Monday, January 21, 2008

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௧ :

வெண்மணி வாயிலாக பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" புத்தகம் கிடைத்தது . அருமையான கவிதைகளின் தொகுப்பு . அவற்றில் , எனக்குப் பிடித்தது பின்வருவன.

மௌனி :

அதிகாலை ஆறு மணிக்கு
வீடு தேடி வந்தவர்களுக்காக
தூக்கத்தை ரத்து செய்து
எழுந்தேன் .

குளிக்கும் பொழுது
கூப்பிடும் குரல் கேட்டு
முழுமையாய் குளியாமல்
வெளியே வருகை

சாப்பிடும் வேளை சொந்தம் வர
, அரைவயிறு நிரப்பி
அவசரமாய் முடிப்பு

பேருந்தில் பக்கத்தில் அமர்ந்தவனுக்காக
உடல் கால்பாகமாய்
ஒடுக்கப்பட்டது

என் பிரச்சனைகளே என்னால் தீர்க்கப்படாத நிலையில்
, வந்தவர்கள் சிக்கல்களை கேட்க மௌனியானேன் .

எனக்காக வாழ எத்தனிக்கும் வேளையிலெல்லாம்
விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது யாருக்காகவோ

அன்றாட வாழ்வில் நடப்பவை இவை . நம்மால் நமக்கான வாழ்வினை வாழ முடியவில்லை என்பதே சரி . அப்படியே வாழ விரும்பினாலும் , அது மற்றவர்களை சார்ந்து தான் இருக்கவேண்டியுள்ளது . அப்புள்ளியில் தான் சமூகம் , சார்புநிலை என்றவை வருகின்றன
.
நாம் மற்றவர்களிடம் என்னதான் பேசுகிறோம் ? சில சமயங்களில் சகாயம் வேண்டியும் , சில சமயங்களில் சமாதானம் வேண்டியும் , பல சமயங்களில் தமது பிரச்சனை அவருக்குப் புரிய வேண்டும் என்பதற்க்காகவுமே பேசுகிறோம் . நமது பிரச்சனை மற்றவருக்கு புரிந்து என்ன பயன்? அது சில சமயம் ஒரு ஆறுதல் , சில சமயம் ஒரு தேறுதல் வேண்டி அவ்வளவுதான் .

எனினும் எனக்கான வாழ்க்கை என்பது என்ன ? என்பதே கேள்விக்குறியதாகவும் இருக்கிறது . எனது அம்மா , அப்பா , எனது தங்கை , எனது குடும்பம் , எனது நண்பர்கள் ...... இவர்கள் அல்லது இது தான் எனக்கான வாழ்வா ? தெரியவில்லை .

இதற்கான பதிலாக பொன்.குமாரின் மற்றொரு கவிதையே இருக்கிறது .

புரிதல் :

விவரம் புரியுமுன்னே
கடந்துவிட்டது
குழந்தைப்பருவம்

கவலையின்றி முடிந்தது
கல்விப்பருவம்

வேலை தேடுவதிலேயே
கழிந்தது ஒரு சில வருடங்கள்

கல்யாணத்திற்குப் பின்
தாம்பத்தியம் அறியும் முன்னரே
பிறந்தன பிள்ளைகள்

பிள்ளைகளை வளர்த்து
ஆளாக்கவே சரியாயிருந்தது மீதிக் காலம்

எந்நிலையிலும் புரியாமலே
உணர்ந்து கொள்ள முடியாமலே
முடிந்துவிட்டது வாழ்க்கை !!

இது தான் அனைத்து சாதாரணார்களுக்கும் நடப்பது . நாமும் ஒரு சாதாரணாக இருக்க வேண்டுமா , அல்லது சாதிக்க வேண்டுமா என்பதினை நாம் தான் முடிவு செய்யவேண்டும் .

மீண்டும் வருகிறேன் !!

No comments: