Sunday, September 9, 2007

காத்திருப்பு :

எத்தனையோ விஶயங்களுக்காக காத்திருக்கிறோம் . எதற்காக , என்னவென்று தெரியாமலே சில , தெரிந்து தவிர்க்க விரும்பியும் இயலாமலும் சில , வேண்டியிருந்த காத்திருப்புகளும் சில . இந்த வாரம் எனது நண்பன் ஒருவன் இந்தியா திரும்புகிறான் , விடுமுறையில் . அவனை வழியனுப்ப வேண்டி ஏர்போர்ட்டில் காத்திருந்தேன் . அப்பொழுது தோன்றியது , வாழ்வில் எத்தனை முறை காத்திருந்திருக்கிறேன் ? எனது மறக்க முடியாத காத்திருப்புகள் இவை .

எனது இதுநாள்வரை வாழ்வில் எத்தனையோ விஶயங்களுக்காக காத்திருந்திருக்கிறேன் . சிலவற்றை மறக்க வேண்டும் எனவும் , சிலவற்றை என்றேன்றும் நினைத்திருக்க வேண்டும் எனவும் எப்பொழுதும் நினைத்திருப்பேன் . தவிர்க்கவே முடியாமல் நான் மறக்க நினைத்த காத்திருப்புகளே என் நினைவில் முதலில் தோன்றுகின்றன .

இஞ்சினியரிங் முடித்த கையோடு , ஆர் . டீ . ஓ ஆபிஸில் வேலையில் இருந்த பொழுது , தினப்படி எனது சம்பளம் ஐம்பது ரூபாய் . அதனை தரும் பொழுது , சொல்லி வைத்தாற் போல் , ஆபிஸர் கையில் சில்லறை இருக்காது . சில்லறை மாற்றி வருகிறேன் என்று சொல்லி விட்டு , அருகில் இருக்கும் பாருக்குச் சென்று , சிறிது நேரம் கழித்து திரும்புவர் எனது மாமாவும் அந்த ஆபிஸரும் . அந்த அரை மணி நேர காத்திருப்பு என்னால் இனி எப்பொழுதும் மறக்க முடியாதவை . பாக்கெட்டில் ஐந்து பைசா இருக்காது . அந்த நேரத்தில் , சிகரட் அடித்துக் கொண்டு , புகை விட்டுத் திரியும் ஆட்கள் என்னைக் கடந்து சென்றால் , அவர்கள் வம்சம் முழுவதுக்குமாய் திட்டுவேன் . காசில்லாது இருக்கையில் , புகையும் சிகரெட்டுடனும் , காற்றில் பரவ விடும் அந்த புகையின் வாசத்தையும் நுகரும் , எனக்கு அளவிற்கு மீறிய எரிச்சல் வரும் . அக்காத்திருப்பு என்னால் மறக்க முடியாது .

பிரிவுகள் சில சமயம் சந்தோசப் படவும் , சில சமயங்களில் வேதனைப் படவும் வைக்கின்றன . எனது அடுத்த மறக்க முடியாத காத்திருப்பும் மதுரையில் தான் . நண்பர்களைப் பிரிந்து , மதுரையில் இருந்த நேரம் . பிலிப்ஸில் வேலை . அடுத்த நாள் எனக்கு திருச்சி செல்ல வேண்டியிருந்தது . அப்பொழுது பார்த்து , பிரசன்னாவும் , பாலாஜியும் சிவகாசிக்கு ஒரு வேலை விஶயமாக வருவதாக கூறியிருந்தார்கள் . காலையில் நான்கு மணிக்கெல்லாம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டில் காத்திருந்தேன். அவர்கள் பஸ் எதேச்சையாக நாலரைக்கு வரும் எனக் கூறியிருந்தார்கள் . அவர்களை தொடர்பு கொள்ளவும் வழியில்லை . கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் காத்திருந்துவிட்டு , ஐந்தரைக்கு பஸ் ஏறினேன் . இல்லாவிடில் எனது திருச்சி டீலரை பார்க்க முடியாமல் போய் விடும். ஆதலால் மனசே இல்லாமல் பஸ் ஏறினேன் . பஸ் பேருந்து நிலைய வளைவினைக் கூடத் தாண்டியிருக்காது . போனில் பிரசன்னா . " மதுரை மாட்டுத்தாவணில இருந்து பேசுறேன் , மச்சி " என்றான் . ஒரு வருடம் பார்க்காமல் இருந்த நண்பர்களை , ஒரு ஐந்து நிமிட காத்திருப்பில் தவற விட்டிருக்கிறேன் !!! தாங்க முடியாத கோபத்தினூடும் , வருத்ததினூடும் பயணத்தைத் தொடர்ந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது . !!

அதே போல் தான் , சென்னையிலும். பிலிப்ஸில் இருக்கும் எனது மானேஜருடன் சண்டை . ராஜினாமா செய்யச் சொன்னார் . " இவன் என்ன சொல்லி , நாம் கேட்பது ? " என்ற வைராக்கியத்தில் நேரே ஹச் ஆர் சென்று எனது ராஜினாமா கடிதம் கொடுத்தேன் . கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார்கள் . அந்த காத்திருப்பில் மனதில் நிறைய எண்ணங்கள் . அடுத்ததாக என்ன ? என்பது முக்கியமானது . உண்மையில் அப்பொழுது என்னால் காத்திருக்கவே முடியவில்லை . மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வரவேண்டுமா ? என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது . எந்நேரமும் அழுதுவிடுவேன் என்ற நிலை . வேறெதுவும் தோன்றவில்லை . சிவாவுக்கு போன் பண்ணியதும் , அவன் அதற்குள் ஐந்தாறு தடவை போன் செய்து அசுவாசப்படுத்தியதும் , மறக்க கூடாதவை . மறந்தால் நான் மனிதனில்லை .

இனிமையான காத்திருப்புகளும் உண்டு . பள்ளியில் படிக்கும் பொழுது , நானும் குமாரசாமியும் குளக்கரையில் காத்திருப்போம் . அதுவும் இரவு எட்டு மணி வாக்கில் . ஆளரவம் இல்லாத அந்த கும்மிருட்டில் , எங்களுக்கான சிகரட்டுடன் காத்திருந்து கதை பேசித் திரிவோம் . சிறிது நேரத்தில் குமார் வருவான் . கையில் பாட்டிலுடன் . பின்னர் என்ன , கூத்தும் கச்சேரியும் தான் . இரவு நேரத்தில் , எங்களுக்கான சிந்தனைகளுடனும் , தனிமையுடனும் , மல்லாந்து படுத்து, வானத்து நட்சத்திரங்களை கணக்கெடுக்கும் அந்த இரவு நேர காத்திருப்பு மனதிற்கு அமைதியைத் தந்ததாகவே நினைக்கிறேன் . !!

என்னவளுக்காக காத்திருக்கும் நேரங்கள் அற்புதமானவை . சில நேரங்களில் அதனைப் பற்றி மீண்டும் நினைக்கும் பொழுது , நானா அப்படி ? என்று சிரிப்பாகவும் , மனதிற்கு சுகமாகவும் இருக்கிறது . அதிகாலை ஏழு மணி பஸ்ஸிற்காக , அதற்கு முந்தைய பஸ்ஸினைப் பிடித்து , இடலக்குடி பஸ் ஸ்டாப்பில் இறங்கி , காத்திருப்பேன் . எட்டு மணி வாக்கில் தரிசனம் கிடைக்கும் . அந்த சில நேரங்களில் , எனது எண்ணவோட்டங்களை வார்த்தைகளில் வடித்தல் இயலாதது . அதனைப் பற்றி நினைக்கும் இந்த நேரத்திலும் , கிட்டத்தட்ட அதே மனநிலைமையில் இருப்பதாகவும் , அதே அதிர்வுகளையும் உணர்கிறேன் . கையில் பையுடனும் , வழித்துச் சீவப்பட்ட முடியுடனும் , நெற்றியில் மெல்லிதாக தீட்டப்பட்ட குங்குமத்துடனும் , சிரித்த முகமாகவும் இருக்கும் என்னையே மீண்டும் ஒரு தடவை பார்க்கவேண்டும் போல் உள்ளது . அதே சூழ்நிலையில் மீண்டும் ஒரு தடவையாவது , அதே அதிர்வினை அனுபவிக்கவேண்டும் போல் உள்ளது .

மீனாவின் பேச்சுப் போட்டிக்காக காத்திருந்து , அவள் பரிசு வாங்கும் வரை பள்ளியின் தெருவொர மேடைக்கருகில் காத்திருந்தது , கல்லூரியிலும் லீவ் முடிந்த நான் சீக்கிரமே திரும்பிவிட , மற்றவர்களின் வருகைக்காக நானும் பிரசன்னாவும் காத்திருந்தது , சிவாவின் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் அண்ணனின் செக்குக்காக , ஈஓபி பேங்கில் காத்திருந்தது , பெங்களூரில் தியாகராஜனுக்காக காத்திருந்தது , " தேவன் " பட அருண்பாண்டியன் போல் வந்தவனை வரவேற்றது , அண்ணாமலைக்காக ரெயில்வே ஸ்டேஶனில் காத்திருந்தது என காத்திருப்பின் சுவாரஸ்ய நினைவுகளுக்கு பஞ்சமேயில்லை . !!

இந்தியா திரும்ப வேண்டி , ஏர்போர்ட்டில் ’இமிக்ரேஶன் ’ முடித்து காத்திருக்கும் அந்த சில மணி நேரங்களுக்காக காத்திருக்கிறேன் . !!!

மீண்டும் வருகிறேன் . !!

No comments: