Thursday, October 4, 2007

அம்முவாகிய நான் :

அம்முவாகிய நான் படம் பார்த்தேன் . தவிர்க்கவே முடியாமல் தியாகராஜனின் நினைவு வந்தது. அந்தளவு ஆர்ப்பாட்டம் அப்பெயரால்!! கதையும் ஓரளவு , அவன் ’விரும்பும் ’ துறையினைப் பற்றியதாக இருப்பது தற்செயல் !

அழகான , அமைதியான படம் என்பது படம் ஆரம்பித்த , சில நிமிடங்களிலேயே தெரிந்துவிடுகிறது . குடும்ப சூழ்நிலை காரணமாகவே , இத்தொழிலுக்கு வருவதாக பல படங்களில் காட்டிவிட்டதால் , விரும்பி இத்தொழிலுக்கு வருவதாக காட்டியிருப்பது புதிது .

குழந்தையினை வாங்கும் பொழுது, பின்னால் பழைய பேப்பர் வியாபாரம் நடப்பது போல் காட்டியிருப்பது போன்ற நச் சீன்கள் படத்தில் ஏராளம் . " நானும் தான் வரிசைல நின்னேன் , என்னை விளையாட்டுல சேர்த்துக்கல்ல " என்று குழந்தை புலம்புதல் , வியாதி வந்து காணாமல் போகும் ராஜஸ்ரி , கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் , புடவையினை அவிழ்த்து விட்டு , "இதுதான் ப்ரியா இருக்கு " என்று ஒரு தொழில்க்காரிக்கான நேர்த்தியினுடன் கூறுதல் , என படத்தின் பல சீன்கள் இயக்குனரின் திறமையினை காட்டுகிறது .

வசனங்களும் பளீச்சிடுகின்றன . " காசு குடுத்துருக்கேல்ல , பிடிக்காம போகுமா ? " என்றும் , " ரைட்டரா , ஓஓ அந்த மாதிரி ரைட்டரா ? " என்னும் பொழுதும் , " அங்க தப்பில்ல , இங்க தப்பு " என்னும் பொழுதும் ,அவை திரைக்காட்சிக்கு வழு சேர்க்கின்றன .

பாரதியின் நடிப்பு அற்புதம் . குறிப்பாக கல்யாணத்தின் பொழுது காட்டும் அந்த கண்ஜாடை !! கணவனின் ரகசிய பரிசைக் காணும் ஆவலோடு கூடிய நடை , முதலில் பார்த்திபனைப் பார்க்கும் பொழுது காட்டும் அதட்டல் குறும்பு என படம் முழுக்க பாரதியாட்டம் தான் !!

பார்த்திபன் டைப் வசனங்களும் உண்டு , சில இடத்தில் மட்டும் . அதிரடியில்லாத இசையும் , வசனமும் , பாரதியின் யதார்த்தமான நடிப்பும் கண்டிப்பாக மீண்டும் ஒரு தடவை பார்க்கத் தூண்டும் .

அற்புதமான , அமைதியான படம் .

மீண்டும் வருகிறேன் !!!

No comments: