Sunday, September 9, 2007

ஜமீலா :

ஆனந்தவிகடனும் குமுதமும் மட்டுமே தமிழ் ’இலக்கியங்கள் ’ என்ற எனது நீண்ட கால எண்ணத்தினை தகர்த்தேறிந்து விட்டது வெண்மணி அனுப்பி வைத்த புத்தகங்கள் . மூன்று ருஶ்ய நாவல்களும் , கவிதைத் தொகுப்பும் , இன்னும் சிலவும் எனது " முதல் லைப்ப்ரரி"யினை ஆரம்பித்திருக்கின்றன .

அவ்வகையில் நான் முதலில் ஆரம்பித்தது " உண்மை மனிதனின் கதை " . அதைப் பற்றி பின்னால் எழுதுகிறேன் . அடுத்து படித்தது " ஜமீலா " . கதை மிகவும் பாதிக்கிறது . ஜமீலாவும், தானியாரும் , கிச்சனே பாலாவும் இன்னும் சில நாட்கள் என்னைத் விடாது துரத்தப் போகிறார்கள் என்பது திண்ணம் .

ஒருவரிக் கதை . போருக்குச் சென்றுவிட்ட கணவன் . அவனது அன்புக்காகவும் ஆதரவிற்காகவும் ஏங்கும் மனைவி . கடிதத்தில் கூட "பின்குறிப்பாக " மட்டுமே மனைவியின் நலம் விசாரிக்கும் கணவன் . ஒவியக்கார சிறுவயது கொழுந்தன் . விட்டேந்தியாக திரியும் தனியார் . இசையால் தானியாருக்கும் ஜமீலாவுக்குமான பற்றுதல் . இதுதான் கதை . ஆனால் புத்தகத்திலும் திரைகதையின் தாக்கத்தினை கொண்டுவருதல் சாத்தியமே என நீருபித்திருக்கிறார் ஆசிரியர் .

ஒரு ஓவியத்தில் இருந்து ஆரம்பித்து , அங்கிருந்தே கதைக்குச் சென்று , கடைசியாக அதிலேயே கதையினை நிறைவு செய்திருக்கும் ஆசிரியரின் பாங்கு அற்புதம் . கதையின் சில பகுதிகளை திரைக்காட்சியாக நினைத்தாலே புல்லரிக்கிறது . சில பகுதிகளில் ஆழ்மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடு .....

அண்ணி ஜமீலாவிடம் முரட்டுத்தனமாக நடக்கும் உஸ்மோனை எதிர்த்து ஒண்ணும் செய்யமுடியாமல் தவிக்கும் சிறுவனின் உள்ளக்குமுறல் , அதிக பளுவுள்ள மூட்டையினை தானியாரைத் தூக்கச் செய்த ஜமீலாவின் மற்றும் சிறுவனின் குற்றவுணர்ச்சி , ஸ்தெப்பிக் காடுகளில் தானியாரின் பாட்டு , பின்னர் ஜமீலாவுக்கும் தானியாருக்குமான நெருக்கம் , அவர்களுக்கிடையேயான பற்றுதல் குறித்த சிறுவனின் எண்ணவோட்டம் , அவனது ஓவியத்தினை ஜமீலா ரகசியமாக வாங்கி வைத்துக்கொள்வது , கணவனிடமிருந்து வந்த கடிதத்தினை ஜமீலா படிப்பதை தனியார் பார்ப்பது என கதையின் அனைத்துப் பாகங்களும் அற்புதமோ அற்புதம் . ரஶ்யாவின் ஸ்தெப்பிக் காடுகளுக்கும் , பாறைக் குன்றுக்கும் போய் வரவேண்டும் போல் உண்மையில் தோன்றுகிறது .

இக்கதையினை திரைப்படமாக எடுக்க யார் சரி என யோசித்துப் பார்த்தேன் . எஸ் ஜே சூரியாவிடம் கொடுத்தால் , பக்காவான மலையாள நீலப்படம் ரெடியாகிவிடும் . மணிரத்னம் , ஶங்கர் போன்றோர் கதையின் ஆழத்தினை சிதைத்துவிடுவார்களோ என பயமாய் இருக்கிறது . பாரதிராஜாவிடம் கொடுக்கலாம் . பதினாரு வயதினேலே , முதல் மரியாதையய்யும் மிஞ்சக் கூடிய காவியம் கிடைக்கும் .

பார்க்கலாம் .

மீண்டும் வருகிறேன் !!

No comments: