Sunday, September 9, 2007

லேபர் கேம்ப்புகள்

தூய்மைக்கும் , கேளிக்கைக்கும் பெயர் போன துபாய் நகரம் , லேபர் கேம்ப்புகளுக்கும் பெயர் போனது என்பதை சில நாட்களுக்கு முன் தான் அறிந்தேன் . அபுதாபி லேபர் கேம்ப்புகளுக்கும் நிறைய தடவை சென்றிருக்கிறேன் . ஆனால் அவை பரவாயில்லை ரகம் . துபாயின் மற்றொரு முகத்தை யாரும் அறியா வண்ணம் மறைத்து வைத்திருக்கிறார்களோ என்று கூட தோன்றுகிறது .

உலகில் உள்ள மற்ற பணக்கார நாடுகளேல்லாம் வளர்ந்துவிட்டு , அடுத்ததாக யாரைக் கவிழ்க்கலாம் என திட்டம் தீட்டிக் கொண்டிருக்க , தன்னிடம் உள்ள எண்ணை வளத்தை மட்டுமே கொண்டு , வளர்ந்து வரும் நாடு யு. ஏ . இ . இப்பொழுது உலகில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் பாதிக்கும் மேலாக துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது . உலகில் உள்ள கட்டுமானப் பணிகளுக்கான கிரேன்களில் கிட்டத்தட்ட அறுபது சதவிகிதத்திற்கும் மேல் இங்கு உள்ளது என்றால் , இங்கு நடைபேறும் வளர்ச்சிப் பணிகளையும் , அதற்காக செய்யப் பட்டிருக்கும் முதலீட்டைப் பற்றியும் சுமாராக ஒரு எண்ணத்திற்கு வரலாம் !! வளர்ந்து வரும் நாட்டின் திட்டப் பணிகளுக்கு , உலகளாவிய அங்கிகாரம் பெற வேண்டி , உலகிலேயே அதிக உயரமுள்ள டவர் கட்டுவது , வெப்ப பூமியான இங்கு, குளிர்ப் பிரதேச சூழல் உண்டாக்குவது என அரசாங்கம் , பலதரப்பட்ட வேலைகளில் இறங்கியுள்ளது .

இக்கட்டடப் பணிக்களுக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் பெரும்பாலவர்கள் இந்தியா , பாகிஸ்தான் , பங்களாதேஶ் போன்ற தெற்காசிய நாடுகளைச் சார்ந்தவர்கள் . சீனர்களும் பெருமளவில் உண்டு ! அனைவரும் கேம்ப்புகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள் . வாரம் ஆறு நாட்கள் பணியும் , ஒரு நாள் விடுமுறையும் இருக்கும் . அதுவும் ஊரில் இருந்து தள்ளியிருப்பதால் , கம்பனி செலவிலேயே , நகரின் ஏதாவதொரு முக்கியச் சந்திப்பில் இறக்கி விட்டு , மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து அழைத்துச் செல்வர் . அதாவது மந்தை ஆடுகளைப் போல !!

இந்த " கன்ஸ்ட்ரக்ஶன் பூம் " , தத்தமது தொழிலுக்கு ஏற்றவாறு உபயோகித்துக் கொள்வது என்னைப் போன்ற , எலக்ட்ரிக்கல் கம்பனிகளில் " கையில் பையும் , வாயில் பொய்யுமாக " திரிபவர்களின் பணி .இப்பணி விஶயமாக புதியதாய் கட்டப் பட்டுக் கொண்டிருந்த ஒரு லேபர் கேம்புக்குச் சென்ற பொழுது தான் , கேம்ப்களின் உண்மை நிலவரம் அறிந்தேன் .

ஒரு பெரிய ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை . ௩0 அடிக்கு ௩ அடி ஒரு ரூம் . அதில் " டபுள் காட் " முறையில் கிட்டத்தட்ட இருபத்திஐந்து பேர் . ஒரே ரூம் . காமன் டாய்லட் . முன்னமே சொல்லியிருந்தது பொல , வெள்ளிக்கிழமை மட்டும் தான் விடுமுறை . அன்று தான் துணி துவைத்தல் , இதர அத்தியாவசிய பணிகள் . சில சமயங்களில் அதுவும் ஓவர் டைம் என்ற பெயரில் காசாக்கப் படும் . சிலர் ஒன்று கூடி காசு போட்டு, டீவி வாங்கியுள்ளனர் . மற்றவர்கள் அதற்கான கேபிள் செட் ஆப் !!

சத்வா மற்றும் சோலாபூரில் இருக்கும் லேபர் கேம்ப்புகளில் கேம்ப் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு கடை . மதியம் சாப்பாட்டிற்கு காலை பதினோரு மணிக்கே காத்திருந்தால் தான் சாப்பாடு கிடைக்கும் போலிருக்கிறது . அதுவும் ஒரு பங்களாதேசிக் கடை . அதனால் நாம் ஆசைப்படும் இட்லியும் , தோசையும் கொஞ்சம் கஶ்டம் தான் . !!

கட்டப் படப் போகும் புதிய லேபர் கேம்ப் , தற்பொழுது உள்ளதினைப் போலவே திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டதால் , அதன் உள்ளே சென்று பார்த்தேன் . கொடுமை . குமட்டும் வாசனை . பிலிப்பிணிகள் இருப்பதனலோ என்னவோ சகிக்க முடியாத வாசனை !! .இருக்கும் இருபத்திஐந்து பேருக்கும் துணி காயப்போட ஒரே இடம் . அனைவரது துணியும் அங்கு காய்ந்து கொண்டிருந்தன !!! . அங்கும் ஒரு தமிழன் இருந்தான் . பெயர் அய்யனார் . திருச்சிப் பக்கம் எதோ ஏரியா என்று சொன்னான் . பேசிக்கொண்டிருந்தோம் . நல்ல பையன் . காதலிக்கிறானாம் . கிட்டத்தட்ட சம்பாதிப்பதில் பாதிக்கும் மேலாக உண்டிக் காலுக்கே சரியாய் போய் விடுகிறது என்றான் . இந்தியாவில் இருக்கும் ஏஜன்ட் மூலமாக தான் , தன்னைப் போல பலரும் ஏமாற்றுப் பட்டுவிட்டதாகக் கூறினான் . இரண்டோரு வாரத்தில் இந்தியா செல்ல லீவ் சாங்கஶன் ஆகிவிட்டதாகவும் , போனால் திரும்ப வருவதில்லை எனவும் கூறினான் .

வழக்கம் போல , காண்டிராக்டர் வந்தார் . " லேபர் காம்ப் தான் ஸார் . அதனால இருக்கிறதுல சீப்பா இருக்குறத குடுங்க " என்றார் . சரி என்று தலையாட்டிவிட்டுத் திரும்பினேன் !!. வேறேன்ன செய்ய முடியும் என்னால் ? வரும் பொழுது கண்ட காட்சி என்னை உலுக்கி விட்டது . பால்கனி மாதிரி இருக்கும் இடத்தில் இருந்து ஒருவன் பேசிக்கொண்டிருந்தான் . வீட்டிற்காக இருக்க வேண்டும் . நெல்லைத் தமிழ் போல இருந்தது . " சரியில்லன்னா மாத்திடுங்க , கொஞ்சம் பெரிசா பாருங்க , அட்வான்ஸ் நான் அனுப்பி வைக்கிறேன் . ஆமா நான் நல்லா இருக்கேன் " !!

என்னவோ போல் இருந்தது !!

மீண்டும் வருகிறேன் !!

No comments: