜாதி .இன்னின்ன ஜாதியினர் இன்னின்ன வேலைகளைத் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது அந்நாளில் . உலகம் கையிடுக்கில் சுருங்கிக் கொண்டுவரும் இந்நாளில் பழைய பஞ்சாங்க முறைகளையும் , ஆச்சாரங்களையும் நம்பியிருப்பது கேவலம்

எனது கம்பனியில் வேம்பு என்ற ஒருவன் இருக்கிறான் . ஐயன் . சுத்தம் சுகாதாரம் என ஊரறிய வாய்கிழிய பேசுவான் . தனது துணி ஸ்டாண்டின் மேல் மற்றவர் கை பட்டால் கூட , கற்பு போய் விட்டது போல கத்துவான் . " தான் " என்ற அகங்காரம் அதிகம் உண்டு அவனிடம் . தன்னம்பிக்கை இருப்பது நல்லது . ஆனால் " தான் " தான் என்ற நம்பிக்கை இருப்பது தவறு . ஐயனுகளுக்கே உரித்தான கஞ்சத்தனமும் உண்டு அவனிடம் . அவனுடன் பழகிப் பழகி , அவர்களது அந்த " தான் " என்ற அகந்தையினை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது . அதுவே வெறியாகி விட்டது .

தாழ்த்தப்பட்டவன் என்ற எண்ணமே யாரிடமும் இருத்தல் கூடாது . இன்னமும் தனது ஜாதி தான் உயர்ந்தது என்று நம்புபவர்களை விஜயகாந்தின் படங்களை தொடர்ந்து பார்க்கச் சொல்ல வேண்டும் ( மரண தண்டனையினை விட கொடிய தண்டனையாக இருக்கும் இது ) .

’ தான் ’ என்ற ஆணவத்தினையும் , தான் செய்வதெல்லாம் சரி என்ற அவர்களது எண்ணத்தினை அழிக்க வேண்டும் . இந்த விபரித எண்ணத்தினால் தான் குலக் கல்வி முறையினைக் கொண்டுவந்தார் ராஜாஜி . அதனாலேயே ஆட்சியினையும் இழந்தார். இனியும் அதுபோல எண்ணங்கள் கொண்டு வரும் யாராக இருந்தாலும் இதனையும் விட அதிகமான சம்மட்டி அடி அடிக்க வேண்டும் . இத்தகைய எண்ணங்கள் கொண்டு வருபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவே ராமதாஸும் , திருமாவும் தத்தமது ஜாதிக்காக போராடுகிறார்கள் போலும் !! . அதுவே அவர்களது எண்ணமாக இருந்தால் , அது தவறில்லை என்பேன் நான் .

மேல் ஜாதியினர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களை , இடஒதுக்கீட்டின் மட்டும் மட்டம் தட்டினால் போதாது , இன்னமும் ஏதாவது செய்து ஒடுக்க வேண்டும் . இப்பொழுதைக்கு என்னால் முடிந்தது வேம்பு சொல்லும் அல்லது செய்யும் எந்த ஒரு விஶயத்திற்கும் தடையாக இருப்பதே . தவறு என்று தெரிந்தாலும் , கண்டிப்பாக மீண்டும் மீண்டும் செய்வேன் . அவர்கள் தோற்று தலைகுனியும் பொழுது , எதனையோ சாதித்துவிட்டது போல ஒரு தோன்றுதல் .

இதனை எழுதும் பொழுது , பள்ளி நாட்களில் படித்த ஒரு சிறுகதை தான் ஞாபகத்திற்கு வருகிறது . கூரை வேய்யும் ஒரு கூலித் தொழிளாளி ஒருவன் , உடம்பு முடியாமல் வீட்டில் படுத்திருப்பான் . அப்பொழுது அவ்வூரின் பண்ணையார் அவனைத் தனது வீட்டின் கூரை வேய வேலைக்கு அழைப்பார் . தனது மனைவி தடுத்தும் , அத்தொழிளாளி வேலைக்குச் செல்வான் . அதன் காரணமாக அவன் கூறுவது , கூரை வேயும் சமயத்தில் அவன் உச்சியில் இருப்பதும் , முதலாளி கீழே இருப்பதுமாகும். கதையினை படித்த அந்நாட்களில் அத்தொழிலாளியின் அற்ப சந்தோஶம் என்றே நினைத்தேன் . இப்பொழுது தான் அதன் வீரியம் புரிகிறது . இதுபோல இன்னும் பல கதைகள் வரவேண்டும் , அதனை நான் படிக்க வேண்டும் .

இதில் முக்கியமான விஶயம் என்னவெனில், இன்னமும் எனது ஜாதி என்னதென்று தெளிவாகத் தெரியவில்லை . ஸ்காலர்ஷிப் வேண்டி எனது ஜாதியினை எனது தந்தை மாற்றினார்( சர்ட்டிவிகேட்டில் மட்டும் ) என்பதைத் தவிற வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை எனக்கு . இன்னமும் தெரியாது .

தெரிந்துகொண்டு மீண்டும் வருகிறேன் .

Tuesday, July 24, 2007

சாப்பாடு :

சாப்பாட்டினைக் குறித்து நான் எழுதுவேன் என கனவிலும் நினைத்ததில்லை . காரணம் உண்டு . நேற்று கிரிடம் படம் பார்க்கச் சென்றேன் . ஒன்றரைக்கு ஶோ. நான் பத்தரைகே அந்த ஏரியாவிற்கு சென்றுவிட்டேன் . அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை விஶேசம் . கண்டிப்பாக அனைவரும் நமாஸ் செய்வார்கள் . வெள்ளிக்கிழமை பன்னிரென்டு மணியில் இருந்து ஒரு மணி வரை , அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும் . மீறி திறந்து வியாபாரம் செய்யும் கடைகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.

வேறு வழியில்லாது நாற்பத்திநான்கு டிகிரி " குளிரில் " நின்று கொண்டிருந்தேன் . நேரம் களைய வேண்டி , சுற்றிக் கொண்டிருந்த பொழுது தான் " சரவணபவன் " ஹோட்டலைக் கண்டேன் . இதுவும் ஒரு மணிக்கு தான் திறக்கும் . ஏதாவது வெரைட்டி ரைஸ் சாப்பிட்டு விட்டு , படம் பார்க்கலாம் என நினைத்து காத்திருந்தேன் . தமிழ் பாசம் பொங்க , ஒரு மணிக்கு திறந்ததும் முதல் ஆளாய் உள்ளே சென்றால் , வெரைட்டி ரைஸ் இல்லை , புல் மீல்ஸ் தான் இருக்கிறது என்றார்கள் . பசியில்லை , சாப்பிட எப்படியும் இருபது நிமிடம் ஆகிவிடும் , அதன் பின் தியேட்டர் சென்றால் , படத்தில் முதல் சில காட்சிகளை பார்க்கமுடியாது என்று நினைத்தவாறே எழுந்தேன் . கிண்ணத்தில் காரக்கொழம்பைக் கண்டதும் , என்னையும் அறியாமல் , புல் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன் . சாப்பிட்டு முடித்து , டாக்ஸி பிடித்து சென்று , படத்தை முதலில் இருந்து பார்த்தது தனிக் கதை . எனினும் காரக்கொழம்பா ஆஜித் படமா என்றபொழுது , காரக்கொழம்பு வென்றதன் காரணம் பிடிகிட்டவில்லை !!!

என்றென்றுமே சாப்பாட்டிற்கு நான் மதிப்பளித்ததில்லை . பத்தாவது வரை சுவையான அம்மா சமையல் . பதினொன்றும் பன்னிரென்டாவதும் பாட்டி, மற்றும் அத்தையின் சமையல். அந்நாட்களில் ஹோட்டல் பக்கம் சென்றதில்லை . ப்ளஸ் டூ படிக்கும் பொழுது , அவ்வப்பொழுது ’புல்சே’வுக்கு அடிமையாகி ஹோட்டலுக்கு செல்வது உண்டு . அதிசயமாக ஏதாவது வாங்க வேண்டி , டவுன் சென்றால் மறக்காமல் நானும் அம்மாவும் சாம்பார்வடை சாப்பிடுவோம் . அம்மாவுக்கும் எனக்கும் பிடித்த டிஶ் அது . மற்றபடி டீ ,காபி மட்டும் அடிக்கடி குடிப்பேன் .அசைவம் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது . என்னவளின் வீட்டில் தான் முதலில் அசைவம் சாப்பிட்டேன் . பின்னர் அதுவும் இல்லை . கல்லூரியில் சிவா புண்ணியத்தினால் தான் சிக்கன் ஆரம்பம் . இன்றும் தொடர்கிறது . பின்னர் கடலை வீட்டில் , பறப்பது , நடப்பது , நீந்துவது , ஊர்வது எல்லாம் சாப்பிடலாம் . சாப்பிட்டோம் !! கல்லூரியில் ஹோட்ட்ல் சாப்பாடு , மற்றும் மெஸ் சாப்பாடு !! அவ்வளவுதான் எனக்கும் சாப்பாட்டிற்கும் எனக்கும் இருந்த தொடர்பு !!

வேலைக்குச் சேர்ந்த பின் தான் ஹோட்டல் வாசம் . மைசூர் , சிமோகா , பெங்களுரு வில் ஆரம்பித்து , இன்று அபுதாபி வரை ஹோட்டல் சாப்பாடு தான் .எனக்கு இன்னமும் மீன் சாப்பிடத் தெரியாது .காலேஜில் பாலாஜி முள் எடுத்துத் தருவான் . என்னவோ மீன் சாப்பிட , இன்றுவரை எனக்கு பிடிக்கவில்லை .ஆனால் மைசூர் அருகே , ஒரு கையேந்தி பவனில் கிடைக்கும் மீன் சாப்பாடு கலக்கலாக இருக்கும் . மைசூர் சென்றால் அதற்காகவே பஸ் பிடித்து , எம்.ஆர்.யேப் செல்வேன் . பின்னர் சாப்பாட்டு விஶயத்தில் முக்கியமாக சொல்லப்பட வேண்டியது பஜாஜ் உமாசங்கரை . சரவணபவனையும் , சங்கீதாவையும் , அஞ்சப்பரையும் , அவற்றின் சுவையினையும் அறிமுகப்படுத்தியது அவர் தான் . அவருடனே சுற்றிக் கொண்டிருந்ததால் , நானும் அவருடனே சாப்பிட வேண்டியதாகிவிட்டது . காசு அதிகம் செலவாகிறது என்று சரவணபவன் பக்கம் செல்வதே இல்லை . பின்னர் அதற்கே அடிமையாகி அடிக்கடி சென்றதும் உண்டு .அண்ணாச்சி எப்படியோ , அவரது ஹோட்டலில் சாப்பாடு அமர்க்களமாக இருக்கும் . சாம்பார் சாதம் சரவணபவனின் ஸ்பெஶல் . மீல்ஸில் இருக்கும் சாம்பார் வேறு சுவையுடையதாய் இருக்கும் . தனியாக சாம்பார் சாதமும் , அப்பளமும் , காசு அதிகம் இருந்தால் தயிர் வடையும் வாங்கிச் சாப்பிட்டால் , வேண்டாம் எழுதும் பொழுதே எச்சில் ஊறுகிறது !!

ஒருநாள் நல்ல பசி . நானும் கூவமும் வடபழனி சரவணபவன் சென்றோம் . கீழே கூட்டமிருந்ததால் , மாடியில் ஏசி ரூமில் அமர்ந்து சாப்பிட்டோம் . பக்கத்து டேபிளுக்கு வந்த பில்லைப் பார்த்ததும் தான் தெரிந்தது , ஒரு மீல்ஸ் கிட்டத்தட்ட தொண்ணூறு ரூபாய்க்குப் பக்கத்தில் என்று . என்ன செய்வது , கை நனைத்தாகிவிட்டது . வெளுத்துக் கட்டினோம் . பர்ஸ் காலியாகி , வயிறு நிரம்பி வெளியே வந்தோம் . !!

என்னால் மறக்க முடியாத சாப்பாடு என்றால் அது பாலச்சந்தரின் வீட்டில் சாப்பிட்டது . சாதம் , பருப்பு , சாம்பார் , காரக்கொழம்பு , ரசம் , தயிர் , குடிக்க மோர் , இரண்டு சுவீட் , கடைசியாக வாழைப்பழமும் என்று அசத்திவிட்டார்கள் . பின் கார்த்தீ வீட்டு சாப்பாடு . சாதமும் , சிக்கன் கொழம்பும் , சிக்கன் வறுவலும் , ரசமும் . சாப்பிட்டு அது செரிக்க வேண்டி , வீட்டிற்கு செல்லும் முன்பும், திரும்பும் பொழுதும் நடந்தே அழைத்துச் சென்றான் கார்த்தி!! கடலை வீட்டு அசைவமும் , குறிப்பாக இறாலும் , கூவம் வீட்டின் நுரை ததும்பும் சூடான காபியும் , காரக்கொழம்பும் , அசோக் வீட்டு முட்டைக்கொழம்பும் , சிவா பாதி சாப்பிட்டு , மீதியில் சமைக்கும் , அவனால் டேஸ்ட் பார்க்கப் பட்ட பிரியாணியும் என்றென்றும் எனது பேவரிட் !!

சூடான , நிதானமாக , நேரம் பார்த்து வடிக்கப்பட்ட , பளீர் வெள்ளை சாதத்தில் காரக்கொழம்பை விட்டு சாப்பிடும் சுகம் அலாதியானது . அதற்கு சற்றும் சளைக்காதது , ரசம் விட்டு சாப்பிடுவது . இரண்டும் அற்புத சுவை .வடபழனியில் இருக்கும் பொழுது கிட்டத்தட்ட ரசத்தின் அடிமையே ஆகிவிட்டேன் . தினமும் ’தாமுவின் ஆளை’ ரசம் வைக்கச் சொல்லி சாப்பிட்டது நினைவிருக்கிறது .

சுவையான மோர்க்கொழம்பும் , காரட் அல்லது கத்திரிக்காய் பொரியல் இருந்தால் , வயிறு வெடிக்கும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பேன் .கூடவே மோர் மிளகாய் இருந்தால் , கேட்கவே வேண்டாம் . அதுபோலவே புளியோதரையும் , எலுமிச்சை சாதமும் . தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னியும் , கையில் விகடனும் இருந்துவிட்டால் , அதனையும் விட உலகில் வேறு எதுவும் வேண்டுமா என்ன ?

அதுபோலத் தான் அம்மா பண்ணும் தேங்காய்ச் சாதமும் , வெங்காயச் சட்னியும் .வெங்காயச் சட்னிக்காகவே கூடுதல் ஐந்தாறு சூடான இட்லிகள் அடிக்கலாம் !! மதுரை ஆரப்பாளயத்து கையேந்திபவனில் , சுகாதாரம் இருக்கிறதோ இல்லையோ , சுவைக்கு நான் கியாரண்டி . இட்லியினையும் , முட்டைத் தோசையினையும் அவர்கள் எடுக்கும் விதமே தனி !! தண்ணியா சாம்பாரா எனக் குழப்பம் வந்தாலும் , சாம்பார் சுவையாகவே கிடைக்கும் .

இங்கு அபுதாபியில் ஹோட்டலில் தினமும் அசைவம் சாப்பிட்டு , முகத்தில் அடித்து விட்டது . தினமும் சிக்கன் . என்ன ஒன்று அது சில்லியா , சுக்காவா , மசாலாவா என்பதில் தான் வேறுபாடு !! இங்கும் நல்ல தமிழ் சாப்பாடு கிடைக்கும் , ஆனால் அதற்கு மெயின் எரியா செல்ல வேண்டும் . காசும் ரொம்பவே அதிகம் . சரவணபவன் , சங்கீதா , செட்டிநாடு , தலைப்பாக்கட்டு என்று அனைத்து ஹோட்டல்களும் இருந்தாலும் , தூரமாக இருக்கின்றன . தினமும் டாக்ஸியில் சென்று சாப்பிடுவது கட்டுப்படியாகாது . அந்தக் காசில் , தமிழ்நாட்டில் ஒரு ஹோட்டலே நடத்தலாம் !!

அமிர்தமே என்றாலும் , அம்மா சாப்பாட்டிற்கு அருகில் வருமா ?

காத்திருக்கிறேன் , மே - ஜூன் மாதத்திற்காக !!

மீண்டும் வருகிறேன் !!

நொட்ஸ் இரண்டு :

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் , பாலாஜியின் காமடி குறையாமல் திகட்டுகிறது . இவனைப் பற்றி எழுதினாலே மனதிற்குள் மகிழ்ச்சி .

தாமுவுடனும் , பிரசன்னாவிடமும் நொட்ஸின் காமடிகள் இவை !!

தாமுவும் , நொட்ஸும் போனில் பேசுகிறார்கள் .
நொட்ஸ் : ஹலோ தாமு?
தாமு : ம். சொல்லு மச்சி !! எப்படீ இருக்க? ( இன்கமிங் கால்களில் மட்டுமே நலம் விசாரிப்பது தாமுவின் வழக்கம் )
.நல்லாயிருகேன்டா , நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன் மச்சி .
அப்புறம் என்ன விஶேசம் ?
ஒண்ணுமில்ல , சும்மா தான் கால் பண்ணுனேன் . ஆமா நீ எங்க இருக்க ? ஆபிஸ்ல மச்சி .
ஏன் என்ன விஶயம் ?
பக்கத்துல பிரசன்னா இருந்தா குடு மச்சி , அவன்ட்ட பேசணும் .!!

வாரத்திற்கு ஒரு தடவை போன் பண்ணி , தான் நொட்ஸ் தான் என்று நிருபிக்காவிட்டால் , பாலாஜிக்கு தூக்கம் வராது போலும் !!

தாமுவின் நிலைமையினை என்னால் உணர முடிகிறது . ஆபிஸ் சமயத்தில் , பொங்கி வரும் சிரிப்பினைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்திருப்பான் , பாவம் .

தாமுவிடம் நம்பர் வாங்கி பிரசன்னாவிற்கு போன் பண்ணுகிறான் நொட்ஸ் . திருப்பதியில் இருந்ததினால் , அச்சமயத்தில் நொட்ஸ் செய்த காமடிகள், இன்னமும் கிடைக்கப் படாத புறநானூற்று ஓலைகளைப் போல, தெரிந்தால் பாக்கியம் . ஆனால் ஒன்று என்னால் கண்டிப்பாக சொல்ல முடியும் , எஸ் டி டி பூத்தில் " பெங்களூர் கால் பண்ணணும் , இந்தியாவோட ஐ.எஸ்.டி கோட் என்ன ஸார் ? " என்று கேட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது . !!

நொட்ஸ் : ஹலோ , பிரசன்னா ஸார் இருக்காங்களா ? ஹிஹி ஹி .. ( அந்த சமயத்தில் நொட்ஸின் குரலிலும் , முகத்திலும் தோன்றியிருக்கும் எதனையோ சாதித்துவிட்ட திருப்தியினையும் , எகதாளத்தையும் வார்த்தயால் விவரிக்க முடியாது. )
பிரசன்னா : சொல்லு , நட்பே . எப்படியிருக்க ? என்ன திடீருனு போன் ?ஒண்ணுமில்ல மச்சி , சும்மாதான் பண்ணுனேன் . நீ நல்லாயிருக்கியா ? நல்லாயிருகேன்டா , உங்க வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா ? நல்லாயிருக்காங்க மச்சி , முக்கியமான விசயம் ஒண்ணு சொல்லணும் . நீ பாட்டு கலராகணும்னு , சிவா அண்ணி கொண்டுவந்திருக்கிற குங்குமப்பூவ சாப்பிட்றாதடா , அது என் தங்கச்சிக்கு வேணும் !!

அதுவரை அண்ணி குங்குமப்பூ கொண்டுவந்த விசயம் பிரசன்னாவிற்கு தெரியாது . மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என நான் சொல்லத் தேவையில்லை . " நீ நடந்தால் நடையழகு " .பாடலை பிரசன்னாவை வைத்து பாடி , கலங்கியிருப்பான் நொட்ஸ் !!

நுணமும் தன் வாயால் கெடும் என்று சொல்வார்களே , அது போல தான் நொட்சும், தனது வாயாலயே கெடுவான் , மற்றவரை சிரிக்க வைப்பான் !!

பின்னர் ஒருநாள் இதுகுறித்து நொட்ஸிடம் கேட்டேன் . அதற்கு பதிலாக நொட்ஸ் உதிர்த்த தத்துவ முத்து ... " அது ஓண்ணுமில்ல மச்சி , " ஊத்தி வைக்கிற பாத்திரத்த பொருத்து தான் தண்ணியோட வடிவம்ன்னு சொல்லுவாங்கள்ல , அதுமாதிரி தான் மச்சி , மத்த எல்லார்டையும் கரெக்டா தான் மச்சி பேசுறேன் . இந்த தாமுட்ட பேசுறப்ப தான் மச்சி தடுமாறிடுறேன் !! அது என் தப்பில்ல மச்சி , தாமுவோட டைப்பு !! " என்று டி ஆர் பாணியில் முடித்தான் !! முத்தாய்ப்பாக என்னிடம் " நாயே , நீ தான் எல்லாத்துடையும் போன் பண்ணி இத பரப்புறியா ? அதுக்கு பேசாம போஸ்டர் அடிச்சி ஒட்டிறேண்டா ?? " பின்னர் அவனே சொன்னான் , " இனி இத நெட்டுல போடுறது தான் பாக்கி , இதையும் நெட்ல போட்டுறாதடா , சாமி உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறேன் " .

போட்டாச்சு நொட்ஸ் . உனது அடுத்தடுத்த காமடிக்காகவும் , உன் பாஶையில் " தடுமாற்றத்திற்காகவும் " காத்திருக்கிறேன் !!

மீண்டும் வருகிறேன் !!

Saturday, July 21, 2007

கிரிடம் :

ஹிரோ ஒரே சமயத்தில் பத்து பதினைந்து பேரை அடிக்கும் சாகசம் இல்லை . கட் பண்ணினால் பாரின் லோகேஶன் கனவுப் பாட்டு இல்லை , சந்தனைத்தையும் குங்குமத்தையும் குழைத்து முகத்தில் பூசிக் கொண்டு எதிரிகளைக் கொல்லும் சினிமாத்தனம் இல்லை . டீக்கடையில் டீ குடிப்பதையே கூட சாகசமாக கருதி பஞ்ச் டயலாக் அடிக்கும் ஹிரோ இல்லை. ஹாஸ்பிடல் செலவு வைக்கும் , காது கிழிக்கும் அதிரடி இசை இல்லை .ஐந்து பாட்டு , நாலு பைட் என்ற வழக்கமான பார்முலா இல்லை . பின் இப்படத்தில் என்ன தான் இருக்கிறது ?

படத்தில் அமைதி இருக்கிறது . உணர்வுகளும் உணர்ச்சிகளும் இருக்கிறது . திருச்சியினையே அழகாக காட்டும் திருவின் காமிரா இருக்கிறது . அமர்க்களமான நடிப்பில் ராஜ்கிரணும் , அஜீத்தும் இருக்கிறார்கள் . அழகான காதல் இருக்கிறது . அற்புதமான பாடல்கள் இருக்கிறது . பிரகாஶின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இசை இருக்கிறது . அழகாய் திரிஶாவும் , அதை விட அமர்க்களமாய் அஜித்தும் இருக்கிறார்கள் . முக்கியமாக கதை இருக்கிறது . அதிலும் முக்கியமாக யதார்த்தம் !!

அவனையும் மீறி வாழ்க்கை அவனை விட்டு நழுவிச் செல்கிறது . அவனதும் அவனது தந்தையின் கனவும் கலைகிறது . யதார்த்தமாக செய்துவிட்ட ஒரு காரியத்தால் , குடும்பத்தின் அமைதி கலைகிறது . ஊரே அவனை வேறு கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது . தந்தையும் மகனுக்குமான உறவுப் போராட்டத்தில் கலங்கடிக்கிறார்கள் .

ஒரு ரெளடி தனது தந்தையய் அடிப்பதை தாங்க மாட்டாமல் திரும்ப அவனை அடிக்கிறார் அஜித் . அவன் சாய , ஊரே அஜித்தை ரெளடியாகப் பார்க்கிறது . தான் அப்படி இல்லை என நீருபிக்கும் முன்பாகவே அடுத்தடுத்த சம்பவங்கள் அவனை ரெளடி என நிருபிக்கின்றன . இதனால் அவனது காதல் கலைகிறது . குடும்பமே அவனை ரெளடியாக பார்க்க ஆரம்பிக்கும் பொழுது , அக்குடும்பத்துக்காக வேண்டி வில்லனை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போகிறார் அஜித் . பாலகுமாரன் நாவல்களில் வரும் முடிவு . யதார்த்தமான கதை .

படத்தின் முதற்பாதி அற்புதம் .இரண்டாம் பாதியில் சோகத்தின் சாரல் கொஞ்சம் பலமாகவே இருக்கிறது . அஜித்தின் அறிமுகம் அமர்க்களம் . பிள்ளையார் திருடுவது , திரிஶா துரத்தல் , காதலை தெரிவிப்பது , ராத்திரியில் தொட்டியில் அமர்ந்து இருவரும் பேசுவது , அதனை குடும்பமே கேட்பது என திரையில் சில ஹைகூக்கள் .

சொல்லப்பட வேண்டியது திருவின் காமிரா . படம் பளிச்சென்று இருக்கிறது . படத்தில் அடிக்கடி வந்து போகும் சில மஞ்சள் வெயில் காட்சிகளும் , படத்தின் சோக மூடில் வரும் காட்சிகளும் அற்புதம் . பிரகாஶ் பாடல்களில் தெரிகிறார் . சில சமயத்தில் படத்தில் பிண்ணனி இசையே இல்லையோ என்று தோன்றுகிறது . அதுவே சில நேரங்களில் காட்சிக்கு வலுவாகவும் , சில நேரங்களில் தொய்வாகவும் இருக்கிறது . சந்தானத்தின் மற்றும் விவேக்கின் சில டைமிங் காமடிகளுக்கு சிரித்துத்தான் ஆகவேண்டும் .

அஜித் இளமையாக இருக்கிறார் . அழகான நடிப்பு . கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் இல்லாவிட்டால் , " வாலி " படத்து அஜித் தான்.

இது அஜித் ரசிகர்களுக்கான படம் அல்ல , கதைப் பிரியர்களுக்கான படம் . ஒரு ஸ்மால் அடித்துவிட்டு , சாயங்கால ஶோவில் , கதையில் லயித்து , தனிமையில் படம் பாருங்கள் , உங்களுக்கு இது பிடித்துப் போகும்.

மீண்டும் வருகிறேன் .

சந்திப்புகள் - ஒன்று .

வாழ்வில் தவிர்க்கப்பட முடியாதவை சந்திப்புகள் . கண நேர சந்திப்பு , வாழ்வினையே புரட்டிபோட்டு விடும் வல்லமை வாய்ந்தவையாக இருந்திருக்கின்றன . வரலாற்று உதாரணங்கள் தவிர்த்து, அனைவரது வாழ்விலும் சிற்சில சந்திப்புகள் இருக்கும் , இதுவரை இல்லாவிடில் இனி நிகழும் . எனது வாழ்விலேயே நிறைய சந்திப்புகள் மறக்க முடியாதவை . என்றென்றும் நினைவில் நிற்பவை . சில சந்திப்புகள் அர்த்தமுள்ளவையாக இருக்கும் , உபயோகமுள்ளவையாக இருக்கும் , சில வருத்தப்பட வைக்கும் , சில அறிவுருத்தும் . என்னை யோசிக்க வைத்த சந்திப்பு இது !!

முசாபாவில் இருந்து அபுதாபி செல்ல வேண்டி டாக்ஸிக்காக காத்திருந்தேன் . ஆபிஸ் பயணம் . மனநிலையினைப் பொருத்தும் , பண நிலையய் பொருத்தும் சில சமயங்களில் ஶேரிங் டாக்ஸியிலோ , சில சமயங்களில் தனி டாக்ஸியிலோ செல்வேன் . . சுமார் அரை மணி நேரம் ஆகும் பயணம் . உடன் வர யாரும் இல்லாததால் , தனி டாக்ஸி ஏறினேன் . வழக்கமாக டாக்ஸியில் செல்லும் பொழுது டிரைவருடன் பேசிக் கொண்டே செல்வது வழக்கம் . அப்படி பேசிக் கொண்டே சென்றேன் . டிரைவரின் பெயர் மஜாகான் . பாகிஸ்தான் . மனைவியும் , இரு மக்களும் அங்கு இருக்கிறார்கள் என்பவை பேச்சின் வாயிலாக அறிந்தது .

பேச்சின் போக்கு தமிழ்நாட்டையும் கேரளத்தையும் பற்றிச் சென்றது . நானும் சென்னை , மதுரை என்று பேசிக்கொண்டிருந்தேன் . கருணாநிதி ஆட்சி குறித்து விசாரித்தார் . ஆச்சரியம் அடைந்தேன் . கருணாநிதி பற்றி எப்படி தெரியும் என்றேன் .கருணாநிதி , ஜெயலலிதா என்று ஆரம்பித்து , கேரளத்து உம்மண் சாண்டி , அச்சுதானந்தன் என்று சென்று , ஆந்திர ராமாராவின் வழியே , வாஜ்பாய் , சோனியா என தேசிய அரசியலில் முடித்தோம் . கட்சியினை விட்டு எம்.ஜி .ஆரை நீக்கியது குறித்து கூட பேசினோம் .சினிமாவிலும் சிவாஜி ரஜினியும் ,கமல் , மோகன்லால் , மம்முட்டி தெரிந்திருக்கிறது . ஹிந்தியும் கொறச்சு மலையாளமும் சம்சாரிக்கிறார்.அவரது பரந்த விஶய ஞானத்தையும் , நினைவாற்றலையும் குறித்து வியந்தேன் .

பாகிஸ்தான்காரன் .இவ்வளவு விஶயங்கள் தெரிந்திருக்கிறானே என்ற ஆச்சரியக் குறி தோன்றும் முன் , எப்படி தெரிந்துகொண்டார் ? என்ற கேள்விக்குறியே தோன்றியது. அவன் இதற்கு முன் வேலை செய்த கம்பனியில் தமிழர்களும் , மலையாளிகளும் அதிகம் இருந்தார்களாம் . அவர்களுடன் இன்றும் பேசுவாராம் . அதுவாயிலாக தான் தெரிந்தது என்றார்.

பாகிஸ்தான் குறித்து ஏதாவது பேசி , பதிலுக்கு அவரை வாயடைக்கச் செய்ய வேண்டுமென்று தோன்றினாலும் , என்ன பேச ? இஸ்லாமாபாத்தையும் , முசரப் , பெனாசிர் பூட்டொவையும் தவிர வேறேன்ன தெரியும் ? விஶய ஞானமின்மை குறித்து வெட்கப்பட்டேன் .

இறங்குமிடம் வந்தது . மொபைல் நம்பர் கொடுத்து , டாக்ஸி வேண்டுமானால் போன் பண்ணுங்கள் வருகிறேன் என்று சொல்லி , கிளம்பிப் போய் விட்டார் .
பின்னர் இதுகுறித்து சிந்தித்துப் பார்த்தேன் . கற்க வேண்டும் . விஶயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒன்று பழக வேண்டும் அல்லது படிக்க வேண்டும். வேற்று நாட்டு இலக்கியங்களைப் படிக்க வேண்டும் . புரிந்து கொள்ள வேண்டும் . " நானா அடுத்த சூப்பர் ஸ்டார் - பதறுகிறார் விஜய் ? ? " என்ற பேட்டியினையும் , ஆர்யாவின் அடுத்த ஆறு படங்களையும் பற்றி தெரிந்திருப்பதை விடவும் , இவற்றைக் குறித்து தெரிந்திருப்பது முக்கியம் என்றே நினைக்கிறேன் .

மீண்டும் வருகிறேன் !!

Wednesday, July 4, 2007

நினைவில் நிற்கும் முகங்கள் :

பெற்றோர் , உற்றார் உறவினர் , நண்பர்கள் , அவர்களது சொந்தங்கள் , வேலை விசயமாக பரிச்சயமானவர்கள் , அது தவிர்த்து மற்ற வழியில் பரிச்சயமானவர்கள் ... இவர்கள் அனைவரின் முகங்களும் நம் நினைவில் இருப்பது இயல்பு . அதனையும் தாண்டியும் ஒரு சில முகங்கள் நம் நினைவை விட்டு அகலாது . எனது இதுநாள்வரை வாழ்வில் நான் சந்தித்த அத்தகைய முகங்களின் தொகுப்பு இது .

முகம் ஒன்று : பிலிப்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் .சாலையோர பயணங்களில் மனதினை தொலைத்து நான் பயணிப்பது உண்டு . அதுவும் மதுரை - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் செல்லும் பொழுது , கோவில்பட்டி தாண்டி ஒரு மோட்டலில் டீ காபி சாப்பிடுவதற்காக நிறுத்துவார்கள் . அந்த கால் மணி நேர நிறுத்தத்திற்காக நான் காத்திருப்பேன் . தம் அடிப்பதற்காக !! அந்த வேளையில் டீ அல்லது காபி கண்டிப்பாக குடிப்பது வழக்கம் . சூடான இட்லிக்கு காரசட்னி போல , தம்மிற்கு டீ !! கூட இருந்தால் அற்புதம் !! அனுபவித்தவர்களுக்கு தெரியும் !! அவ்வாறான அனுபவத்தில் இருந்த பொழுது தான் அந்த முகத்தினைப் பார்த்தேன் . வழக்கம் போல் டீ வாங்கிக் கொண்டு , பஸ்ஸுக்கு அருகில் பின்னால் இருக்கும் படிக்கட்டின் பக்கத்தில் வந்து நின்றேன் . அப்பொழுது தான் அந்த முகத்தினைப் பார்த்தேன் . அவன் வெகு நேரத்திற்கு முன்னரே என்னைக் கவனித்திருக்க வேண்டும் . !!

சிறு பிராயம் .கரு நிறம் . இடுப்பில் குழந்தை . தங்கையாக இருக்கலாம் . எண்ணெய் கண்டறியாத தலைமுடி . வெள்ளையாக இருக்கவேண்டிய சட்டையும் கால் ட்ரொசரும் , படிந்து விட்ட அழுக்கின் சாட்சியாக ஆங்காங்கே மஞ்சளூம் கருமையும் கலந்து இருந்தன . இடுப்பில் இருந்த சிறுகுழந்தையின் முகத்தில் மகிழ்ச்சியா , சோகமா என்று கண்டறிய முடியாத ஒரு முகபாவம் !! அக்குழந்தையின் வாயில் இருந்து ஒழுகிய எச்சில் , சிறிது தூரம் வடிந்து காய்ந்து போயிருக்க வேண்டும் .அதன் சுவடு தெரிந்தது .

அப்பையனின் முகம் எதனுக்காகவோ காத்திருந்து அதற்காக ஏங்கியிருப்பதாக தோன்றியது .கண்களின் அந்த வெறிச்சிடும் , ஏங்கும் அந்த பார்வை இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது . பசியால் தான் பார்க்கிறான் என்றெண்ணி கையில் இருந்த டீக் கிளாஸைக் காண்பித்து , சைகையாலே உனக்கும் வேண்டுமா என்று கேட்டேன் . மறுதலிப்பது போல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு விலகி வேறு பக்கம் சென்றுவிட்டான் . " ஆமாம் " என்று சொல்லி டீ வாங்கிக் கொடுத்திருந்தாலோ , அத்துடன் அவனது முகம் எனக்கு மறந்திருக்கும் !! " வேண்டாம் " என்று சொல்லிவிட்டு சென்றதால் மட்டுமே , இன்னும் அவன் எனக்கு ஞாபகம் இருக்கிறான் !! .

விலகிச் சென்றபடியே , மோட்டலும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்திறக்கு சென்றுவிட்டான் . கடைசியாக திரும்பும் முன் ஒரு பார்வை . அதன் அர்த்தங்கள் பலவாறாக இருக்கக்கூடும் !! நல்ல வேளையாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன் . ஒரு வேளை , நம்மை யாராவது கவனிக்கிறார்களா என்று அவன் கவனித்தான் என்றால் , நான் தேறிவிட்டேன் . அது அல்லாது , நமக்கே வாங்கித் தருகிறேன் என்றானே யாரவன்..... என்றெண்ணியிருந்தால் ???... அவன் நல்ல குடும்பத்தில் பிறந்து , நன்றாக வாழ்ந்து , விதியின் வசத்தால் இவ்வாறு இருக்க நேர்ந்தால் , சே நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது , அவனது தன்மானத்தை தீண்டியவனாகி விட்டவனல்லவாகிவிட்டேன் ???

தவறிழைத்து விட்டேன் என்ற குற்றவுணர்ச்சி காரணமாகவோ என்னவோ , பஸ்ஸில் ஏறிய பின்னரும் அவனது முகம் எனக்கு ஞாபகம் இருந்தது . பின்னர் பலதரப்பட்ட சூழ்நிலைகளால் நான் அவனை மறந்தாலும் , அதன் பின்னர் நான் வேறு எந்த மோட்டலில் நின்றாலும் அவனைத் தேடுவது வழக்கமாகிப் போனது . அவனைக் இதுவரைக் கண்டதில்லை . கண்டாலும் என்ன சொல்லவதென்று எனக்குத் தெரியவில்லை . ஆனாலும் அந்த முகம் என்றும் என் நினைவில் இருக்கும் !!!

முகம் இரண்டு : அபுதாபிக்கு வர விசா கிடைத்து விட்ட பின் , ஒரு முறை மதுரை சென்றிருந்தேன் . அதாவது மதுரை நண்பர்களிடம் இருந்து விடைபெற !! சதிஸ் என்பவன் எனக்கு பழக்கம் . எனது மதுரை டீலரிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்தான் . நானும் அவனும் தான் ரிலீஸாகும் அனைத்துப் படங்களுக்கும் நைட் ஶோ செல்வோம் . ஒன்றாக ஊர் சுற்றுவோம் .
மதுரையில் எங்கள் இருவருக்கு மட்டும் தெரிந்திருந்த ஒரு இடம் இருந்தது . அமைதியாம இடம் . சிவகங்கை போகும் வழியில் சாலையின் இருபுறமும் மரங்களும் , வயல்வெளிகளுமாக இருக்கும் அந்த இடத்தில் , இரண்டு மூன்று பேர் உட்கார்வதற்கு ஏற்றபடி கல்மேடு ஒன்று இருக்கும் . மற்றபடி விடுமுறை நாட்களில் நானும் சதிஷும் பீரோ , பாட்டிலோ வாங்கிக் கொண்டு அங்கு சென்றுவிடுவோம் . காலை பத்து மணிக்கு சென்று , மதியம் ஒன்று இரண்டு மணிக்கு திரும்ப வருவோம் .
இந்த தடவையும் சென்றோம் , நாலைந்து பேர் உள்ள கூட்டமாக !! . தண்ணிக் கச்சேரி நடக்கவும் , அருகில் இருந்த வயலுக்கு மோட்டார் விடவும் சரியாக இருந்தது . அதனால் தண்ணி அடிப்பதும் , குளிப்பதுமாக கச்சேரி களை கட்டியது .

சிகரட் தீர்ந்துவிட்டதால் , வாங்க வண்டி ( ஓசி வண்டி ஓட்டுவதும் ஒரு சுகம் தான் ) எடுத்துக் கொண்டு சென்றேன் . அருகில் இருந்த பெட்டிக் கடைக்குச் சென்று வாங்கிவிட்டு , வண்டியில் ஏறி உட்காரும் பொழுது , எனது கால் ஒருவரின் மேல் பட்டுவிட்டது . மன்னிப்புக் கேட்க நினைத்துத் திரும்பிப் பார்த்து அதிர்ந்தேன் . இந்திரா செளந்திராஜனின் அமானுஶ்ய நாவல்களில் வரும் சாமியார்களைப் போல இருந்தார் . கந்தலாடையும் , நீண்டு வளர்ந்த தாடியும் , சுருக்கம் விழுந்த ஒட்டிப் போன கன்னங்களுமாய் இருந்த அவரை பார்த்தவுடன் பக்தி வராது , பயம் தான் வரும் ...
" மன்னிச்சுகோங்க சார் (?) " என்றேன் .
பதிலுக்கு அவர் , " என்ன பேரு ?" என்றார் . நானும் "குமாரசாமி " என்றேன் . என்னை உற்று நோக்கியும் , கைகளை ஆட்டிக் கொண்டும் காற்றில் ஏதேதோ செய்துவிட்டு , திடீரென எனது தலையில் கைவைத்து , " நல்லாயிருடா " என்று சொல்லிவிட்டு திரும்பி கடைக்குள் சென்றுவிட்டார் . வாழ்த்தா , சாபமா என்று தெரியாமல் , திரும்பி விட்டேன் . ஆனாலும் இன்னும் சில வேளைகளில் திடீரென அந்த முகம் ஞாபகம் வரும் !! தண்ணி அடிக்கும் பொழுது தான் , சிவாவிடமும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறேன் . பதிலுக்கு என்ன சொன்னான் என்று ஞாபகம் இல்லை .

சொந்தக்காரர்களின் முகம் கூட சில சமயம் மறந்துவிடுகிறது . எழுதாமல் விட்ட முகங்களையும் சேர்த்து இவர்களின் முகம் மட்டும் நினைவில் இருக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை . இன்னும் எழுதாமல் விட்ட முகங்கள் நிறைய உண்டு . மதுரையில் எங்களது அடுத்த வீட்டில் இருந்த மனநிலை தவறிய சின்னப் பெண் பானு , நான் பள்ளிக்குக் கிளம்பும் அதே சமயத்தில் தச்சு வேலைக்குக் கிளம்பி என்னுடனே சைக்கிளில் ஒன்றாக வந்த ரமேஶ் , ஆர் .டி .ஓ ஆபீஸுக்கு எதிரில் டீக்கடை வைத்திருந்த பார்த்திபன் ...... போன்ற இன்னும் பலரின் முகங்களும் சில சமயங்களில் திடீரென பளிச்சிடும் .காரணம் யாமறியேன் !!

பார்த்துவிட்ட முகங்களின் நினைவுகளுக்காகவும் , இனி பார்க்க போகும் முகங்களிடம் கிடைக்கப் பெறும் அனுபவங்களுக்காகவும் .......... காத்திருக்கிறேன் !!

மீண்டும் வருகிறேன் !!!