Monday, April 28, 2008

நானும் எனது சிங்கமும் :

எனது சிங்கத்தினைப் பற்றி எழுத வேண்டும் என நீண்ட நாட்களாகவே எண்ணிக் கொண்டிருக்கிறேன் , ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது . இந்த வாரமோ அடுத்த வாரமோ அது என்னை விட்டு பிரிந்து சென்றுவிடும் . அதற்கு முன்பாகவே எனது எண்ணங்களை பதிவு செய்யாவிடின் , அது என்றென்றைக்குமாய் முடியாமலே போய்விடுமோ என்ற கவலையின் வெளிப்பாடே இது !!

சென்ற வார விகடனில் வந்த ஒரு சிறுகதையில் , தனக்கு சீதனமாய்க் கிடைத்த " லம்பாற்டா " ஸ்கூட்டரினைப் பற்றி ஏ. ஹென்றி ( என்றுதான் நினைக்கிறேன் .. சரிபார்த்து எழுத முடியவில்லை (இப்பொழுதேல்லாம் என்னிடம் இருந்து இரவல் வாங்கிய விகடனையும் , இந்தியா டுடேயினையும் திருப்பிக் கொடுக்கும் பழக்கம் , எனது அபுதாபி நண்பர்களிடம் ( ?? ) ,அறவே நின்று போய் விட்டது !!! ) எ(அ)ழுதியிருந்தார் . சீதனமாய்க் கிடைத்த வண்டிக்கே , இப்படி என்றால் , தனது சம்பளத்தில் முதலில் வாங்கிய பொருளேன்றால் ???? ...

எனக்கும் ’ எனது சிங்கம் ’ என செல்லமாய் நான் அழைக்கும் எனது , Herohonda CD100 tn59b2535 க்குமான உறவு , மனிதர் உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு சாதாரணமான உறவுதான். பழைய விட்டாலாச்சாரியா படங்களில் வருவது போல , வில்ல அசுரனின் உயிர் , ஏழு மலை , ஏழு கடல் தாண்டி , பத்துதலை பாம்பு காவல் காக்கும் , கொதிக்கும் நீர்நிலையில் நேர் மேலே இருக்கும் , அடைக்கப் பட்டிருக்கும் கூண்டுக்குள் இருக்கும் ஒரு கிளியிடம் இருக்கும் . வழக்கம் போல ஹீரோ , எல்லா ஆபத்துகளையும் கடந்து , அக்கிளியின் கழுத்தைத் திருகி கொல்வார் . ஆனால் எனது இந்தக் கதை , அப்படிப்பட்டது அல்ல !!! வீட்டிலும் ஆபீஸிலும் இருக்கும் நேரங்களைக் காட்டிலும் , நானும் எனது சிங்கமும் தான் ஒன்றாய் இருப்போம் என்றாலும் கூட , எனது " உயிர் " என்று சொல்லும் அளவிற்கு அல்ல , நானும் எனது சிங்கமும் !! ஆனாலும் ஏதோ , பெயரிடப் பட முடியாத உறவும் புரிதலும் இருந்தது எங்களுக்குள் !!!

நானும் எனது சிங்கமும் இணைவதற்கான நிச்சயம் , நான் பிலிப்ஸில் வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது நாள் எந்தவித முன்னறிவிப்போ , புரோகிதரோ , புகையோ இல்லாமலே நடந்து முடிந்தது . அன்று எனது மானேஜர் என்னிடம் , நான் உடனே மதுரை செல்லவேண்டும் எனவும் , அவர் அதற்கு அடுத்த நாள் மதுரை வருவதாகவும் கூறினார் . நானும் உடனே " சரி சார் , அப்போ நான் போய் , டாக்ஸி புக் பண்றேன் சார் , நம்ம மார்க்கெட் போறதுக்கு ஈஸியா இருக்கும் என்றேன் " . சற்று நேரம் அமைதியாக இருந்தவர் " வேண்டாம் குமார் , நம்ம உன் வண்டியிலயே போய்டுவோம் , உன்கிட்ட வண்டி இருக்குல்ல ??? " என்றார் . ஏற்கனவே இண்டர்வியூவில் , வண்டியோட்ட தெரியும் எனவும் , வண்டி இருக்கிறது என்று பொய் சொல்லியிருந்ததினாலும் , வேறு வழியில்லாமல் " இருக்கு சார் , யமகா ( அப்பொழுது எனக்கு தெரிந்திருந்த ஒரே பைக்கின் பெயர் ) " என்றேன் . ஆக நிச்சயம் முடிந்தது , மணமகள் யாரேன்று தெரியாமலே !!

இரண்டு நாட்களில் , இருக்கும் பத்தாயிரத்தைக் கொண்டு பைக் வாங்குவது ஒன்றும் ஓகேனக்கல் திட்டத்தினை நிறைவேற்றும் அளவிற்க்கு கஶ்டமான காரியம் இல்லை . ஆனால் , அந்த இரண்டு நாட்களுக்குள் வண்டியோட்டவும் கற்றுக் கொள்ள வேண்டும் , அதுவும் மானேஜரை பின்னால் வைத்துக் கொண்டு டபுள்ஸ் அடிக்கும் அளவிற்க்கு தேர்ச்சியாக !!. ஆனாலும் செய்தாக வேண்டும் , வேறு வழி ???

மதுரை சென்றவுடன் , தெரிந்த உறவுக்காரர் ஒருவரிடம் எனக்கு ஒரு வண்டி வேண்டும் எனவும் , அதுவும் நாளைக்குள் வேண்டும் எனவும் கூறினேன் . அடுத்த நாள் நானும் எனது மாமாவும் அவருக்குப் பரிச்சயமான ஒரு மெக்கானிக்கிடம் போனோம் . அவரும் இரண்டு வண்டி இருக்கிறது என்றும் , ஆனாலும் இரண்டிலும் வேலை இருக்கிறதென்றும் , நான்கு நாள் கழித்து தான் வண்டி கிடைக்கும் எனவும் கூறினார் .முதலில் ஐயாயிரமும் , வண்டி எடுக்கும் பொழுது மீதி நாலாயிரமும் தருவது என்றும் , வண்டி ரிப்பேராகி எங்கேயாவது நின்று விட்டால் , அந்த இடத்திற்கு வந்து சரிபண்ணித் தருவது என்று எங்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் கையெழுத்தானது . அணு ஒப்பந்த அளவிற்கு முக்கியத்துவம் இல்லாததால் , பார்லிமண்ட் ( அப்பா???) ஒப்புதல் இல்லாமலே ஏகமனதாய் நிறைவேறியது . எனது நிலைமையினை அவரிடம் கூறி, அடுத்த நாள் ஒரு அரைமணி நேரத்திற்கு , ஏதாவது ஒரு யமஹா வண்டியினை " ஹோட்டல் கீரின் கேட் " பார்க்கிங்கில் நிறுத்த வேண்டும் எனவும் , சாவியினை என்னிடம் கொடுத்துவிட்டு , பத்து பதினைந்து நிமிடத்தில் நான் சொல்லும் ரூமிற்கு வந்தால் , சாவியினைத் தருவதாகவும் கூறி , ஒரு வழியாக சமாளித்தேன் . மானேஜரும் வந்தார் . எனது பைக் ரிப்பேர் எனவும் , அதனால் மெக்கானிக்கிடம் சொல்லியிருக்கிறேன் எனவும் , அவன் வந்து சாவி வாங்கிச் செல்வான் எனவும் கூறி சமாளிக்க , மானேஜருக்கு எவ்வித சந்தேகமும் வராமல் , காரியம் முடிந்தது .

நாலாவது நாளும் வந்தது , நானும் எனது சிங்கமும் இணையும் நாள் . இனம் புரியா மகிழ்ச்சியுடனும் , ஒரு வித கலக்கத்தோடும் மெக்கானிக்கிடம் சென்றேன் . வண்டி ரெடி என்றார் . "ஓட்டிப் பாருங்க , சார் " , என்று சொல்லி திருத்திக் கொண்டு , " யார் சார் , வண்டி எடுத்துட்டுப் போறது ? " , என்றார் . உடன் வந்த எனது நண்பனைக் கை காண்பித்தேன் . வண்டியினைப் பார்த்தேன் . எனது உயரத்திற்கு ஏற்றவாறும் , சிவந்த உடம்பும் , அதனை முழுதும் மறைத்தும் மறைக்காமலும் சுற்றப்பட்டிருந்த கறுப்புத் துணியும் , அன்று துடைத்து பளபளவென ஆக்கப்பட்டிருந்த சைலன்சரின் வெள்ளி உடம்புமாக எனது சிங்கம் காத்திருந்தது .

முதன் முதலாக எனது சிங்கத்தில் , நான் பின்னால் உட்கார்ந்து வர , பெரியார் பஸ் ஸ்டான்டில் இருந்து , ஹோட்டல் பாண்டியாஸ் வரை சென்றேன் . செல்லும் வழியிலெல்லாம் எனது நண்பன் எப்படி , எப்பொழுது கியர் மாற்றுகிறான் , எப்படி வண்டியினை கையாளுகிறான் என்றேல்லாம் கவனித்தே வந்தேன் . ஹோட்டல் பாண்டியாஸில் அவன் இறங்கிக் கொள்ள , வண்டி இப்பொழுது எனது கையில் !!! மனம் முழுதும் பயம் நிறைந்த குதூகலம் !! ஒரே கிக்கில் ஸ்டார்ட் ஆகிவிட , நிறைய ஆலோசித்து முதல் கியர் போட பின்னால் தான் கால் வைக்க வேண்டும் என கண்டுபிடித்து ,, சில நிமிடம் கழித்தே முதல் கியர் விழுந்து வண்டி முன்னால் செல்லத் தொடங்கியது .மீண்டும் சில பல ஆலோசனைகளுப்பால் இரண்டாவது கியரும் வெற்றிகரமாய் விழுந்து விட , வண்டியும் எனது மனமும் பறக்கத் தொடங்கியது . ஏதோ ஒரு கட்டத்தில் பிரேக் பிடிக்க , அத்துடன் நின்றது . பின்னர் மெக்கானிக் வந்து தான் ஸ்டார்ட் செய்ய வேண்டியிருந்தது .

முன்னரே அம்மாவிடம் வண்டி வாங்கப் போகிறேன் என்று சொல்லியிருந்ததினால் , நான் வீடு செல்லும் பொழுது , வாசலில் அம்மா , பாட்டி , இன்னும் சிலர் , அம்மா கையில் ஆரத்தித் தட்டு!!! நாளை தான் கிடைக்கும் என சொல்லி அனுப்பிவைத்தேன் . அடுத்த நாள் எவ்வித ஆரவாரமும் , ஆரத்தியும் இல்லாமலே சிங்கம் எனது வீட்டிற்கு வந்தது . ஒட்டி வந்த எனக்குத் தான் தெரியும் அதன் வலி !! காலையில் வேலையும் , மாலையில் வண்டி ஓட்டுதலுமாக நாட்கள் வாரங்கள் ஆயின . கல்யாணம் முடித்த புது மாப்பிள்ளை போல , நானும் வீட்டிற்கு சீக்கிரம் வரத் தொடங்கினேன் !!

வண்டி ஓட்ட நன்றாய் கற்றாகி விட்டது . கற்றாகிவிட்டது என கூறுவதினை விடவும் , அதன் சூட்சுமம் புரிபட தொடங்கியது என்று சொல்லுதல் சரியாய் இருக்கும் . அடுத்தாற் போல இருக்கும் மளிகைக் கடையினை விட்டு விட்டு , அடுத்த நகரில் இருக்கும் சூப்பர் மார்கெட்டில் இருந்து மளிகை வாங்கி வந்தேன் . அப்பொழுது எனது வீட்டில் தங்கியிருந்த நொட்ஸ் , காலேஜ் லீவ் சமயத்தில் மதுரை வந்த தாமோதரன் , பெங்களூரில் இருந்து லீவ்ற்கு மதுரை வந்த சிவா , பின்னர் காமராஜ் எல்லாரையும் பின்னாடி உட்கார வைத்து , என்னாலும் டபுள்ஸ் ஒட்ட முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் தான் அம்மாவை பின்னால் இருத்தி வைத்து பேங்க் வரை ஓட்டிச் சென்றேன் !!! அது ஒரு சுகானுபவம் . பயமோ அல்லது தற்காப்போ , அம்மா எனது தோள்பட்டையினை அழுந்தப் பிடித்தவாறே வர , எதோ ஒரு சாதனை நிகழ்த்திவிட்ட சந்தோசம் எனக்குள் !!! அம்மாவிற்கும் பையன் சொந்தமாக வண்டி வாங்கும் அளவிற்கு முன்னேறி?? விட்டானே என்ற பெருமிதம் இருந்திருக்க வேண்டும் !!!

வாரங்கள் மாதங்களாக , நானும் எனது சிங்கமும் ஒன்றாகிவிட்டோம் . ஆர்டர் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் வெறித்தனமாக ஒவர் ஸ்பீடில் ( எனது சிங்கத்தினைப் பொருந்த வரை ஐம்பது !!! ) செல்வது , கிடைக்காத விரக்தியில் மெதுவாக செல்வது , அப்பாவின் மேல் உள்ள கோபம் என எனது எல்லவற்றிலும் சிங்கம் கூட நின்று கொடுத்திருக்கிறது !!! தண்ணி அடித்துவிட்டு வண்டி ஒட்டும் சில நேரத்தில் , மக்கர் பண்ணி அதன் கோபத்தினையும் வெளிக்காட்டியிருக்கிறது !!

நான் எனது சிங்கத்தினை வாங்கிய விலைக்கிக் காட்டிலும் , அதனை பரமரிப்பத்ற்கு அதிகம் செலவாகிவிட்டிருந்த காலமாகியிருந்தது !!. வழக்கம் போல் , நண்பனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவிட்டு , திரும்புகையில் மணி பத்தேமுக்கால் . திடீரென்று சந்திரமுகி படத்திற்கு செல்லலாம் என்று வண்டியினைத் திருப்பினேன் . எதிர்பாராவிதமாக ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பாரலைக் கவனிக்காமல் விட , டமால் என்ற சத்தத்துடன் நானும் எனது சிங்கமும் சிதறினோம் !! சேலம் செல்லும் நெடுஞ்சாலை அது . இன்னும் இவ்வுலகத்தில் வாழவேண்டிய விதி இருப்பதினால் , நான் சில சிராப்புகளுடனும் , எனது சிங்கம் முன்சக்கரம் மடிந்தும் விழுந்தது . உருட்டிச் செல்லக் கூட வழியில்லை . நடுத்தரக்காரனின் மாதக்கடைசி அது . அதனால் சரிபார்க்க முடியாமலே இரு வாரம் சிங்கம் , வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருந்தது !! அந்த இரு வாரங்களில் நான் செய்த ஆட்டோ மற்றும் பஸ் பயணங்களும் , அதற்கான காத்திருப்பும் , சிங்கத்தின் இன்றியமையாமையினை உணரச் செய்தது !!

பின்னர் , பெங்களுரில் இருந்த இரண்டு மாதங்களும் , சிங்கம் என்னுடன் இல்லை . சென்னையில் வேலை . சில நாட்கள் கழித்து , நானும் எனது சிங்கமுமாய் , மதுரை எக்ஸ்பிரஸில் புறப்பட்டோம் . சென்னை மாநகர தெருக்களில் நானும் எனது சிங்கமும் !!! நண்பர்களின் ஓட்டுதல்களூடே , சிங்கம் சென்னை மாநகரில் உலா வரத் தொடங்கியது !!! மவுண்ட் ரோட்டிலும் , ஜெமினி மேம்பாலத்திலும் சிங்கத்தோடு முதன்முதலில் சென்றது இன்னமும் ஞாபகம் இருக்கிறது !! வரலாற்றுச் சாதனை அது .

இந்த நாட்களில் தான் , ’அல்ஜைமர்ஸ்’ வந்தாலோலிய மறக்காத சில ஞாபகங்கள் !! நானும் சுந்தரபாண்டியனும் மழையில் , அபிராமி தியேட்டர் அருகில் மாட்டியது!! அதுவரை எனது சிங்கம் சிரத்தையாக என்னையும் , சுந்தரையும் மவுண்ட்டிலிருந்து கொண்டுவந்திருந்தது , அதன் பிறகு நகலவேயில்லை !! , நானும் கூவமும் மழையில் மாட்டி , எனது சிங்கத்தினை ஒரு பெட்ரோல் பங்கில் நிப்பாட்டி , ஆட்டோவில் அயனாவரம் வந்தது , கரும்புகையினூடே நானும் வெண்மணியும் சிக்னலில் காத்திருந்தது , அதிகாலை வந்த சிவாவை மெரீனா அழைத்துச் சென்றது ....... போன்ற சில மறக்கக் கூடா ஞாபகங்கள் !!!

விரக்தியோ , வேதனையோ அல்லது போதை தந்த சுகமோ தெரியவில்லை !! யூ ஏ ஈ விசா கிடைத்த பின்னரும் , தினமும் தண்ணியடித்து விட்டு , வரும் பழக்கம் தோன்றியிருந்த நேரமது . ஆனாலும் ஒரு தடவை கூட , சிங்கம் என்னைக் கைவிடவில்லை !! எப்படி எந்த ரூட்டில் வந்தேன் எனத் தெரியாமலே , ரூம் வந்திருக்கிறேன் !!

யூ ஏ ஈ கிளம்புவதற்கு , முந்தைய நாள் , கூவத்தினை அவனது ஆபிஸில் இருந்து , விருகம்பாக்கம் கொண்டு வந்தது தான் நான் எனது சிங்கத்தில் சென்ற கடைசி சவாரி!! அது எனக்கும் தெரிந்திருந்தது !! மழைக்கால இரவில் , எவ்வித நிறுத்தலோ , தாமதமோ இல்லமலே ரூம் வந்து சேர்ந்தோம் !!ஆனாலும் எனக்குள் , ஒருவித தயக்கம் . சிங்கத்தில் நான் செய்யும் கடைசி சவாரியில் நான் மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்து , "ஸ்ப்ரைட் " வாங்கி வருவதாக கூறிவிட்டு , கொட்டும் மழையில் போரூர் வரை சென்று திரும்பினேன் !! இந்த முறை மகிழ்ச்சியாய் ரூமிற்கு வந்தேன் . அதனைப் பற்றி இப்பொழுது நினைக்கும் வேளையிலும் , அதே உற்சாகம் ஒட்டிக்கொள்கிறது !!

இனி ஒரு தடவை எனது சிங்கத்தினை பார்ப்பேனா என்று தெரியவில்லை!! பார்த்தாலும் பழையது போல் , நானும் எனது சிங்கமும் இருப்போமா என்றும் தெரியவில்லை !! ( எல்லாம் தெரிந்துவிட்டால் , வாழ்க்கை அர்த்தமில்லாததாகிவிடும்!! ) . அஃறிணை பொருளின் மேலான எனது இந்த பற்றுதல் பைத்தியக்காரத்தனம் என்கிறான் இங்கிருக்கும் எனது நண்பன் !!! . எனது சிங்கம் அஃறிணை என்று யார் சொன்னது ??? அப்படியே இருந்தாலும் , பைத்தியக்காரணாகவே இருந்துவிட்டுப் போகிறேன் !!!

மீண்டும் வருகிறேன் !!!!