Saturday, May 26, 2007

பயணங்கள் :

பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை . பல்வேறு சூழ்நிலைகளில் , பல்வேறு மனநிலைகளோடும் , பல்வேறு நினைவுகளொடும் பயணித்திருக்கிறேன் . பயணம் செய்வதே வாழ்க்கை என்றாகிப் போனது பாக்கியம் என்று தான் சொல்லவேண்டும் . சில பயணங்களில் பேச்சுத்துணைக்கு ஆள் இருக்கும் , சிலவற்றில் நானும் , என் நினைவலைகளும் மட்டுமே . சில பயணங்களை மறக்க வேண்டும் என நினைக்கிறேன் , சிலது தொடராதா எனவும் ஏங்கியிருக்கிறேன் , சிலவற்றை தவிற்றிருக்கலாமே எனவும் இப்பொழுது நினைக்கிறேன் . எனக்கு நினைவு தெரிந்து , என் ஞாபகத்தில் இருக்கும் எனது முதல் பயணம் , நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் தான் . மதுரையில் இருந்த நாங்கள் , எப்படி நாகர்கோவில் சென்றோம் எனத் தெரியவில்லை . எனக்கு எத்தனை வயதிருந்திருக்கும் எனத் தெரியவில்லை . இங்கிருந்து கன்னியாகுமரி பக்கம் என்றும் , அங்கு கடல் இருக்கும் என்றும் யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் . உடன் அங்கு போக வேண்டும் என அடம் பிடித்து , பாட்டியய் அழைத்துச் சென்றது ஞாபகம் இருக்கிறது . நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பயணம் என்றும் இனிமையானது . கன்னியாகுமரி நெருங்க நெருங்க , எதிர்வரும் கடற்காற்றால் , நித்திரா தேவி நம்மை ஆட்கொள்ளும் . பஸ்சில் ஒட்டுனரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏறக்குறைய தூங்கியிருப்பார்கள் . அப்பொழுது எனது பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டே பயணம் செய்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது . முதன்முறையாக கடலை பார்க்கும் பயணம் என்பதாலோ என்னவொ , அந்த பயணம் இன்னும் ஞாபகம் இருக்கிறது .ராணுவக்கட்டுப்பாட்டை பற்றி எனக்கு தெரியாது , கேள்வி தான் பட்டிருக்கிறேன் . இருந்தாலும் , உறுதியாக சொல்லலாம் , ராமசுப்பிரமணிய ( அப்பா ) கட்டுப்பாடு ,ராணுவக்கட்டுப்பாட்டை விட மிகவும் கொடுமை . ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நான் ராமசுப்பிரமணிய கட்டுப்பாட்டில் தான் இருந்தேன் . அதனால் சிற்சில ரயில் பயணங்களைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியான பயணங்கள் இருக்கவில்லை . முதன்முதலாக மதுரையில் இருந்து , நாகர்கோவிலுக்கு தனியாக பயணம் செய்தது தான் மறக்க முடியாதது .அப்பா என்னை மதுரை ரயில்வே ஸ்டேஶனில் ஏற்றி விட்டார் . வேறு எந்த ஸ்டேஶனிலும் இறங்க வேண்டாம் என்றும் , வழியில் டீ கொண்டுவருவார்கள் அப்பொழுது மட்டும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் சொல்லியிருந்தார் . ரயில் கிளம்பியது . அடுத்த ஸ்டேஶன் திருப்பரங்குன்றம் . அந்த ஸ்டேஶனிலேயே இறங்கி ஏறி , அப்பாவின் அடக்குமுறையினை மீறிவிட்ட ஒருவித சந்தொஶத்துடன் குதூகலித்தது ஞாபகம் இருக்கிறது . ப்ளஸ் ஒன்னில் பசங்க செட் செர்ந்ததும் ஆரம்பித்தது கொண்டாட்டம் . நினைத்த நெரத்தில் , நினைத்த இடத்திற்கு பயணம் . அப்பொழுது ஸ்கூல் பாஸ் கொடுத்திருந்தார்கள் . ஆசிரமத்தில் இருந்து நாகர்கொவிலுக்கு சென்று வர மட்டுமே உபயொகப்படுத்த படவேண்டிய அந்த பாஸில் , நாகர்கொவிலில் இருந்து கன்னியாகுமரி வரை சென்று திரும்பியிருக்கிறொம் . அதிலும் , எனது பாஸில் என் நண்பனும் வருவான் !!! சந்தொச பயணங்கள் அவை . !!! உட்கார இடம் கிடைக்க கூடாது என்று வேண்டுவேன் . புட் போர்டில் தான் பயணம் . பின்னர் என்னவளை சந்திக்கச் செல்லும் பயணங்களிலும் அதே பாஸ் , ஆனால் பஸ்ஸின் உள்ளே தான் பயணம் . பின்னர் கிருஶ்ணகிரி காலேஜில் சேர்ந்ததும் , தனியாக திருநெல்வேலியில் இருந்து கிருஶ்ணகிரி வரை . காலை ஐந்து மணி ரயில் ஒன்று , திருநெல்வேலியில் இருந்து புறப்படும் . இரண்டரை மணிக்கு ஈரோடு வந்து சேரும் . அங்கிருந்து மூன்றரைக்கு கிளம்பி , ஒன்பது மணியளவில் ஜோலார்பேட்டை வந்தடையும் . அங்கிருந்து ஒரு மணி நேரம் பஸ் பயணம் கிருஶ்ணகிரி . காலை ஐந்து மணிக்கு கிளம்பி , இரவு பத்து மணி வரை பயணம் . தாவு தீர்ந்து விடும் என்பார்களே அது தான் அது . எத்தனை நேரம் தான் புக் படித்துக்கொண்டும் , தூங்கிக்கொண்டும் நேரம் கழிப்பது ? வெறுத்துப் போய் விடும் . எப்ப தான் காலேஜ் போய் பசங்கள பார்ப்பொம் என்றிருக்கும் . ஒரே ஒரு தடவை தான் முழு பிரயாணம் செய்தேன் . பின்னர் அவ்வாறு பயணப்பட நேர்ந்த பொழுது , ஒன்று மொரப்புர் ஸ்டேஶனிலேயே இறங்கி , பஸ் பிடித்து தர்மபுரி வழியாக கிருஶ்ணகிரி வந்து சேர்வேன் , அல்லது ஈரோட்டிலேயே இறங்கி பஸ்ஸில் சேலம் வழியாக கிருஶ்ணகிரி வந்து சேர்வேன் . இந்த பயணங்களில் உற்ற துணை புத்தகம் தான் . அதுவும் இல்லாவிட்டால் , கண்டதையும் கற்பனை பண்ணிக்கொண்டு , கண்களை மூடிக் கொண்டு எனக்கே உரித்தான கற்பனா உலகில் பவனி வருவேன் . கனவு இல்லை அது , கற்பனை . சுகானுபவம் !!! ஒருதடவை இவ்வாறு வந்து சேர , இரவு பத்து மணியாகிவிட்டது . கல்லூரி திறக்க இன்னும் இரண்டு வாரம் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள் . வீட்டிற்கு போக மனதில்லை . அதனால் சென்னை கிளம்பினேன் . முதல் முறையாக தனியாக சென்னை மாநகருக்கு !! . தாத்தா வீட்டிற்கு , அதுவும் அப்பாவிற்கு தெரியாமல் !! வழியில் பாலாஜியய் ஒரு மொட்டலில் சந்தித்தேன் . அப்பொழுது அவனுடன் அவ்வளவாக பரிச்சயம் இல்லை . காலேஜ் லீவ் மச்சி என்றேன் . இவன் பொய் சொல்லி நமது படிப்பை கெடுக்க போகிறான் என்று நினைத்தானோ என்னவோ , பரவாயில்ல நான் போய் பார்த்துக்கிறேன் என்றான் . வழி தெரியாத ஊரில் , அதுவும் சென்னையில் எப்படியோ வழி கண்டுபிடித்து , தாத்தா வீட்டை அடைந்தேன் . இந்த பயணம் இருந்திருக்கா விட்டால் , தாத்தா மற்றும் அத்தையின் பாசத்தை அறியாமலே போயிருப்பேன் . !! கல்லூரி காலத்துப் பயணங்கள் , பெரும்பாலும் அரட்டையுடனும் கதைகளுடனுமே சென்றன . காமராஜ் அக்கா கல்யாணத்திற்க்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டி தஞ்சாவுர் , மயிலாடுதுறை , காட்டுமன்னார்குடி என சுற்றியது , கடலையின் அக்கா கல்யாணத்திற்கு என்று கடலூர் , பாண்டி எனச் சென்றது , மீண்டும் நொட்ஸ் வீட்டிற்கு அதாவது மன்னார்குடி சென்றது , அண்ணாமலை , வெண்மணி தயவால் "ரோடு என்றால் என்ன ? " என கேட்கும் வதுவார்ப்பட்டிக்கும் , மேலாண்மறை நாட்டிற்கும் சென்றது என கல்லூரி காலத்து பயணங்கள் ஊர் சுற்றி பார்க்கும் எனது ஆசைக்கு வடிகாலானது . இப்பயணங்கள் எங்களது நட்பினை இன்னும் வலிதாக்கியது . பின்னால் எனது சேல்ஸ் பீல்டிலின் முன்னனுபவமாய் இருந்தது. உபயோகமாய் இருந்தது .வேலை கிடைத்து பெங்களுர் சென்றேன். ஊர் சுற்றும் வேலை . இந்த சமயத்தில் தான் நான் ஊர்களையும் , வழிகளையும் கவனிக்கவும், ரசிக்கவும் தொடங்கினேன் .ஒவ்வொரு ஊரிலும் ஒரே பாஶையய் வெவ்வேறு விதமாய் பேசினர் . பழக்க வழக்கங்கள் வெவ்வேறாய் இருந்தது . வேலை இல்லாவிட்டாலும் கைகாவிற்கும் , கண்டகளும் சென்று இயற்கை காட்சியினை ரசித்தேன் . பிலிப்ஸில் வேலை கிடைத்ததும் , எனது பயணங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டன . இரண்டாம் வகுப்பு பிரயாணியான நான் , அதே வைகை எக்ஸ்பிரஸில் இரண்டாம் வகுப்பு ஏசியில் பயணம் செய்தேன் !! கம்பனி காசு!!! பிலிப்ஸ் , பஜாஜ் தயவால் தென் மாவட்டங்களை நன்றாக அறிந்தேன் . விருதுநகர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் மீண்டும் பயணங்கள் . !! பின்னால் வழுக்கி செல்லும் மரங்களையும் , தனியாளாக மெயின் ரோட்டிற்கு கொஞ்சம் பின் தள்ளியிருக்கும், ஒற்றை குண்டு பல்ப் எரியும் மொட்டார் ருமின் காவலாளையும் , இரவு நேர பயணங்களில் சில்லென்று முகத்தில் அறையும் காற்றின் குளிர்ச்சியும் , எனது கற்பனா உலகின் ஐஸ்வர்யங்களுமாய் , இந்த பயணங்களில் நான் என்னையே தொலைத்தேன் . வாரத்தின் ஆறு வேலை நாட்களில் , ஒரே ஒரு நாள் தான் மதுரையில் இருப்பேன் . மற்ற ஐந்து நாட்களும் , இல்லாத வேலையய் இருப்பதாக சொல்லிக்கொண்டு , வெளியுர்களில் இருப்பேன் . இப்பயணங்களால் , எனக்கு சில புதிய நண்பர்களும் கிடைத்தார்கள் . ஆரப்பாளயம் ஆட்டோ ஸ்டான்ட் நண்பர் குட்டீயும் சங்கரும் பரிச்சயமானது அப்படித்தான் . இன்றும் கூட பழக்கம் இருக்கிறது . மதுரையில் இருந்து காலை கிளம்பி , சிவகாசி சென்றுவிட்டு , இரவு திரும்புவேன் . போன் பண்ணிவிட்டால் , குட்டியும் சங்கரும் ஆட்டோவொடு பஸ்ஸ்டான்ட் வந்து விடுவார்கள் . எதாவது பாருக்குப் போய் தண்ணி அடித்துவிட்டு , சினிமா பார்த்துவிட்டு , அப்படியே என்னை வீட்டில் கொண்டு போய் விடுவார்கள் . இனிமையான காலமாயிருந்தது அது . !! அபுதாபிக்கு வந்த விமானப் பயணம் கண்டிப்பாக எனது வாழ்வில் ஒரு திருப்புமுனை . புதிய வாழ்க்கையின் தேடலுக்கான கேள்விக்குறியும் , கவலையும் விமானத்தில் பயணித்த அனைவரின் முகத்திலும் கண்டேன் . தங்களுக்கு சொந்தமான , தங்களுக்கு பிடித்த ஒரு பொருளை பின்னால் விட்டுவிட்டு செல்லும் பரிதவிப்பு அனைவரிடமும் !! இப்பயணத்திலும் நான் எனது கற்பனைகளோடு தான் பயணித்தேன் !!ஆனாலும் , திரும்ப நாட்டிற்க்கு செல்லும் விமானத்தில் பயணிக்கும் பொழுது பயணிகள் அனைவரின் முகத்திலும் நான் காணப்பொகும் மகிழ்ச்சியய்யும் , நிறைவையும் காண ஆவலோடு காத்திருக்கிறேன் !! ஆனால் இதற்கு இன்னும் பதினோரு மாதங்கள் காத்திருக்க வேண்டும் !!! இங்கும் பயணங்களுக்கு குறைவில்லை !!டாக்ஸியில் போகும் பொழுது போடும் குட்டித்தூக்கத்தை அனுபவிக்கிறேன் !! டாக்சியில் வேறு யாருக்கும் தமிழ் தெரியாது என்ற நம்பிக்கையில் , மனைவியுடனோ , காதலியுடனோ அந்தரங்கமாக பேசுபவர்களின் காதல் மொழிகளை கேட்டு ரசித்திருக்கிறேன் !! அடுத்தடுத்தான எனது பயணங்களுக்காக காத்திருக்கிறேன் , கற்பனைகளோடு!!
மீண்டும் வருகிறேன் !!

பார் பெண்கள்

இங்கு அபுதாபியில் நான் அடிக்கடி பாருக்குச் செல்வது உண்டு . முதலில் எனக்கு பார் இருக்குமிடம் அறிமுகப்படுத்திய பெருமை , எனது சீனியர் மகான் சீனிவாசனையே சாரும் . அவர் இந்தியா சென்றதும் , நான் பாருக்குச் செல்வது நின்றது .. சரவணனை பார்க்கும் வரை .
ஆபிஸில் தண்ணி அடித்து விட்டு , அது போதாமல் பாருக்குச் செல்வோம் . இங்கு பாரில் தமிழ் , மலையாள பாடல்கள் அதிர , ஸ்டேஜில் பெண்கள் ஆடுவார்கள் . பெண்கள் அனைவரும் தென்னிந்திய பெண்கள் . அரபி பெண்கள் ஆடும் பார்களும் உண்டு . ஆனால் நாங்கள் அங்கு செல்வது இல்லை . குறைந்த ஆடைகளுடன் ஆடும் பெண்கள் , மெல்லிய வெளிச்சம் , அதிரடி பாட்டுக்கள் என தென்னிந்திய பார்கள் அமர்களப்படும் .அதுவும் வியாழன் இரவும் , வெள்ளி இரவும் கொண்டாட்டங்கள் தான் !!
பெண்கள் அனைவரும் சுமாராக இருப்பார்கள் . அதுவும் தமிழ் பெண்கள் தான் அதிகம் .இந்த பெண்கள் அனைவரும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வருகிறார்கள் , முன்று மாதங்களுக்கு ஐம்பதாயிரம் சம்பளம் என்று பேசி , விசிட் விசாவில் கொண்டு வருவார்கள் , முன்று மாதங்களுக்கு பின் அவர்களை அனுப்பி விட்டு , வேறு பெண்களை அழைத்து வருவார்கள் என்று , பின்னர் ஒரு தமிழ் பெண்ணிடம் நெருங்கிப் பேசும் வாய்ப்பு கிடைத்த பொழுது அறிந்து கொண்டேன் !! முதலில் எனக்கு இந்த பெண்களிடம் ஒருவித கழிவிறக்கம் தான் தோன்றியது . அது தவறு என்று பின்னர் தான் அறிந்து கொண்டேன் . நமது அனுபவங்களில் இருந்து மட்டும் தான் பாடம் கற்க வேண்டுமா என்ன?
பாரில் நமக்கு தேவையான விரும்பிய பாடல் கேட்கலாம் .அதற்கு தனி கட்டணம் . நாம் விரும்பிய பெண்ணுக்கு , மாலை போடலாம் .அதற்கும் தனி கட்டணம். இந்திய மதிப்பில் சுமார் அறுநூறு ருபாய் . இந்த தவறை மட்டும் நான் செய்ததில்லை . செய்யவும் கூடாது என்ற வைராக்கியத்தில் உள்ளேன் . ஆனால் சரவணன் இந்த விஶயத்தில் மோசம் . ஒரு தடவை பாருக்குச் சென்றால் , குறைந்தது ஐந்து மாலைகள் போடுவான், அதுவும் ஒரே பெண்ணுக்கு !! பெண்களுக்கு கிரிடம் சூட்டலாம் , அதற்கு சுமார் ஆறாயிரம் ரூபாய். நாம் பாருக்குச் செல்வது குறைந்தால் , அங்கிருக்கும் பெண்களிடம் இருந்து போன் வரும் , " உங்களை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது , இன்று பாருக்கு வாருங்கள் "என்று . போதையில் இருக்கும் ஒருவனிடம் இருந்து , எவ்வளவு எல்லாம் கறக்க முடியுமோ அவ்வளவையும் கறக்கும் பணியய் செவ்வனே செய்து வருகின்றன இந்த பார்கள் .
சரவணன் மிகச் சரியாக சிக்கினான் . தினமும் பாருக்குச் செல்வதை வாடிக்கையாக்கினான். நானாவது ஆபிசில் தண்ணி அடிப்பதொடு சரி .அவன் இங்கும் என்னுடன் தண்ணி அடிப்பான் , பின்னர் தனியாக பாருக்குச் சென்றும் தண்ணி அடிப்பான் .காரணம் கேட்டால் , காதல் என்றான் . நானும் இன்னும் சில நண்பர்களும் சொல்லிப் பார்த்தொம் , கேட்பதாக தெரியவில்லை , பட்டுத் தெரியட்டும் என்று விட்டு விட்டொம் .
சரி அந்த காதலாவது அம்பிகாபதி - அமராவதி காதலாக இருக்கும் என்ற எனது எண்ணத்திலும் அணுகுண்டு விழுந்தது . ஒரு நாள் , சரவணன் என்னிடம் வந்தான் . " பாஸ் , இந்த சிடில இருக்குற போட்டோ என் மொபைல்ல மாத்தி தாங்க பாஸ் " என்றான் . அதில் ஒரு கைக்குழந்தையின் போட்டோ இருந்தது . யாருடா இது என்றேன் , அது அவனது ஆள். உமாவின் குழந்தையாம்!! . " என்னடா சொல்ற ?" என்றேன். " ஆமா பாஸ் , உமாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு , புருஶன் கைவிட்டுட்டான் , அதான் இங்க வந்திருக்கா " என்றான் . எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. காசுக்காக , பெற்ற குழந்தையய் விட்டுவிட்டு , இங்கு வந்து நடனமாடி , கண்டவர்களிடம் கொஞ்சிப் பேசி , மாலை வாங்கி சூடிக்கொண்டு , என்ன பொழப்பு இது ?
கொஞ்ச நாள் கழித்து , சரவணன் என்னிடம் வந்து , " பாஸ் , உமா இந்தியா போரா பாஸ் , மனசு கஶ்டமா இருக்கு , " என்றான் . நானும் , விட்டுதுடா சனியன் , இனி பையன் ஒழுங்கா இருப்பான் என்று நினைத்தேன் . அதிலும் மண் . இந்தியாவிற்கு கால் பண்ணியே , சம்பளம் அனைத்தையும் இழந்தான் . பின்னர் சரவணன் வருவது குறைந்தது , அவனை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன . உமா தனது குழந்தைக்கு சென்னையில் சீரியஸ் ஆகிவிட்டதாக சொல்லவும் , அதற்கு சரவணன் வட்டிக்கு வாங்கி ஐம்பதாயிரம் ருபாய் அனுப்பி வைத்ததாகவும் , அதை வைத்து அவள் ஒரு வியாபார ஏஜன்சி ஆரம்பித்துள்ளதாகவும் , சரவணன் ’காதல் ’ பட க்ளைமாக்ஸாக திரிவதாகவும் தகவல் வந்தது .
பின்னர் ஒரு நாள் சரவணன் போன் பண்ணிணான் . தான் இந்தியா செல்வதாகவும் , திரும்பி வர வாய்ப்பு கம்மி எனவும் கூறினான் . தண்ணி அடித்து அனுப்பி வைத்தொம் . பின்னர் தான் தெரியவந்தது . தலைவர் உமாவை பார்க்க பாருக்கு சென்ற கணக்கிலும் , அவளுக்காக நகையும் பணமுமாக செய்ததிழும் , கிட்டத்தட்ட இரண்டு லட்ச ருபாய் அளவில் கடன் வைத்திருப்பது . கடன் கொடுத்தவர்கள் ஆபிசுக்கு போன் பண்ண , ஆபிசில் சரவணனை திரும்ப அழைத்துக் கொண்டனர் .
நேற்று முன் தினம் சரவணன் வந்திருந்தான் . " பாஸ் , உமா திரும்ப வந்திருக்கா பாஸ் . என்ன பார்கணும் பொல இருக்காம் . அவளோட புருஶனும் இன்னக்கி பாருக்கு வர்றானாம் . அவனுக்கு முன்னாடி நான் அவளுக்கு மாலை போடணும்னு சொல்லிருக்கா பாஸ் , நீங்களும் வர்றீங்களா கலக்குவோம் ? " என்றான் . அவனது மடத்தனத்தை நினைத்து கோபப்படுவதா , இல்லை அறியாமையை நினைத்து வருத்தப்படுவதா என தெரியாமல் , " நாளேல இருந்து நான் சார்ஜா போறென்டா , அபுதாபி வந்தா உனக்கு கால் பண்றேன் " என்று சொல்லி அனுப்பி வைத்தேன் . பட்டும் தெரியாதவர்களை வேறு என்னதான் செய்வது . ??
இன்னொரு நாள் , ஹபிப் கால் பண்ணியிருந்தான் . " மச்சி , நேத்து ஒரு பாருக்கு போயிருந்தென் . கலக்கல் மச்சி , என்னா பொண்ணுங்க ? ஒரு பிலிப்பிணி பொண்ணு எனக்கு கால் பண்ணிருந்துது மச்சி " .. பதிலுக்கு நான் சொல்லியது , " பாருக்கு போ , பாட்டு கேளு , பொண்ணுங்கள ரசி .. ஆனா அதோட நிறுத்திக்கோ !! மாலை , போன் லாம் வேண்டாம் " என்று !! சரவணன் கூடவே இருந்து கொண்டு , இந்த அறிவு கூட வராவிட்டால் எப்படி ? ......
மீண்டும் வருகிறேன் !!

Sunday, May 13, 2007

சென்னை ௨௮ :

சென்னை ௨௮ படம் பார்க்க நேர்ந்தது . நன்றாக இருக்கிறது . இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் அன்றாட வாழ்கை தான் படம் என்று முன்னமே சொல்லிவிடுகிறார்கள் . அவர்களுக்குள் இருக்கும் நட்பு , கோபம் , சண்டை , கிரிக்கெட் இவை மட்டும் தான் இருக்கும் என்றும் சொல்லிவிடுகிறார்கள் . பின்னர் ஆரம்பிக்கிறது படம் .

குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பின்ணனி இசை . அவ்வப்பொழுது வரும் பழைய பாடல்களின் பின்னனியினை ரசிக்க முடிகிறது . பாண்டியன் போல் கார்த்திகின் காதல் பாட்டும் , தண்ணி அடிக்க வேண்டி சிறுவர்களிடம் பெட் மாட்ச் கட்டி தோற்று , அதனால் தனது பேட்டை பறிகொடுக்கும் பொழுது அழுகும் கோபியின் சோக பின்ணனியும் கலக்கல் . அதுவும் தமிழ் சினிமாவில், விஜயின் படங்களில் , அவர் வண்டியில் அருவாள் தீட்டும் பொழுதும் , தனி ஆளாக மாமிச மலைகளை உருட்டும் சமயத்திலும் மட்டுமே பயன்படுத்தப்படும் அடிதடி ரகளை பின்ணனியினை இந்த டீம் கிரிக்கெட் ஆட வரும் பொழுது கொடுத்திருப்பது அழகு !!
பிரேம்ஜி கலக்கல். "என்ன கொடும சார் இது ?" என்று அவர் கூறும் பொழுதெல்லாம் சிரிப்பு தான் . அதுவும் அவர் காட்ச் பிடித்தது நோ பால் , என்றவுடன் சொல்லும் "என்ன கொடும சார் இது ? . அந்த சீன் பார்த்தவுடன் , நான் புதூரில் ஆடிய ( ? ) மேட்ச் தான் ஞாபகம் வருகிறது . நான் , பிரசன்னா , காட்ஸ் , அசோக் எல்லாரும் ஹரி ஊருக்கு சென்றிருந்தொம் , மேட்ச் விளையாடுவதற்கு !! பைனல்சுக்கு முன் ஆடிய பிராக்டிஸ் மேட்சு அது . எங்கள் டீம் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது . எதிரணியில் பிரசன்னா வெளுத்துக்கொண்டிருந்தான் . அவனை அவுட் ஆக்கினால் தான் நாங்கள் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை . எங்கள் டீம் காப்டன் ஹரி என்னிடம் வந்து , " குமாரு , உன்ன நம்பி தான் இருக்கேன் , எப்படியாவது ஜெயிக்கணும்" என்றார் . ஆதனால் இன்னும் சிறப்பாக கவனித்து காத்திருந்தேன் . அந்த சமயத்தில் , ஹரியின் பந்தில் பிரசன்னா தூக்கி சிக்சருக்கு விரட்ட முயற்சிக்க , பந்து நான் இருக்கும் திசையில் வந்தது . என் வாழ்நாளிலேயெ என்னாலும் , பிரசன்னாவாலும் மறக்க முடியாத கேட்ச் அது . டைவ் பண்ணி , பறந்து போய் , ( இன்னும் என்ன வேண்டுமானலும் சேர்த்து கொள்ளுங்கள் !! ) கேட்ச் பிடித்தேன் . ----- இப்படி இன்னும் எத்தனை நாள் தான் சொல்லிக்கொண்டிருப்பது ? உண்மையில் , தம் அடிக்க ஏதாவது வழியிருக்காதா என்ற யோசனையில் இருந்தேன் . அப்பொழுது " டேய் குமாரு " என்று ஒரு சத்தம் கேட்டது . எதேச்சையாக திரும்பினேன் . பால் தானாகவே கைக்கு வந்தது . பின்னர் தான் தெரியும் . பிரசன்னா அவுட் என்று . அதை வைத்தே இன்னமும் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் .!!

சில சின்ன சின்ன சீன்கள் நன்றாக இருக்கிறது . தண்ணி அடிக்க காசு இல்லாமல் போகும் பொழுது , அனைவரும் காணாமல் போவது , ஜெய் காதலியின் நண்பனானதும் அவன் போடும் எல்லா பால் ம் சூப்பர் என்று சிவா சொல்வது , ஸ்வேதா கெஸ்ட் ஹவுஸுக்கு போனேன் என்று அரவிந்த் சொல்லும் பொழுது அனைவரும் சொல்லிவைத்தாற் போல் அடியய் நிறுத்துவது , கடைசி நேரத்தில் "நீங்க விளையாட வாங்க "என்று இளவரசிடம் கலாய்ப்பது என்று ரசிக்க வைக்கிறார்கள் .பிரேம்ஜி கலக்கல்.

விஜயகாந்தின் படங்களில் , சண்டைக்காட்சி தேவைப்படும் என்று தோன்றினால் , காஶ்மிர் தீவிரவாதி ஒருவன் சென்னை கிளம்பி வந்து விஜயகாந்திடம் இருந்து அடி வாங்கிச் செல்வது போல , இந்த படத்திலும் சில சண்டைக்காட்சிகளும் , தேவையில்லாத பாட்டும் இருக்கிறது . தம் அடிக்க சரியான நேரம் .

கதை ஒன்றும் இல்லை . ஆனால் கவலைப்படாமல் போய் சிரித்து விட்டு வரலாம் !!

புத்தகங்கள் :

புத்தகங்கள் மீது எனக்கு , தீவிர காதல் உண்டு . சாப்பிடும் பொழுதும் , ஏன் கழிப்பறையிலும் கூட புத்தகங்கள் இருக்கும் . சின்ன வயதில் , சித்தி வீட்டில் இருந்தும் , மாமா வீட்டில் இருந்தும் புத்தகங்கள் எடுத்து வருவேன் . அது குமுதம் , ஆனந்த விகடன் , க்ரைம் நாவல்களாக இருக்கும் . மாமாவிற்கு நாவல்கள் என்றால் உயிர் . அவரால் தான் ராஜேஶ் குமார் , இந்திரா சௌந்திராஜன் , சுபா , ராஜேந்திர குமார் பொன்றோரின் நாவல்கள் எனக்கு அறிமுகம் .அப்பாவிற்கு அது பிடிக்காது . அதனால் அவர் வரும் நேரத்தில் , நாவல்கள் பரணுக்கு பொகும் . பின்னர் திரும்ப வரும் .

பள்ளிக்கூட லைப்பரரி பீரியட்ற்க்காக காத்திருப்பேன் . மணி அடித்ததும் ஓடிச் சென்று , டின்டின் புக் எடுப்பேன் . சில நாட்கள் பரிட்சை இருப்பதால்,லைப்பரரி பீரியட் இருக்காது . அந்த பீரியடிலும் பாடம் படிக்க வேண்டும் . அந்த சமயங்களில் , எனது டீச்ச்ரை எனக்கு அப்பொழுது பரிச்சயமான உச்ச பட்ச கெட்ட வார்த்தையினால் திட்டுவேன் ( மனதிற்குள் !! ) . சில சமயங்களில் , நான் எனது லைப்பரரி புக்கை எடுத்து வர மறந்திருப்பேன் . அதனால் வேறு புக் எடுக்க முடியாது . அந்த சமயங்களில் , மணிகண்டன் எனும் நண்பன் ஒருவனின் கார்டில் நான் புக் எடுப்பேன் . அன்று அவனுக்கு பைனைப்பிள் மற்றும் மாங்காயுமாக ஏக போக விருந்து இருக்கும் . அதற்காகவே அவன் நான் புக் எடுத்து வர மறக்க வேண்டும் என வேண்டுவான் !!
குமுதமும் , விகடனும் அவை நான்கு ருபாய் இருக்கும் பொழுது வாங்கியாதாக ஞாபகம் . அதுவும் கல்லூரியில் படிக்கும் பொழுது தான் , அதன் மீது ஒரு வெறி வந்தது என்றே கூறலாம் . நண்பன் பிரசன்னாவிடம் இதன் விஶயமாக சண்டை போடும் அளவிற்க்கு வெறி கூட உண்டு . கல்லூரியில் தான் எனக்கு , அற்புதமான நாவல்கள் அறிமுகம் ஆயின . ருஶ்ய நாவல்கள் வெண்மனி தயவாலும் , பாலகுமாரன் நாவல்கள் சிலவும் அப்பொழுது தான் முதலாக படித்தேன் . அந்த சமயத்தில் தான் மதனின் "வந்தார்கள் வென்றார்கள் " , விகடன் குழுமத்தின் " காதல் படிக்கட்டுகள் " ஆகியன படித்தேன் .
புத்தம் புது விகடனையோ , குமுதத்தயோ , வேறு எந்த புத்தத்கதையோ பிரிக்கும் பொழுது ஒரு தனிப்பட்ட இன்பம் வரும் . புத்தம் புது பக்கங்களின் வாசனை இருக்கும் . விகடனையும் , குமுதத்தையும் ஆவல் மிகுதியால் படபடவென பக்கம் புரட்டுவேன் . சில சமயம் எமாற்றமாய் இருக்கும் . சில சமயம் நமக்கு பிடித்தவர்களின் பேட்டியோ , செய்தியோ இருந்து மனம் சந்தோசப்படும் .
விகடன் மீதான எனது காதல் எப்பொழுது ஆரம்பித்தது என்று எனக்கு தெரியவில்லை .இங்கு அபுதாபியில் வெள்ளிக்கிழமை தோறும்தான் விகடன் வரும் . அதுவும் , அதற்க்கு முந்தய வார விகடன் . சாப்பாடு சுவையாக இல்லவிட்டாலும் , சுடாக இருந்தாலே பொதும் என நினைப்பவன் நான் . கிடைக்கும் கடை கொஞ்ச தூரம் . டாக்ஸியில் தான் செல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை மதியம் போல் கிளம்பி போய் விகடன் வாங்குவேன் . சில சமயம் நாளை தான் கிடைக்கும் என்றும் சொல்வர்கள் . விதியய் நொந்து கொண்டு திரும்ப வருவேன் .
வரலாற்று புதினங்கள் என்னை ஆக்கிரமித்தது ஒரு காலம் . பொன்னியின் செல்வன் , சிவகாமி சபதம் , காதல் புறா , பார்திபன் கனவு போன்றவை படித்து சில நாட்கள் , அந்த தமிழே நம்மக்குள் இருக்கும் . ஆசிரியரின் எழுத்தின் வீரியம் அது . சிவா இதில் எனக்கு நல்ல கம்பனி . இங்கு வந்தவுடன் கூட அதை பற்றி பேசிக்கொண்டிருந்தொம் .
புத்தங்கள் என்னை பாதித்தது உண்டு . அன்னை வயல் உருக வைத்தது .போரும் அமைதியும் , எனக்கு நிறைய புரிய வைத்தது . மனித உணர்வுகளை உணர செய்தது . சில புத்தஙகளால் நான் மாறியிருக்கிறேன் . சிலது பலவற்றை குறித்து யோசிக்க வைத்திருக்கிறது .

சுஜாதாவின் " ஸ்ரீரங்கத்து தேவதைகள் " இன் சில அத்தியாயங்கள் நம்மை பாதிக்கும் . அதுவும் குறிப்பாக மாஞ்சு . மனதை விட்டு அகலாது !! தபு சங்கரின் " தேவதைகளின் தேவதை"இல் வரும் உவமைகளும், கற்பனைகளும் அற்புதமாக இருக்கும் . வைரமுத்து வின் தொடருக்காக மட்டுமே விகடன் வாங்கியதும் உண்டு . " மொக்கராசு , கருவாச்சி என அவரின் பாத்திர படைப்புகள் என்றென்றும் நினைவில் இருக்கும் . தண்ணிர் தேசத்து கலைவண்ணனின் கவிதைகளையும் , வியாக்கியானங்களையும் மறக்க முடியுமா என்ன ?

’ சத்திய சோதனை ’ இப்பொழுது நான்காவது முறையாக படித்துகொண்டிருகிறேன் . இந்த வாரம் மட்டுமாவது என்னால் பொய் சொல்லாமல் இருக்க முடியுமா என்றும் , அன்றைய செலவுகளை அன்றே எழுதி வைப்பதும் பொன்ற முடிவுகளை இந்த வாரம் மட்டுமாவது அனுஶ்டிக்க வேண்டும் என நினைத்து உள்ளேன் . பார்போம் . என்ன நடக்கிறது என்று .


சில சமயங்களில் நான் யோசிப்பது உண்டு . ராஜராஜனையும் , கரிகாலனையும் , மாஞ்சு , கருவாச்சி , மொக்கராசு , வந்திய தேவனையும் நினைவில் வைத்து என்ன பயன் என்று . என்னவோ தெரியவில்லை , மறுமுறை மீண்டும் தேடிச் சென்று வாங்கிப் படிக்கிறேன் .

மீண்டும் சந்தொஶம் , மகிழ்ச்சி !!! சரி இதற்கு தானே எல்லாம் ?

Monday, May 7, 2007

யாருக்கு லாபம் ?

இது ஒரு உண்மைச் சம்பவம் .என் நண்பன் சிவாவின் வாழ்கையில் நடந்தது . நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறிர்கள் என்று வைத்துக்கொள்வோம் . ஏதோ ஒரு வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு வந்திருக்கிறிர்கள் என்றே வைத்துக்கொள்வோம் . உங்கள் கூட வந்த ஒரு நண்பன் சைவம் . நீங்கள் அசைவப் பிரியர் . இரண்டு பேரும் சேர்ந்து ஒரு ஹோட்டலுக்கு செல்கிறீர்கள் .இருக்கும் பணம் உங்கள் இருவருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது . உங்களுக்கோ அதிகம் சாப்பிட வேண்டும் என ஆசையிருக்கிறது . என்ன செய்விர்கள் ?
நண்பன் சிவா செய்தது : சிவா மற்றவனிடம் கூறியது , " மச்சி , இங்க வெஜிடெரியன் காசு அதிகம் . அதனால நம்ம மட்டன் பிரியாணி ஆர்டர் பண்ணுவொம் .மட்டன் பீஸ எனக்கு குடுத்துறு , வெறும் ரைஸ் மட்டும் நீ சாப்பிடு " என்று . அப்படியே நடந்தது .
இதில் யாருக்கு லாபம் ? சிவாவிற்கா , இல்லை அவனது நண்பனுக்கா? யாருக்கு லாபமோ இல்லையோ , சிவாவிற்கு இரண்டு மட்டன் பீஸ் லாபம் !! இதற்கு பெயர் தான் , சாமர்த்தியம் . சிவா சாப்பாட்டிலும் சாமர்த்தியசாலி .

பாட்டி :

பழைய விகடன் ஓன்று கிடைத்தது . சும்மா புரட்டிக்கொண்டிருந்தேன் . அதில் ஒரு கதை . பேரன் ஒருவன் தனது , பாட்டியினை ஏமாற்றிவிட்டு வெளியே விளையாட சென்றுவிடுவான் . அவனது அம்மா அவனை அடித்து இழுத்து வருவார்கள் . பாட்டி தான் வெளியே சென்று விளையாட சொன்னார்கள் என்று பொய் சொல்வான் . உடன் பாட்டிக்கு திட்டு விழுகும் . அடுத்த நாள் , அவன் வெளியெ சென்றுவிடாமல் இருக்க , பிரியாணி வாங்கி தருகிறேன் என்று ஆசை காண்பிப்பாள் பாட்டி . அப்படியும் அவன் ஏமாற்றி சென்றுவிடுவான் . வயதாகிவிட்டதால் கூடிய இயலாமையும் , மருமகளின் வசவுகளையும் எதிர்நோக்கி பயத்துடன் பாட்டி காத்திருப்பதாக கதை முடியும் . என்னை பாதித்த கதைகளில் ஒன்று. ஆனால் நான் அந்த சிறுவனை போல் இல்லை . சின்ன வயதில் பாட்டியின் அருகிலேயே இருப்பேன் . அம்மாவின் அம்மா . ஆச்சி என்று கூப்பிடுவேன் . மிகவும் பாசமாக இருப்பார்கள் .
நான் பிறந்த சமயத்தில் அம்மாவிற்கு உடம்பு முடியாமல் போனதாகவும் , அதனால் நான் என் பாட்டியிடம்(ஆச்சியிடம்) தான் இருந்தேன் என்றும் , அதனால் தான் எனக்கு ஆச்சியிடம் பிரியம் அதிகம் என்று அம்மா கூறுவார்கள் .ஆனால் எனக்கு ஆச்சியிடம் பிடித்தது அவர்களின் கதை தான் . கதை சொல்லிக்கொண்டே சாப்பாடை உருட்டித் தந்து என்னை சாப்பிட வைத்துவிடும் சாமர்த்தியம் ஆச்சிக்கு மட்டுமே உண்டு. அம்மாவால் கூட அது முடியாது .நான் , என் அத்தை ( என்னை விட ஒரு வயது தான் அதிகம் அவளுக்கு ! ) மாமா பையன்களான ஜொதிஸ் , சுரேஶ் , அஸ்வின் என அனைவரும் பெரியாச்சியின் அருகில் உட்கார்ந்து கொண்டு , கையில் உருண்டை வாங்கி சாப்பிடுவோம். அதுவும் தட்டில் கடைசியாக இருக்கும் சாத உருண்டையினை நெய் உருண்டை என்று சொல்வோம் . அது அவ்வளவு ருசியாக இருக்கும் . அந்த நெய் உருண்டைக்காக இந்தியா - பாகிஸ்தான் ரேஞ்சிற்கு யுத்தம் நடக்கும் . ஆனால் , பெரியாச்சி உருட்டித்தருகிறார்கள் என்றால் , நான் அன்- அப்போஸ்டாக ஜெயித்து விடுவேன் . இனி வெளிவரும் அஜித்தின் படங்கள் வெற்றி பெறுவது எவ்வளவு நிச்சயமோ , அவ்வளவு உறுதியாக கூறலாம் , எனக்கு தான் நெய் உருண்டை கிடைக்கும் .
அது மட்டும் அல்ல . ஆச்சிக்கு கொஞ்சம் பெரிய சாரிரம் . அவர்களால் ரொம்ப தூரம் நடக்க முடியாது. ஆட்டோ இல்லை ரிக்ஶா தான் . அதனால் நான் பாட்டியுடனே இருப்பதால் , எனக்கும் அந்த சவாரி கிடைக்கும் .
ஒருநாள் ஆச்சி வீட்டில் எதோ இருக்கமன சூழ்நிலை . எல்லாரும் அமைதியாக இருந்தார்கள் . அப்பொழுது ஆச்சி திடிரென்று வழக்கமாக பெரும் சப்ததொடு ஏப்பம் விடுவது போல் ஏப்பம் விட , அவர்கள் மடியில் தூங்கி கொண்டிருந்த என் தங்கை , திடீரென முழித்து கத்த , அதை பார்த்துகொண்டிருந்த நானும் சித்தியும் சிரிக்க , வீடு திடீர் என கலகலப்பாகி விட்டது . பாட்டியிடம் எனக்கு பிடித்த இன்னொரு விசயம் , அவர்களது கைகள் . அவர்களது கைகள் , சுருக்கம் விழுந்து , தொள தொள வென இருக்கும் . எதோ பச்சை குத்தியிருந்தாக ஞாபகம் .தொட்டு பார்த்தால் மிருதுவாக இருக்கும் . அந்த கைகளில் முகம் வைத்து எத்தனையோ நாட்கள் நான் தூங்கி போயிருக்கிறேன் .
என்னால் மறக்க முடியாத இன்னொரு சம்பவம் இது. என் சின்ன வயதில் நடந்தது . ௧ அல்லது ௨ படித்துகொண்டிருந்தேன் என நினைக்கிறேன் . சின்ன தாத்தாவுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது , வீலுக்குள் கால் விட்டு விட்டேன் . நல்ல அடி . ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது . உடனே டாக்டரிடம் சென்று கட்டு போட்டு விட்டு வந்தோம் . இது அப்பாவிற்கு தெரியாது . அந்த நாட்களில் , அப்பாவிற்கு அதிகமாக கோபம் வரும் .காரணம் இல்லாமல் சீப்பை எடுத்து விலாசி விடுவார் . இப்பொழுதும் அப்படித்தான் . ஆனால் இப்பொழுது வருவது இயலாமையினல் வரும் கோவம் . எனக்கு அடிபட்டது தெரிந்தால் , இன்னும் அடிவிழுகும் . பாட்டிக்கோ , அடிபட்டது தெரிந்தால் இனி இங்கு அனுப்ப மாட்டாரோ என்ற பயம் . பாட்டியின் மடியில் உக்கார்ந்து கொண்டு , கட்டு போட்ட காலை பாட்டியின் சேலைக்குள் ஒளித்துவைத்து கொண்டேன் . அப்பா வந்தார் .அன்று மட்டும் , என்ன காரணத்தினாலோ , எனக்கு மிட்டாய் வாங்கி வந்திருந்தார் . ’குமார் இங்க வா’ என்று கூப்பிட்டார் . என்னால் தான் நடக்க முடியாதே . மிட்டாய் வேண்டாம் என்றேன் . கோவம் வந்து விட்டது . அடிக்க வந்தார் . பாட்டி தடுத்து சொல்லி பார்த்தார்கள் . அப்புறம் தான் எனக்கு அடிபட்டது அப்பாவிற்கு தெரிய வந்தது .உடனே என்னையும் , அம்மாவயும் கிளம்ப சொன்னார் . அப்பொழுது ஆச்சி , ’ அய்யா , அய்யா . தெரியாம நடந்திடுச்சு , பையன அடிக்காதிங்க . மறுபடியும் கூட்டிட்டு வாங்க ’ என கெஞ்சியது இன்னும் நினைவில் இருக்கிறது . அப்படியும் உடனே கிளம்பி விட்டோம் என்றே நினைக்கிறேன் .
பின்னர் வியாபரத்தில் , எற்பட்ட சண்டை காரணமாக அப்பா தாத்தா வீட்டிற்கு செல்ல கூடாது என்று சொல்லிவிட்டார் . மதுரையில் இருந்துமே கிட்டதட்ட ௫ - ௬ வருடங்கள் ஆச்சியய் பார்க்க வில்லை . அவ்வபொழுது ஏதாவது செய்தி வரும் .தாத்தா இறந்ததிற்க்கு கூட என்னை அனுப்பவில்லை . அம்மா மட்டும் தான் போய் வந்தார்கள் . பின்னர் அந்த உறவே இல்லாதது போலாகிவிட்டது .நாங்களும் நாகர்கோவில் , திருநெல்வெலி , கோவில் பட்டி என்று ஊர் மாறிக் கொண்டு இருந்தோம் . எனக்கு தெரிந்து அதற்கு அப்புறம் நான் ஆச்சியய் பார்த்தது , காலேஜ் முதல் வருடத்தில் தான் . அதுவும் , அப்பாவிற்கு தெரியாமல் மதுரை போய் பார்த்த பொழுது தான் .அப்பொழுது ஆச்சி நிறைய அழுதார்கள் . ரொம்ப நாள் கழித்து ஆச்சி கையினால் உருண்டை வாங்கி சாப்பிட்டேன் . ஆனால் இந்த தடவை ஜோதிஸ் , அஸ்வின் , அத்தை என யாரும் சண்டைக்கு வர வில்லை . அவர்களுக்கு ஆச்சியய் தவிர வேறு பல விசயங்கள் முக்கியமானவயாக இருந்தன .
நல்லா வாழ்ந்தவன் சீரழிய கூடாது என்பர்கள் . ஆனால் என் பாட்டியின் விசயதில் அது தான் நடந்தது . மாமவிற்க்கு வியாபாரத்தில் நஶ்டம் . சொந்த வீட்டை விற்று விட்டு ஒரு சிறிய வீட்டிற்க்கு வந்தார்கள் .பின்னர் அதுவும் இல்லாமல் , இன்னொரு சொந்தம் வீட்டில் தங்க வேண்டியது வந்தது . முன்னெல்லாம் பாட்டியய் பார்த்துவிட்டு திரும்பினால் , கண்டிப்பாக பையில் நூறு ருபாய் இருக்கும் . பின்னர் அது ஐம்பது ௫ , இருபது ௫ என்றானது . ஆனால் இல்லாமல் இருந்ததில்லை . தனது கடைசி நாட்களில் ஆச்சி அமைதி இல்லாமல் இருந்தார்கள் என்று தான் நினைக்கிறேன் . தனது பையன் வீட்டிலும் இல்லாமல் , பெண் வீட்டிலும் ( எனது வீட்டில் ) , இன்னொருவன் வீட்டில் இருக்கிறோமே என்று அவர்கள் நினைத்திருக்க கூடும் . ஒரு தடவை பார்த்த பொழுது , இப்பொல்லாம் ஜோதிஸ் , அஸ்வின் யாரும் தன்னை வந்து பார்பதில்லை என்று கூறி வருத்தபட்டார்கள் . அப்பா நிலைமை சரி இல்லததால், ஆச்சியய் வீட்டிர்க்கும் கூட்டி கொண்டு வர முடியவில்லை.
வேலை கிடைத்த முதல் மாத சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்து , அதில் ஆச்சிக்கு ஒரு சேலை வாங்கி கொடுக்க சொன்னேன் . அம்மாவிற்கு சந்தோசம் . பின்னர் தீபாவளி , பொங்கல் போன்ற விஶேசங்கலுக்கு ஆச்சியய் பார்க்க சென்று , எதாவது துணி மணி எடுத்து கூடுப்பேன் , இல்லாவிட்டால் காசு கொடுப்பேன் . அம்மா கொடுத்தாக சொல்வேன் .
ஒரு தடவை ஆச்சியய் பார்க்க சென்ற பொழுது , எனது மொபைலில் கால் வந்தது . அதை பார்த்து விட்டு , ஆச்சி , ’ குமாரு, எனக்கும் ஒரு போன் வாங்கி கொடுப்பியா என்றார்கள் . அம்பானி உதவிக்கு வந்தார் . ரிலையன்ஸ் போன் ஆச்சிக்கு வாங்கிகொடுத்தேன் . அடுத்த நாள் முதல் , என் வீட்டில் காலை நான் எழும் பொழுது , அம்மா ஆச்சியிடம் ’ ஆமா இன்னக்கி சம்பார் வைச்சு , வெண்டைக்காய் பொரியல் வைச்சிகலாம்னு பார்கிறென் ’ என்று பேசுவது வாடிக்கை ஆகி போனது .
எனது வண்டியெய் பார்த்து விட்டு , நல்லா இருக்கு . பின்னாடி உக்காருரதுக்கு ஒரு கைபிடி மாதிரி மாட்டிக் கொண்டு வா . நானும் ஒரு தடவ உன் கூட வண்டில வரென் என்றார்கள் . அதற்கான சந்தர்ப்பம் பின்னர் வரவே இல்லை .பஜாஜில் வேலை பார்த்துகொண்டிருந்த சமயம் . இயர் எண்டிங் . ௨௬ , ௨௭ ஆம் தேதிகளில்யே வேலை ஆரம்பித்துவிடும் . அன்று ௩0அம் தேதி வேறு . ஆச்சி தவறி விட்டதாக தகவல் வந்தது . தூங்கும் பொழுது மரணம் . மானேஜரிடம் சொல்லி விட்டு கிளம்பினேன் . ஆனால் நான் செல்வதற்குள் எடுத்து விடுவோம் என்றார்கள் . மழை காலம் வேறு , அதனால் தான் சீக்கிரம் எடுத்து விடுவோம் என்றார்கள். இன்னொருவர் வீது என்பதல் , அம்மவாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை .மாமாவும் சொல்லும் நிலைமையில் இல்லை . சில மாதங்கள் கழிந்து நான் , மதுரைக்கு சென்றிருந்த பொழுது ஜோதிஸை பார்க்க நேர்ந்தது .இருக்கும் பொழுது தெரியாத ஒரு பொருளின் மதிப்பு , அது இல்லாவிட்டால் தான் தெரியும் என்பது போல , அப்பொழுது ஜோதிஸ் என்னிடம் சொன்னது , ’ ஆச்சி கையால உருண்டை வாங்கி சாப்பிடனும் போலிருக்கு அத்தான் ’ என்றான் . உண்மையிலேயே தான் சொன்னானா , இல்லை எனக்காக சொன்னானா என்று தெரியவில்லை .
அன்பும் , பாசமும் கிடைக்க , விலை கொடுக்க வேண்டி வரும் இந்நாளில் , என்னை பொருத்தவரை ஆச்சிகள் போன தலைமுறையின் நினைவுகள். எவ்வளவு தான் கொடுத்தாலும் , அவர்களின் அந்த அளவற்ற உண்மையான அன்பு இனியும் வேறு இடத்தில் கிடைக்குமென்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை . இருப்பவர்கள் புரிந்து கொண்டு வாழ்க !!!
பின்குறிப்பு : இந்த பின்னல் , விஸ்கியோ , ரம்மோ , வேறு எந்தவித உட்கொள்ளலும் இல்லாமல் , பூரண சுயநினைவுடன் எழுதியது .